பரீக்ஷித் வினவினான்.
மஹரிஷீ! கோகுலத்து இடையர்களுக்குத் தான் பெற்ற புதல்வர்களிடம் கூட இதுவரை பெருகாத அன்பு கண்ணன் மீது எப்படி ஏற்பட்டது? இது மிகவும் விந்தையாக இருக்கிறதே என்றான்.
ஸ்ரீ சுகர் கூறலானார்.
எல்லோருக்கும் தன் ஆத்மாதான் மிகவும் பிரியமானது. மனைவி, மக்கள், செல்வம் ஆகியவை ஆத்மாவின் இன்பத்திற்குக் காரணம் என்று நினைப்பதால் அவர்களிடம் அன்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கு தன் ஆத்மாவிடம் உள்ள அன்பு தன்னைச் சார்ந்த மற்ற உறவு, செல்வங்களில் கிடையாது. உடலே ஆத்மா என்றெண்ணுபவர்க்கு உடல்தான் பிரியமானது.
ஆனால், உடல் நான் அல்ல. அது என்னைச் சார்ந்தது என்றாலும் அதன் மீதான அன்பு ஆத்மாவின் மீது உள்ளதைக் காட்டிலும் பெரிதல்ல. ஏனெனில் வயதானபின், உடல் தேய்ந்துகொண்டே போனாலும் உயிர் மீது ஆசை இருப்பதைப் பார்க்கிறோம். நோயினால் உடலின் ஒரு பகுதி அழுகினால், அதை மட்டும் நீக்கிவிட்டாவது உயிர் வாழ ஆசைப்படுகிறோம்.
நன்றாகத் தெரிந்துகொள். கண்ணன்தான் ஆத்மா. அவன்தான் அனைவர்க்குள்ளும் உறைபவன். ஆத்மாவே ஒரு உருவம் எடுத்து கண்ணனாகக் கண்முன் தோன்றும்போது, தன் மீது பிரியமுள்ள அதே பிரியம் கண்ணன் மீதும் வந்துவிடுகிறது.
இத்தகைய ஆத்ம இன்பத்தில் மூழ்குபவர்களுக்கு உலகியல் துன்பம் என்பதே இல்லை.
ப்ரும்மாவின் மயக்கம் தெளிந்த லீலை, பகவான் செய்த வனபோஜனம், லீலைகள், ப்ரும்மஸ்துதி இவையனைத்தையும் கேட்பவர்க்குப் பிறவிப்பிணி அகலும். நால்வகைப் புருஷார்த்தங்களையும் பெறுவர்
என்றார்.
ஆறு வயதானதும் கண்ணனுக்கும் பலராமனுக்கும் பசுக்களை மேய்க்கும் தகுதி வந்துவிட்டது.
ப்ருந்தாவனம் 14 உபவனங்களைக் கொண்டது. ஒவ்வொரு வனமும் விதம் விதமான நிறைய மரங்களையும் செடி கொடிகளையும் கொண்டது. கோபச் சிறுவர்களுடனும் பசுக்களுடனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வனத்திற்குச் சென்று விளையாடுவான் கண்ணன்.
ஒருநாள் வனத்தினுள் சென்றுகொண்டிருந்தபோது மான்களும் பறவைகளும் நிறைந்து, மஹான்களின் மனம் போல் தெளிந்த நீரும், அவற்றின் மேல் தாமரைகளும், ரீங்கரிக்கும் வண்டுகளும் உடைய ஒரு வனத்தைக் கண்டான். அதில் நுழைந்து விளையாட விரும்பினான்.
பழங்களின் சுமையால் தரையைத் தொடுமாறு வளைந்திருக்கும் கிளைகளைக் கண்ட கண்ட கண்ணன் பலராமனிடம் கூறினான்.
அண்ணா! பூவும் பழமும் கொண்டு தேவர்கள் வணங்குவதுபோல் இந்த மரங்கள் உங்கள் திருவடித் தாமரைகளை வணங்குகின்றன. நீங்கள் உங்கள் இறைத் தன்மையை மறைத்துக்கொண்டுள்ளீர்கள். ஒருக்கால் இந்த மரங்கள் முனிவர்களாக இருக்கலாமோ.
இந்த மயில்கள் தங்களைக் கண்டு மகிழ்ந்து ஆடுகின்றன.
இந்தப் பெண்மான்கள் கோபியர்களைப் போல் உம்மைக் கண்டதும் வெட்கமடைகின்றன. குயில்கள் இனிமையாகப் பாடுகின்றன.
தங்கள் திருவடி பட்டதால் இந்தப் புற்கள், புதர்கள் ஆகியவை பாக்யம் பெற்றன. உங்கள் தொடுகையால் மரங்களும் செடிகளும் புனிதமாயின.
என்றான்.
அனைத்துப் புகழும் கண்ணனுக்கே என்றாலும், தன்னை விட மூத்தவன் என்பதால் அனைத்துப் புகழையும் பலராமன் மீது ஏற்றிச் சொன்னான் கண்ணன். இது இன்றைய லீலை போலும் என்று எண்ணிய பலராமன் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment