உத்தவர் மதுரா திரும்பினார். அவரைக் கண்டதுமே கண்ணன் அவருள் நிகழ்ந்த மாற்றத்தைக் கண்டு சிரித்தான். அந்தச் சிரிப்பிலேயே மோஹித்துப்போய் அப்படியே நின்றார்.
நினைவு வந்ததும் அழத் துவங்கினார். ப்ரேமையால் கண்களில் நீர் பெருகியது.
பின்னர் கண்ணன் அவரை அழைத்துச்சென்று அருகில் அமர்த்திக் கொண்டு ஆசுவாசப்படுத்தினான்.
உத்தவர் எப்போதும் கண்ணனிடம் ஒரு அடி தள்ளி நின்று கைகட்டி வாய்பொத்தித்தான் பேசுவார். அந்த மரியாதா பக்தி இப்போது ப்ரேமபக்தியாகியிருந்தது. கண்ணனின் சரணங்களைப் பிடித்துக்கொண்டு அழுதார். பின்னர் கோகுலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்.
அவர்களுக்கு ஞானத்தை போதிப்பதற்காகத்தான் நீங்கள் என்னை அனுப்புகிறீர்கள் என்றெண்ணினேன். மாறாக அவர்கள் தங்கள் மீதான அன்பை முழுவதுமாய் உணரச் செய்துவிட்டனர். என்று சொல்லி வ்ரஜம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினார்.
ஒவ்வொரு கோபியும் கண்ணனுக்காக நிறைய பரிசுகள் கொடுத்திருந்தார்கள். பக்ஷணங்கள், குண்டுமணி, மயில்பீலி, கைவேலைப்பாடுகள் செய்த உத்தரீயம் என்று ஒவ்வொன்றையும் கொடுத்தவர் பெயரை நினைவுபடுத்திக் கூறிக்கொண்டே கொடுத்தார் உத்தவர்.
இத்தகையோரை விட்டு நீங்கள் எப்படிப் பிரிந்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
கண்ணனோ, அவர்களை எப்போதும் நினைக்கிறேன் உத்தவா. மேலும் கர்மங்களை ஆற்றுவதற்காக என் உடல்தான் இங்கிருக்கிறதே தவிர உள்ளத்தால் நான் வ்ரஜத்தைவிட்டு நீங்கவேயில்லை.
என்றான்.
ப்ரேமபக்தர்களுக்காக இறைவனும் ஏங்குகிறான் என்பதை உத்தவர் புரிந்துகொண்டார்.
அப்போது முதல் கண்ணன் மதுராவிலும், துவாரகையிலும் இருந்த சமயங்களில் உத்தவர் கண்ணனை விட்டுக் கணநேரமும் பிரியவில்லை.
சில சமயங்களில் உத்தவரின் நண்பர்கள் கேட்பார்கள்.
நீ என்னதான் செய்கிறாய் கண்ணனின் தர்பாரில்?
ப்ருஹஸ்பதி சிஷ்யன் என்று பெயர். கண்ணன் எது சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டுகிறாய். அவன் இல்லை என்று மாற்றிச்சொன்னால் அதற்கும் தலையாட்டுகிறாய்? இப்படி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுவதற்கு உனக்கெதற்கு மந்திரி பதவியும் சம்பளமும்? என்பார்கள்.
உத்தவர் பொறுமையாகச் சொல்வார். கண்ணன் சொல்வதை மறுத்துப்பேசாமல் இருக்கத்தான் அறிவு வேண்டும்.
கண்ணன் சொல்வதை மறுத்தால் அவனுக்குத் தன் சொல்லை மெய்ப்பிக்க எவ்வளவு நேரமாகப் போகிறது? அவனுடையது ஸத்யவாக்கு. அதை மறுக்கலாகாது.
மேலும் கண்ணனின் கண்களிலிருந்து ஒரு அபரிமிதமான கருணை எந்நேரமும் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. நான் அவரோடு இல்லையெனில் அக்கருணை சுவர், நாற்காலி போன்றவற்றில் விழுந்து வீணாகும். நான் கண்ணனின் அருகிலேயே இருந்து அவனது கண்களில் வழியும் க்ருபாம்ருதத்தை வீணாக்காமல் அனுபவிக்கிறேன். என்பார்.
நாள்கள் ஓடின. ஒருநாள் மாடவீதியின் வழிச் செல்கையில் குப்ஜையின் வீட்டைக் கடந்தனர் கண்ணனும் உத்தவரும் கண்ணனுக்கு குப்ஜைக்கு அளித்த வாக்கு நினைவிற்கு வந்தது.
அதை நிறைவேற்ற விரும்பி அவள் வீட்டினுள் சென்றான் கண்ணன். அவளோ ஆச்சரியப்படவே இல்லை. ஏனெனில் தினந்தோறும் கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். எப்பொழுது வந்தாலும் கண்ணனை வரவேற்க அனைத்தும் தயாராக இருந்தன.
மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த வீடு.
ஆங்காங்கே முத்துச் சரங்கள், மேல்விதானங்கள், சுகமான ஆசனங்கள், நறுமணமிக்க தூபங்கள், தீபங்கள், மாலைகள் என கண்ணைக் கவரும் விதமாக அலங்கரிக்கப்படிருந்தது அவ்வீடு.
கண்ணனைக் கண்டதும் பரபரப்புடன் தன் தோழிகளுடன் ஓடிவந்து வரவேற்றாள். கண்ணனுக்கு உயர்ந்த ஆசனமளித்தாள். உத்தவருக்கும் ஆசனம் கொடுக்க அவர் அதைக் கையால் தொட்டுவிட்டுத் தரையில் அமர்ந்தார்.
அதன் பின் கண்ணன் அங்கு சற்று நேரம் தங்கி அவளை மகிழ்வித்தான். பின்னர் கிளம்பும் சமயத்தில் கண்ணனைப் பிரிய மனமின்றித் தவித்தாள் குப்ஜை.
மேற்கொண்டு வேலைகள் இருப்பதால் கிளம்பவேண்டும் என்று கூறிய கண்ணன் அவளுக்கு நிறைய வரங்களை அளித்தான்.
அதன் பின் உத்தவரும் கண்ணனும் பேசிக்கொண்டே திருமாளிகையை அடைந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment