இந்த ரதத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று கோபிகள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது உத்தவர் எதேச்சையாக வாசலுக்கு வந்தார்.
முழங்கால் வரை நீண்ட கைகள், தாமரை போன்ற கண்கள், மஞ்சள் பட்டாடை, கழுத்தில் தாமரை மாலை, ரத்தினங்கள் பதித்த குண்டலங்கள், சட்டென்று பார்த்தால் அசப்பில் கண்ணன் போன்ற திருவுருவம்.
யாரடி இவர்?
கண்ணனைப் போல் இருக்கிறாரே.
அவனைப் போலவே அலங்காரங்கள்?
எங்கிருந்து வருகிறார்?
என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.
அதற்குள் கண்ணனைப் போல என்று சொன்னவளின் முதுகில் ஒரு அடி விழுந்தது.
கண்ணனைப் போல என்று இன்னொருவரை எப்படிச் சொல்லலாம் நீ?
கண்ணனைப் போல் கண்ணன் ஒருவனே. இவர் வேறு எவரோ.
கண்ணனைப் போல என்று சுலபமாக யாரையும் சொல்ல முடியாது தான். ஆனால் இவரைப் பார். அவரது பட்டாடை கண்ணனுடையது. அவரிடமிருந்து கண்ணனின் சுகந்தம் வீசுகிறது.
அவர் போட்டுக்கொண்டிருக்கும் மாலையைப் பார் அதில் சந்தன குங்குமங்கள் அப்பியிருக்கின்றான. அது கண்ணனின் மாலைதான்.
இவர் கண்ணனின் நண்பராக இருக்கவேண்டும். கண்ணனையே பார்த்து பார்த்து தியானம் செய்து கண்ணன் மயமாகவே ஆகியிருக்கிறார்.
எந்த தெய்வத்தை மனமொப்பி உபாசிக்கிறோமோ அந்த தெய்வத்தின் சாயல், இயல்புகள் அனைத்தும் பக்தருக்கு வந்துவிடும். சாரூப்யம் என்று பெயர்.
சில குரு பக்தர்கள் குருவை தியானம் செய்து செய்து தம் குருவைப் போலவே மாறிவிடுவார்கள். அவர்கள் வேண்டுமென்றே குருவைப்போல் நடிப்பதில்லை. இயல்பாகவே உபாசனா பலத்தால் குருவின் ஸாந்நித்யம் அவர்களிடம் வந்துவிடுவதால் அப்படித் தோன்றுகிறது.
இவர் நிச்சயம் கண்ணனின் நண்பர்தான். தூதுவராக கண்ணன் அனுப்பியிருக்கக்கூடும்.
வந்திருப்பது கண்ணனனல்ல என்பது உறுதியானதும் உத்தவரிடம் பேசத் தயங்கினர்.
மேலும் உத்தவரைப் பார்த்ததுமே கண்ணனின் நினைவு மேலிட்டு நிறைய கோபிகள் தன்னிலை மறந்து கண்ணன் புகழைப் பிதற்றத் துவங்கியிருந்தனர்.
சிலர் கண்ணனின் லீலைகளைப் பாடி அழத் துவங்கினர்.
அவர்களுள் ஒரு கோபி மற்றவர்களை அடக்கினாள்.
அருகிலிருந்த செடியில் மலர்ந்திருந்த மலரை ஒரு வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றி சுற்றி வந்தது.
வந்த மனிதரைப் பார்த்துப் பேசாமல் வண்டை நோக்கிப் பேசத் துவங்கினாள் அவள்.
காரணம், மூன்றாவது மனிதரிடம் நேரடியாகப் பேசும் வழக்கம் இல்லை.
அசோகவனத்தில் சிறையிருந்தபோது சீதையும் அன்ய புருஷன் என்பதால் ராவணனிடத்தில் நேரடியாகப் பேசாமல் ஒரு புல்லைக் கிள்ளிப்போட்டு அதைப் பார்த்துப்பேசினாள் என்பதை நினைவு கூர்வோம். நீ புல்லுக்கு சமமானவன் என்பதும் அங்கு மறை பொருளாகிறது.
இங்கு இவள் வண்டைப் பார்த்துப் பேசுவதும் கண்ணன் வண்டைப் போன்றவன் என்று உணர்த்தவே ஆகும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment