Thursday, May 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 458

இதன் நடுவில் உத்தவர் அந்த கோபிகளை வணங்கினார். 

ஹே வண்டே! உன் வணக்கங்கள் எமக்கு வேண்டாம். எந்த சமாதான முயற்சியும் வேண்டாம். கண்ணனிடமிருந்து கிளம்பி வந்து அவனைப் போலவே இனிக்க இனிக்கப்‌பேசி அவன் பக்கம் சேரச்சொல்லும் உன்னை நன்கறிவேன். நாங்கள் ஏற்கனவே கண்ணனுக்காக உறவுகள் அனைத்தையும் விட்டு வந்தோம்.‌
எனில் எங்களது ஒரே பற்று கண்ணனே என்பது பொருள். 

இராமாவதாரத்தில் வாலியைக் கொன்றது, சூர்ப்பனகையை மூக்கறுத்தது, வாமனனாக வந்து பலியிடம் தானம் பெற்றது மூன்றையும் சொல்லி நிந்தை செய்கின்றனர். 

பின்னர் இந்தக் கறுப்பனை நம்பி ஏன் பழகுகிறீர்கள் என்று கேட்பாயானால், எங்களுக்கு வேறு வழியில்லை. உடல் வாக்கு மனம் ஆகிய மூன்றாலும் கண்ணனையே பற்றியிருக்கிறோம்‌. அவனைத்தவிர வேறொன்றும் பேச அறியோம்.

கண்ணனின் திருவிளையாடல்களில் மனத்தைப் பறிகொடுத்தவர்கள் அனைவரும் சுகம் துக்கம் போன்ற இரட்டைகளின் பாதிப்பிலிருந்து விடுபடுகின்றனர். அனைத்தையும் விட்டு பிக்ஷூக்களாகவும், பரமஹம்ஸர்களாகவும் திரிகின்றனர். 

ஞானிகளாயிருந்தபோதும் க்ருஷ்ணபக்தியை விடுவதில்லை. சதாசிவ ப்ரும்மேந்திராள் போன்ற பரமஹம்ஸர்கள்

மத சிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே
மஹனீய கபோல விஜித முகுரே - ப்ரும்மனி 
மானஸ ஸஞ்சரரே 

ஸ்ரீ ரமணிகுச துர்க விஹாரே
ஸேவகஜன மந்திர மந்தாரே
பரமஹம்ஸமுக சந்த்ர சகோரே
பரிபூரித முரளீரவதாரே

ஹே மனமே! ப்ரும்மத்தில் லயித்திடுவாய்.  ப்ரும்மம் என்பது யாதெனில் அது தலையில் பீலிவைத்துக்கொண்டிருக்கும். அதன் கன்னங்கள் கண்ணாடிபோலிருக்கும். மஹாலக்ஷ்மி்யுடன் விளங்கும். தன் பக்தர்களின் வீட்டில் சேவகம் செய்யும். என்னைப் போன்ற பரமஹம்ஸர்களின் முக தரிசனத்திற்காக சகோர பட்சியைப் போல் ஏங்கும். புல்லாங்குழலைக் கையில் வைத்துக்கொண்டு அலையும். என்று சொல்கிறார்கள்.

பற்றற்றவர்களின் ஒரே பற்று கண்ணனே. 

அவனது எண்ணம் அதிகமாக ஆக எங்களது விரஹமும் அவன் மீதுள்ள அன்பும் அதிகரிக்கிறது. எனவே வண்டே! நீ அவனைப் பற்றிப் பேசவேண்டாம்.

இவ்வாறு உத்தவரிடம் வண்டை முன்னிட்டுக்கொண்டு பேசிய கோபி, ஒருவாறாக சற்று தேற்றிக்கொண்டு,

நீங்கள் கண்ணனின் தோழர் என்பது உம்மைப் பார்த்தாலே தெரிகிறது. இங்கு எதற்காக வந்தீர்கள்? கண்ணன் ஏதாவது சொல்லியனுப்பினானா? எங்களை அவனிடம் அழைத்துப்போக வந்திருக்கிறீர்களா? கண்ணன் மதுரையில் இருக்கிறானா? எங்களையெல்லாம் நினைவு வைத்திருக்கிறானா? நந்தரையும் யசோதாம்மாவையுமாவது நினைவு கூர்கிறானா? எப்போதாவது இங்கு வருவானா? 

நறுமணம் பொருந்திய அவனது தாமரைக் கரங்களை எங்கள் தலைமேல் வைக்கட்டும். இல்லையேல், எங்கள் தலை விரஹத்தினால் வெடித்துவிடும்போலுள்ளது. என்றால் ஸஹஸ்ராரம் திறந்து முக்தியடைவோம். உயிரை விடுவோம் என்பதாகும்.

உத்தவர் அவர்களது பக்தியைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment