ஜராசந்தன் பதினெட்டாவது முறையாக மதுராவின் மீது போர் தொடுத்து வந்தான். அதற்குள் காலயவனன் என்ற அசுரனைக் கண்ணன் தான் உனக்கேற்ற வீரன், அவனிடம் போய் சண்டையிடு என்று சொல்லி அனுப்பிவைத்தார் நாரதர்.
ஜராசந்தன் மதுராவை அடைவதற்கு முன் காலயவனன் வந்து தன் படையுடன் மதுராவை முற்றுகையிட்டான். தன்னை எதிர்க்க மனிதர்களே இல்லை என்றெண்ணியவன் கண்ணனைப் பற்றிக் கேள்வியுற்றதும் கிளம்பி வந்துவிட்டான்.
பதினேழு போர்களிலும் கண்ணன் வெற்றி பெற்றபோதிலும், ஒவ்வொரு முறையும் கோட்டை முற்றுகையிடப்படும் போது மதுரா நகர மக்கள் பெரும் கலக்கமுற்றனர். அடுத்தடுத்து போர் வந்துகொண்டே இருந்ததால் பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கண்ணன் தன் மக்களுக்க்கு நிம்மதியும் அமைதியான வாழ்க்கையும் தர விரும்பினான்.
பலராமனை அழைத்து கலந்தாலோசித்தான் கண்ணன்.
அண்ணா இன்று காலயவனன் முற்றுகையிட்டுள்ளான். ஜராசந்தன் ஏற்கனவே படையுடன் மகதத்திலிருந்து கிளம்பிவிட்டான். இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடுவான்.
காலயவனனுடன் நாம் போர் செய்யும் சமயம் ஜராசந்தன் வந்தால் நிலைமை மோசமாகும். எனவே நமது மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவனால் துன்பம் நேராதவாறு காக்க வேண்டும்.
மனிதர்கள் நெருங்க இயலாதவாறு ஒரு அணை அமைத்து மக்களை அங்கு கொண்டு சேர்த்தபின் காலயவனனிடம் யுத்தம் செய்யத் துவங்கலாம்.
பலராமனும் ஆமோதிக்க, உடனடியாக கடலின் நடுவே பன்னிரண்டு யோஜனை பரப்பளவில் ப்ரும்மாண்டமான நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
தேவசிற்பியான விஸ்வகர்மாவை வரவழைத்து ஆணை பிறப்பித்தான் கண்ணன்.
பகவான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான் விஸ்வகர்மா. தன் சிற்பத் திறமைகள் அத்தனையும் வெளிப்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தின்படி மிக அழகான ஒரு நகரத்தை கடலின் நடுவில் சில மணித் துளிகளில் அமைத்தான்.
தேரோடும் வீதிகள், அகலமான தெருக்கள், கற்பக மரங்களும் கொடிகளும் நிறைந்த தோட்டங்கள், வானளாவிய கோபுரங்கள், தங்கக் கலசங்கள் வைக்கப்பட்ட மாளிகைகள், தேவாலயங்கள், மரகதக் கற்களாலான தரைகள், ரத்தினங்கள் பதித்த தூண்கள், அரண்மனை, மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் அமையப்பெற்ற அற்புதமான ஒளிவீசும் நகரம்.
சுதர்மா என்ற தேவசபை தேவேந்திரனால் கண்ணனுக்காக அனுப்பப்பட்டது. இதில் அமர்ந்தால் பசி, தாகம், மயக்கம், கவலை ஆகிய எதுவும் பாதிக்காது.
வருணன் மனோவேகம் கொண்ட ஒரு காது மட்டும் கறுத்த வெள்ளைக் குதிரைகளை அனுப்பினான். குபேரன் எட்டு விதமான செல்வங்களையும் அனுப்பினான். அனைத்து லோகபாலர்களும் எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து புதிய நகரத்தில் கொட்டினர்.
நகரம் தயாரானதும், கண்ணன் தன் மக்களனைவரையும் தன் யோக சக்தியால் ஒரே கணத்தில் கொண்டு சேர்த்துவிட்டான்.
ஒன்றும் புரியாமல் இருந்த மக்கள், புதிய நகரத்தைக் கண்டதும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
மக்களைக் காக்கும் பொறுப்பை பலராமனிடம் ஒப்படைத்தான் கண்ணன்.
பின்னர் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு தாமரை மாலையணிந்துகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி மதுராவின் கோபுரவாயிலிலிருந்து வெளிக் கிளம்பினான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment