Sunday, April 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 429

பகவான் கண்ணன் மதுராவில் பிறந்து கோகுலம் வந்தபின்பு இங்கே ஆயர்களின் அன்பில் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்தார் நாரதர். பகவானுடைய  அவதார நோக்கம் காத்துக் கிடந்தது. அது நிறைவேற வேகப்படுத்தும் பொருட்டு கம்சனைப் பார்க்கச் சென்றார்.

இந்திரன், ப்ரும்மா, ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் யாராயினும் அவர்தம் சபையில் தயங்காமல் நுழையும் தகுதி பெற்றவர் நாரதர் ஒருவரே. எல்லா சபைகளிலும் அவருக்கு வரவேற்புதான். தேவரோ, அசுரரோ எவராயினும் நாரதரைத் தமக்கு நன்மை செய்பவராகவே கருதுவர். ஆனால், அவரது குறிக்கோள் யாதெனின் உலக நன்மையும், இறைவனின் செயல்களுக்குத் துணையிருப்பதுமே ஆகும்.

கம்சனிடம்‌ சென்ற நாரதர் பின்வருமாறு கூறினார்.

கம்சா! தேவகிக்கு எட்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை யசோதையினுடையதுதான். ரோஹிணியின் மகன் ராமன் உண்மையில் தேவகியின் ஏழாவது மகன். எட்டாவது மகன் யசோதையின் மகனாக வளர்ந்து வரும் க்ருஷ்ணன். வசுதேவர் தன் நண்பரான நந்தரிடம் தன் மகன்களைக் கொடுத்து வளர்க்கச் சொல்லியிருக்கிறார். அந்தப் பையன்கள்தான் நீ‌ அனுப்பிய அத்தனை வீரர்களையும்‌ கொன்றிருக்கிறார்கள் என்று தேவலோகத்தில் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்டதும் நேராக உன்னிடம் தெரிவிக்க வந்தேன் என்றார்.

அதைக் கேட்ட கம்சனின் உள்ளம் கோபத்தால் துடித்தது. பூமியை வேகமாக  உதைத்துக்கொண்டு எழுந்தான்.

உடனடியாக வசுதேவரைக் கொல்ல கத்தியை உருவிக்கொண்டு கிளம்பினான்.

நாரதர் தடுத்தார்.

சற்றுப் பொறு கம்சா! வசுதேவரும் தேவகியும்  இங்கேதானே இருக்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது நேரமல்ல. மேலும் உனக்கு யமன் இவர்களில்லை. நீ க்ருஷ்ணனையும் பலராமனையும் என்ன செய்யலாம் என்று யோசி. நேரத்தை வீணடிக்காமல் ஆகவேண்டியதைப் பார் என்றார்.

நாரதர் சொன்னது நியாயமாகப் பட்டது கம்சனுக்கு. கத்தியை உறையிலிட்டான். இருப்பினும் ஆத்திரம் அடங்கவில்லை. தேவகியையும் வசுதேவரையும் பாதாளச் சிறையில் அடைத்தான். 

நாரதர் கிளம்பியதும் கேசி என்ற அசுரனை அழைத்து கண்ணனைக் கொன்று வரும்படி அனுப்பினான்.

கேசியால் கண்ணனைக் கொல்லமுடியாது என்று அவனுக்குத் தெரியும் போலும். எனவே, அடுத்த ஏற்பாடுகளை யோசிக்கலானான்.

முஷ்டிகன், சாணூரன், சலன், தோசலன், முதலான அமைச்சர்களை அழைத்துப் பேசினான். 

வசுதேவரின் எட்டாவது மகனால் எனக்கு ஆபத்து என்று தெரியுமல்லவா? அவர்கள் நந்தகோகுலத்தில் வளர்கிறார்களாம்.

அவர்களைக் கொல்லும் உபாயங்களை யோசிக்கவேண்டும். ஒரு பெரிய மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். போர் முறைப்படி வரும் சதுர்தசியன்று  தனுர்யாகத்தைத் துவங்குவோம். அப்போது யாருக்கும்‌ சந்தேகம் வராத வண்ணம் ஊரே விழாக்கோலம் பூணட்டும். மல்யுத்ததிற்கான மேடையை அமையுங்கள். 

யானைப் பாகர்களை யானைகளைத்  தயாராக வைக்கச் சொல்லுங்கள்.
குவலயாபீடத்திற்கு நன்றாக மதம் ஏற்றி மல்யுத்த அரங்கின் வாசலில் நிறுத்துங்கள்.

எல்லாம்‌ சரி அரசே. கண்ணன் இங்கு வருவானா?

வருவான். அதற்கும் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போகலாம் என்றான். 

அன்றிரவு சூழ்ந்ததும், அக்ரூரரை அழைத்து வர ஆளனுப்பினான் கம்சன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment