அன்றிரவு அருகிலிருந்த தோட்டத்தில் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட்டு, கோபர்களுடன் தங்கினான் கண்ணன்.
மறுநாள் காலை கண்ணன் நண்பர்களுடன் மதுரா நகரின் அழகைக் காணக் கிளம்பினான்.
ப்ரமிக்கவைக்கும் அழகுடன் திகழ்ந்தது மதுரா. ஸ்படிக கோபுரங்களும், தங்கத் தோரணங்களும், பித்தளையாலான தானியக் களஞ்சியங்களும், குதிரை லாயங்களும், பழத்தோட்டங்களும், பூந்தோட்டங்களும், வானளாவிய மாளிகைகளும், அழகிய உப்பரிகைகளும், நிரம்பிய அதிசய நகரம் மதுரா. தொழில் வாரியாக பணிமனைகள் இருந்தன. வீடுகளின் தூண்களும், மேடைகளும் ரத்தினங்களாலும், வைர வைடூர்யங்களாலும் இழைக்கப்பட்டவை.
ஆங்காங்கே மாடங்களில் புறாக்களும், கிளிகளும் அமர்ந்து இனிமையாகக் கூவிக் கொண்டிருந்தன. தேர்வீதிகள், கடைவீதிகள், மாடவீதிகள், நாற்சந்திகள், ஆகியவை பூமாலைகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அழகிய கோலங்கள் போடப்பட்டு, பூக்களும் அக்ஷதையும் வாரியிறைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தயிரும் சந்தனக் குழம்பும் தெளிக்கப்பட்டு, மாவிலைக்கொத்துகளும், தீப வரிசைகளும், வாழைத்தார்களுடன் கூடிய வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.
பட்டுத்துணி சுற்றிய பூரணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வைக்கப்பட்டிருந்தது.
கண்ணனும் பலராமனும் ராஜவீதியில் நுழைந்ததும் அவர்களைக் காண மக்கள் பெரும் ஆர்வமுடன் கூடினர். பெண்கள் ஓடிவந்து வாயிலில் நின்றனர். சிலர் உப்பரிகைகளில் நின்றனர்.
கண்ணனைக் காணும் ஆர்வத்தில் தாறுமாறாக ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டு ஓடிவந்தனர்.
பலர் பாதி உணவில் எழுந்து வந்தனர். குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே குழந்தையைக் கீழே விட்டுவிட்டு ஓடிவந்தனர்.
குட்டியானை போல் அழகுற நடந்து வந்த கண்ணன் ஒருவர் விடாமல் அனைவரையும் பார்த்து புன்முறுவலால் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
மேல் மாடங்களில் இருந்த மாதர்கள் அங்கிருந்து கண்ணன் மேல் பூக்களைத் தூவினர்.
ஆங்காங்கே அந்தணர்களும் மக்களும் பூர்ண கலசங்களையும் காணிக்கைகளையும் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தனர்.
இந்தக் கண்ணனைக் காண கோபியர்கள் என்ன தவம் செய்தனரோ என்று பேசிக்கொண்டனர்.
கண்ணனுடன் கோபச் சிறுவர்களும் வந்தனர்.
கண்ணனின் கண்கவர் அழகினாலும், தேஜஸினாலும் அவனது ஆடை அணிகலன்கள் பற்றி ஒருவரும் கவனிக்கவில்லை.
உடன் வந்த கோபச் சிறுவர்களோ, மூலக் கச்சம் கட்டிய வேட்டிகளும், அழுக்குத் துண்டுகளும், தலையில் ஒரு முண்டாசும் கையில் கோலுமாக வந்தனர். அவர்களுக்கு நகரத்து மக்களைப் பார்த்ததும் தங்களைக் குறித்து வெட்கம் ஏற்பட்டது.
கண்ணா! இவ்வூர் மக்கள் அனைவரும் மிகவும் அழகான ஆடை அணிகலன்களை அணிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஊரில் நாம் மிகவும் சாதாரண உடைகளுடன் சுற்றிக்கொண்டிருக்க வெட்கமாக இருக்கிறது என்றனர்.
கண்ணன், ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று கூறி மேலே நடந்தான். எதிரே..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment