ஸ்ரீ சாந்தீபனி முனிவர் தன் முன் கைகட்டி நிற்கும் தெய்வக் குழந்தைகளைப் பரிவுடன் பார்த்தார். இருவரும் பகவான் என்று முழுமையாக அறிந்தபின்பும், அவர்களைச் சீடராக ஏற்று நடத்தவேண்டும் என்றால் அவர் எத்தகைய ஞானியாக இருக்கவேண்டும்?
இப்போதெல்லாம் பள்ளியானாலும் பல்கலைக் கழகமானாலும் ஒவ்வொரு துறையிலும் பயிற்றுவிக்க வெவ்வேறு ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு துறை ஆசிரியர் மற்றதுறைப் பாடங்களை நடத்தமாட்டார். அதற்கு அவருக்கு விரிவான அறிவும் இருக்காது.
ஆனால், இங்கு சாந்தீபனி ஒருவரே வேதங்கள், அஸ்திர சஸ்திர வித்தைகள், 64 கலைகள் அனைத்தையும் கற்பிக்கிறார். ஒவ்வொரு குருகுலத்திலும் அப்படியே.
64 கலைகளை 64 நாள்களில் கற்றவன் கண்ணன் என்றால் 64 நாள்களில் அவற்றைக் கற்பித்தவர் எத்தகையவர் என்று ஊகிக்கலாம்.
துரோணரும் அனைத்து வித்தைகளையும் அவரே பயிற்றுவித்தார் என்றறிகிறோம். வசிஷ்டரும் அவர் ஒருவரே அனைத்துக் கலைகளையும் போதித்தார் என்று ஸ்ரீ இராமாயணம் சொல்கிறது.
எனில், ஒவ்வொரு குருவும் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே விளங்கியிருக்கின்றனர்.
நான்கு புருஷார்த்தங்களையும் அள்ளித் தரவல்ல பரம்பொருளான கண்ணனிடம் என்ன தக்ஷிணை கேட்கமுடியும்?
கண்ணனுக்கு
குருவாகும் பாக்யம் கிடைத்ததே என்று மகிழ்ந்திருந்த அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை.
மனைவியைக் கேட்டார். குருபத்னி தயங்காமல் சொன்னாள்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன நம் மகனை மீட்டுத் தரவேண்டும்.
கடைசியாக அவன் தொலைந்த இடம் பிரபாஸ க்ஷேத்ரம் என்றறிந்த கண்ணன், கண்டிப்பாக மீட்டு வருவதாகச் சொல்லி பலராமனுடன் புறப்பட்டான்.
அவர்கள் சென்றதும் சாந்தீபனி மனைவியைக் கேட்டார். குரு தக்ஷிணையாக பொன், பொருள், பசுக்கள் ஆகியவற்றைக் கேட்டால் கொண்டுவருவார்கள். இறந்த மகனைக் கேட்டால் எப்படிக் கொண்டு வருவான்? என்று கேட்டார்
குருமாதா சொன்னாள்.
அவன் இறைவனல்லவா? அவனால் ஆகாததும் உண்டா?
அப்படியா? உனக்கெப்படித் தெரிந்தது?
கண்ணனைப் பற்றிக் கேள்வியுறாதார் யார்? மேலும் அவ்வப்போது இங்கே அவனது பிரபாவங்களைப் பார்த்திருக்கிறேனே.
மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது சாந்தீபனிக்கு. என்ன பார்த்தாய் நீ?
அவனிடம் எந்த வேலை சொன்னாலும் அதைக் கணத்தில் முடிப்பான். ஒரு நாள் பால் கறந்துகொண்டு வா என்று குடத்தைக் கொடுத்தனுப்பினேன்.
ம்ம்..
இவன் நேராக மாட்டுக்கொட்டிலுக்குச் சென்றான்.
ம்ம்..
அங்கே யாருமில்லையென்று உறுதிப்படுத்திக்கொண்டவுடன், என்ன செய்தான் தெரியுமா?
என்ன செய்தான்?
குடத்தைக் கீழே வைத்தான்.
பாத்திரம் தானே மாட்டின் காம்பின் கீழ் சென்றது.
மாடு தானே பொழிந்தது. பின்னர் குடம் இவனருகில் வந்துவிட்டது. பால்
குடத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
உனக்கெப்படித் தெரிந்தது?
இவ்வளவு சீக்கிரம் பால்கறந்து கொண்டுவந்தானே என்று சந்தேகம் வந்தது. மறுநாள் அவனறியாமல் ஒளிந்திருந்து பார்த்தேன். அன்று முதல் தினமும் அவனே பால் கறக்கிறான்.
இதுபோல் எந்த வேலையானாலும் அவனிடம் கொடுத்தால் போதும். அருகில் ஆளில்லையெனில் வேலை தானே நடக்கும். இவன் வேடிக்கை பார்ப்பான்.
இத்தனை நாள் இதையெல்லாம் தெரிந்துகொண்டு என்னிடம் ஏன் சொல்லவில்லை?
எனக்கு உங்களைத் தெரியாதா? நீங்கள் ஞானியாயிற்றே. நீங்கள் அறியாத விஷயம் உண்டா என்று வாளாவிருந்தேன்.
இறைவனென்று அறிந்தும் ஞானத்தையும் முக்தியையும் வேண்டாமல் மகனை வேண்டினாயா?
ஞானமும் முக்தியும் பகவானான அவன் குருமாதாவான என்னை அம்மா என்றழைத்தபோதே உறுதியாகிவிட்டது. தாயான என்னால் என் மகனை எப்படி மறக்கமுடியும்? எனவேதான் மகனைக் கேட்டேன். என்றாள்.
அவளது தாயுள்ளத்தையும் ஞானத்தையும் பார்த்து அசந்துபோனார் சாந்தீபனி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment