நிலவைப்போல் கோபுர வாயிலிலிருந்து வெளிப்பட்ட கண்ணனைக் கண்டான் காலயவனன். அழகிய மஞ்சள் பட்டாடை, மேகவர்ணம் கொண்ட மேனி, கௌஸ்துபமணி, நான்கு கரங்களுடன், தாமரை மாலையணிந்து புன்சிரிப்பு தவழும் அழகிய திருமுகம்.
அழகே உருவான கண்ணனைக் கண்டு காலயவனன் அசந்துபோனான். பின்னர் இவன்தான் வாசுதேவன் என்று முடிவு செய்தான். நாரதர் கூறிய அடையாளங்களான, ஸ்ரீ வத்ஸம், நான்கு கைகள், தாமரைக் கண்கள், ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொண்டான். இவன் ஆயுதமின்றி வருவதால் நானும் ஆயுதமின்றி இவனுடன் போர் செய்வேன் என்று நிச்சயம் செய்துகொண்டான்.
வெளியில் வந்த கண்ணன், காலயவனன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக ஓடத் துவங்கினான். அதைச் சற்றும் எதிர்பாராத காலயவனன் கண்ணனின் பின்னால் ஓடினான். ஓடி அடையக்கூடிய பொருளா கண்ணன்?
அங்குமிங்கும் ஓடி போக்குக் காட்டினான். வெகுதூரம் ஓடியபின் ஒரு மலைமீது ஏறினான் கண்ணன். காலயவனன் அவனை நிழல் போல் தொடர்ந்தான்.
எவ்வளவு தொடர்ந்தபோதும் காலயவனனின் வினைப்பயன் முடிவுறாததால் கண்ணனைப் பிடிக்க இயலவில்லை. ஒருவரின் பாவமோ, புண்ணியமோ, வினைப்பயன் எப்போது முடிவுறுகிறதோ அப்போதுதான் இறைவனைப் பிடிக்க இயலும்.
தன்னைக் காலயவனன் பார்க்கிறானா என்று திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு அவனது கண்ணில் படும் தொலைவிலேயே ஓடினான் கண்ணன். அங்கிருந்த ஒரு மலைக் குகைக்குள் நுழைந்தான்.
குகைக்குள் நுழைந்ததும் ஒரே இருட்டு. கண்ணனைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த காலயவனனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தோராயமாக ஓடினான். குகையின் மையப்பகுதியில் ஒருவர் படுத்திருந்தார்.
இருட்டில் ஒன்றும் தெரியாததால் கண்ணன்தான் ஓடி வந்து படுத்துக் கொண்டான் என்றெண்ணிய காலயவனன் படுத்திருந்தவரை ஓங்கி ஒரு உதை விட்டான்.
ஓடிவந்து படுத்துக் கொண்டால் எனக்குத் தெரியாதா? நீதான் வாசுதேவன் என்பதை அறிவேன். தப்பிக்க இயலாது. எழுந்திரு. வா என்னுடன் போரிடு. என்று கத்தினான்.
படுத்திருந்தவர் விருட்டென்று எழுந்தார். காலயவனனைக் கண்டார். அக்கணமே காலயவனனின் உடல் தீப்பற்றி சாம்பலானான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment