கண்ணனுக்கும் பலராமனுக்கும் எப்போதும் விளையாட்டுத்தான். கால் முளைத்துவிட்டதால், இப்போது யமுனைக் கரை வரை செல்லத் துவங்கினர். அங்கிருக்கும் மணல் திட்டுகளில் விளையாடத் துவங்கினால் அவர்களுக்குக் காலநேரம் போவதே தெரியவில்லை.
காலையில் சாப்பிட்டு விளையாடப்போன குழந்தைகள் உச்சி வேளைக்கும் வராததால், அவர்களை அழைத்துவர யசோதை ஆள்களை மாற்றி மாற்றி அனுப்பிக்கொண்டிருந்தாள். யார் அழைத்தால் என்ன, விளையாட்டு மும்முரத்தில் எதுவும் அவர்கள் செவியேறவில்லை. மனம் பொறாமல், ரோஹிணியே நேரில் சென்றாள்.
இரண்டு குழந்தைகளையும் உச்சி வேளையாயிட்டது. சாப்பிட வாங்க கண்மணிகளா என்று கூப்பிட..
அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் பெரியம்மா என்று கண்ணன் கெஞ்சினான். ஏற்கனவே பெரியம்மா செல்லம் மிகவும் அதிகம். சரி சீக்கிரம் வந்துடுங்க என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து யசோதையே கிளம்பிப் போனாள். அன்னை தங்களைத் தேடிக்கொண்டு ஆற்றங்கரைக்கே வந்ததைப் பார்த்து கண்ணனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
அவளோ, காலையில் சாப்பிட்டது. இப்ப பசிக்கலையா? சாப்பிட வாடா கண்ணா.. பலராமா நீயாவது அழைச்சிண்டு வரலாம்ல. அண்ணாதானே..
என்று குரல் தழைய அழைக்க, கண்ணனுக்கு தைரியம் வந்துவிட்டது.
அம்மா கொஞ்ச நேரம்மா என்று கெஞ்ச, அவள் விட்டாளில்லை.
ரொம்ப களைச்சுப்போய்ட்ட கண்ணா.. உடனே வா. சாப்பிட்டு கொஞ்சம் தூங்கலாம்.
அப்பா காத்துண்டிருக்கார். உன்னோட சேர்ந்து சாப்பிட. வாடா.
ம்ஹூம்..
கண்ணன் ஒன்றையும் காதில் வாங்கவில்லை.
இருங்கம்மா..
இன்னிக்கு உனக்கு பிறந்தநாள் வேற. உடம்பு முழுக்க மண்ணு. ஸ்நானம் பண்ணிட்டு உன் கையால கொஞ்சம் தானங்கள்ளாம் பண்ணணும். வாடா..
கண்ணன் நிமிர்ந்தான்.
அப்பன்னா அப்பிச்சி கிடைக்கும். அவனது எண்ண ஓட்டத்தை அறியாதவளா அன்னை.
உன் நண்பர்களையெல்லாம் பார். எல்லாரும் குளிச்சுட்டு அழகா அலங்காரம் பண்ணிருக்காங்க. நீதான் அழுக்கா இருக்க. பொண் குழந்தைகள்ளாம் கேலி பண்ணுவாங்க. வாடா.
இதை ஏன் நீங்க முதல்லயே சொல்லல? வாங்க போலாம். என்று அன்னை கையைப் பிடித்துக்கொண்டு கண்ணன் ஓட, அவனுக்கிணையாக பலராமனும் வீட்டை நோக்கி ஓட, யசோதையோ அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சிரைக்க வீடு வந்து சேர்ந்தாள்.
பின்னர் கண்ணனுக்கும் பலராமனுக்கும் மங்கல ஸ்நாணம் செய்வித்து, உணவு கொடுத்தாள். கண்ணனின் திருக்கரங்களால் பல தானங்களைச் செய்தார் நந்தன்.
பின்னர் ஊர்ப் பெரியவர்கள் எல்லாரும் கூடி அமர்ந்து ஆயர்பாடியின் நன்மை தீமைகள் பற்றி விவாதித்தனர்.
நந்தனின் மூத்த சகோதரரான உபநந்தர், பேசலானார். அவர் கண்ணனுக்கு மிகவும் பிரியமானவர்.
இங்கு குழந்தைகளுக்குத் தீமை விளைவிக்கும் செயல்கள் நிறைய நடக்கின்றன. இவ்விடம் நமக்கு ஏற்றதாக இல்லை. நாம் இங்கிருந்து வேறிடம் செல்லலாம் என்ற யோசனையை முன்வைத்தார். பின்னர், கோபர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எண்ணங்களைக் கூறத் துவங்கினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment