பலராமனின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நாற்புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் நண்பர்களுடன் கேலி பேசிக்கொண்டும், அப்படியே தன்னை ஆர்வமுடன் தரிசிக்க வருபவர்களையும், வணங்குபவர்களையும் ஓரக்கண்ணால் கடாக்ஷித்துக் கொண்டே சற்று நிதானமாக நடந்தான் கண்ணன்.
அப்போது
சுதாமா என்ற பூக்காரன் வந்து கண்ணனை வணங்கினான்.
நறுமணம் மிக்க பூக்களைக் கண்ணனின் தாமரைப் பாதங்களில் போட்டுவிட்டு கீழே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் அவனைக் கருணை பொங்கப் பார்த்தான் கண்ணன்.
எழும்பியதும், கண்ணனைத் தன் கடைக்குள் அழைத்தான் சுதாமா.
மகிழ்ச்சியுடன் அவனது கடைக்குள் சென்றான் கண்ணன். கண்ணனுக்கும் அவனது அண்ணனுக்கும் மற்ற தோழர்களுக்கும் ஆசனம் அளித்தான் சுதாமா. பின்னர் நீர், பூமாலைகள், தாம்பூலம், சந்தனம் ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தான்.
ப்ரபோ!
தங்கள் வரவால் என் பிறப்பும், குலமும் புனிதமாயிற்று. நான் மூவகைக் கடன்களிலிருந்தும் விடுபட்டேன்.
மூல காரணப்பொருளான நீங்கள் ஞானம், பலம், ஐச்வர்யம் ஆகியவற்றை ஏற்று அவதாரம் செய்திருக்கிறீர்கள். உயிரினங்களிடத்து சமநோக்குள்ளவர்கள். தங்களுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பேதமில்லை. உங்களிடம் எதை அர்ப்பணம் செய்கிறோமோ அது பன்மடங்கு வளரும்.
நான் தங்கள் சேவகன். உங்களுக்கு என்ன பணிவிடை செய்யட்டும்? என்றான்.
கண்ணனின் பார்வை வந்ததிலிருந்து அங்கு தொங்கிக்கொண்டிருந்த மாலைகளின் மீதே இருந்தது. அதை உணர்ந்த சுதாமா சுகந்தம் நிறைந்த புதிய பூக்களை எடுத்து அழகிய மாலை தொடுத்து கண்ணனையும் பலராமனையும் அலங்காரம் செய்தான்.
கண்ணன் என்ன வரம் வேண்டும் என்று கேட்க,
அவன் கண்ணனிடத்து அசையாத பக்தியும் அனைத்து உயிர்களிடத்தும் பரிவும் வேண்டுமெனக் கேட்டான். எத்தகைய உயர்ந்த வரம்?
அதனால் கண்ணன் மிகவும் மகிழ்ந்து போனான். சுதாமாவிற்கு வாழையடி வாழையாக வம்சம் முழுவதும் தழைக்க செல்வம், வலிமை, ஆயுள், புகழ், மற்றும் தேஜஸ் அனைத்தையும் கொடுத்து இறுதியில் முக்தியும் கிட்டுமென வரமளித்தான்.
என்றோ ஒரு நாள் மாலை சாற்றியவனுக்கே இவ்வளவும் கொடுத்தான் என்றால், தினம் தினம் கண்ணனைப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து ஆராதனை செய்யும் பக்தர்க்கு என்னதான் தரமாட்டான்.
கஜேந்திரன் 'பூரி கருணாய' என்றழைக்கிறான். பகவானுக்குக் கொஞ்சமாகக் கொடுக்கவே தெரியாது. கேட்பவரின் தகுதி பற்றிய கேள்வியே இல்லை. கண்ணன் தன் தகுதிக்கேற்ப வாரி வழங்கக்கூடியவன்.
அழகான மலர்க் கிரீடங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ராம க்ருஷ்ணர்கள் மீண்டும் நகர்வலம் கிளம்பினர். கண்ணனின் தோழர்களுக்கும் ஆளுக்கொரு மலர்மாலையைச் சூட்டி அனுப்பினான் சுதாமா.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment