கம்சனின் அரண்மனையிலிருந்து நேராக கோகுலம் வந்தார் நாரதர்.
கண்ணா! வசுதேவரின் புதல்வரே! எல்லோரிடத்தும் உறைபவரே! அனைத்துக்கும் சாட்சியானவரே!
தன்னைத்தானே ஆதாரமாகக்கொண்டு யார் உதவியுமின்றி மாயை எனும் சக்தியால் முக்குணங்களைப் படைத்தீர்கள். முக்குணங்களைக் கொண்டே உலகைப் படைத்துக் காத்து அழிக்கிறீர்.
அரசர்களாகப் பிறந்திருக்கும் அசுரர்களை அழித்து அறம் காக்க அவதரித்திருக்கிறீர்கள்.
குதிரை உருவில் வந்த அசுரனின் கனைப்பைக் கேட்டு தேவர்களும் அஞ்சி ஓடினர். நல்லவேளையாக அவனை அழித்து விட்டீர்கள்.
நாளை மறுநாள் சாணூரன், முஷ்டிகன், குவலயாபீடம் மற்ற மல்லர்களுடன் கம்சனையும் கொல்லப்போகிறீர்கள்.
அதைத் தொடர்ந்து காலயவனன் சங்காசுரன், முரன், நரகாசுரன் ஆகியோரும் தங்கள் கரங்களால் மடியப்போகிறார்கள். இந்திரனைத் தோற்கடித்து பாரிஜாதத்தைக் கொண்டுவருவீர்கள்.
தங்களின் திருமணங்களைக் காணப்போகிறேன். ஜாம்பவதியையும், ஸ்யமந்தக மணியையும் மீட்கப்போகிறீர்கள். பௌண்ட்ரக வதம், சிசுபால வதம், தந்தவக்த்ர வதம், ஆகியற்றை முடித்து த்வாரகாதீசனாக விளங்குவீர்கள். பின்னர் பூபாரத்தைக் குறைக்க, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி லட்சக்கணக்கான படைகளை அழிக்கப்போகிறீர்.
தூய்மையானவரும், ஞானமே வடிவானவரும், ஆனந்தத்தில் திளைப்பவருமான உம்மை சரணடைகிறேன். விளையாட்டாக மனித உருவெடுத்து வ்ருஷ்ணி குலத்தில் பிறந்துள்ள உமக்கு நமஸ்காரங்கள். என்றார்.
கண்ணன் கோகுலத்தில் அன்பால் கட்டுண்டதாக எண்ணிய நாரதர் ஒரு தனிச் செயலரைப்போல் அடுத்து பகவான் செய்யவேண்டிய காரியங்களை நினைவூட்டுகிறார்.
கண்ணனோ அனைத்தும் தெரியும் என்பதைப்போல் புன்னகைத்தான். நாரதர் கண்ணனை வலம் வந்து வணங்கி விடை பெற்றார்.
வீட்டுக்குச் சென்ற அக்ரூரருக்கு உறக்கமே வரவில்லை. கோகுலத்தில் பகவான் கண்ணனாக வளர்ந்து வருவதை அறிவார் அவர். தினமும் இடைச் சேரியிலிருந்து பால், தயிர், வெண்ணெய் என்று விற்க வரும் பெண்களை அழைத்து முழுப் பானையையும் பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வார். அவர்களிடம் பேச்சுக் கொடுப்பார்.
இடைப் பெண்கள் வாயைத் திறந்தால் கண்ணனைத் தவிர வேறென்ன பேசுவார்கள். அவர்களிடம் கண்ணன் செய்த லீலைகளை ஒன்று விடாமல் கேட்பார்.
இப்படியாக கண்ணனின் கதைகளைக் கேட்டு கேட்டு அவனை என்று காணப்போகிறோம் என்று தவித்துக்கொண்டிருந்தார். இதோ இருக்கிறது இடைச்சேரி. மதுராவிற்கும் கோகுலத்திற்கும் சுமார் பதினைந்து மைல் தொலைவு தான். போய்ப் பார்த்துவிட்டு வரலாமே என்றால் அது முடியவில்லை. கம்சனின் ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். ஏதேனும் செய்தி சிறியதாகக் கசிந்தாலும் கம்சன் அக்ரூரரை முதலில் கொல்வான் அல்லது சிறையிலடைப்பான். கண்ணனுக்கும் ஆபத்து. தன்னால் கண்ணனுக்குத் தொந்தரவு வரக்கூடாதென்று அமைதியாய் இருந்தார்.
இப்போது கம்சனே போகச் சொல்கிறான்.
க்ருஷ்ண தரிசனத்திற்காக எவ்வளவு நாள்களாக ஏங்கிக் கொண்டிருந்தோம். போயும் போயும் இப்படியா நேரவேணும்?
போகாமல் இருக்கமுடியாது. போய் கம்சன் உன்னைக் கொல்வதற்காக அழைப்பு விடுத்திருக்கிறான் என்று சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் கண்ணன் அறிவான். அவன்தான் அந்தர்யாமியாயிற்றே.
என்ன நினைப்பான் நம்மைப் பற்றி?
ஒரு வகையில் கண்ணனுக்கு சிற்றப்பா உறவு.
கம்சனின் அமைச்சர் என்று பார்ப்பானா?
தன்னைக் கொல்ல அழைத்துப்போக வந்த எமதூதன் என்பானோ? சிற்றப்பா என்று அன்புடன் அழைப்பானா?
அவன் இறைவனல்லவா? அவனுக்கு நமது எண்ணம் தெரியுமா? தெரியாதா?
அவன் முகத்தை எப்படிப் பார்ப்பது?
நம்மைத் தவறாக எண்ணினால் அதைவிட துர்பாக்யம் உண்டா?
எண்ணங்கள் முன்னும் பின்னுமாக அக்ருரரை அலைக்கழிக்க, இரவு கழிந்து விடிவெள்ளி முளைத்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
No comments:
Post a Comment