ராதையைக் கண்ணன் தனியாக அழைத்துச் சென்றபோதும், அவள் வேண்டுமென்றே எதையோ செய்து பிரிந்து வந்துவிட்டாள். காரணம், தன் தோழிகள் கண்ணனின் பிரிவால் தவிக்கும்போது, தான் மட்டும் தனித்து இறையுடன் இணைய விருப்பமில்லை. கூடியிருந்து குளிர்வதிலேயே ஆனந்தம் அவளுக்கு.
இதே காரணத்தினால் அல்லவோ ப்ரஹலாதன் இன்னமும் வைகுண்டம் செல்லாமல் தனித்துத் தவம் செய்துகொண்டிருக்கிறான்.
தன் தோழிகளுக்குக் கண்ணனை அடையும் வழியை ராதையே காட்டுகிறாள்.
அனைவரும் சேர்ந்து யமுனைத் திட்டிற்கு வந்தனர். தானே மறைந்துகொள்பவன் தானே வெளிப்பட்டால்தான் உண்டு. தேடி அடையும் பொருளா கண்ணன்?
மறைந்திருப்பவனை வெளிக்கொணர, ஒரே ஒரு உபாயம்தான் உண்டு. அது அவன் பெயரையும் புகழையும் பாடுவது.
யமுனையின் கரையில் அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டு, உரத்த குரலில் கண்ணனின் புகழை அழுதுகொண்டே பாடத் துவங்கினர்.
இந்தப் பாடல் கோபிகா கீதம் எனப்படுகிறது. ஸம்பிரதாய பஜனையில் மிக முக்கியமான அங்கத்தை வகிக்கிறது.
18 ச்லோகங்களைக் கொண்டது.
18 என்ற எண் வெற்றிக்கான எண்ணாக எண்ணியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீ மத் பாகவதம் நிச்சயமாக மோக்ஷத்தைப் பெற்றுத் தரும் புராணம் என்பதாக அதில் 18000 ஸ்லோகங்கள் உள்ளன. ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஜயம் என்ற பெயரும் உண்டு.
மஹாபாரதப் போரில் தர்மம் வெல்லும் என்பதாக 18 நாள்கள் போரை நடத்தினான் கண்ணன்.
இந்த கோபிகா கீதத்தை ஜபம் செய்துவர கண்ணனின் தரிசனம் நிச்சயம்க கிட்டும் என்பதன் அடையாளமாக 18 ஸ்லோகங்களில் அமைந்துள்ளது.
முதல் ஸ்லோகம் ஜயதி என்ற சொல்லுடன் துவங்குகிறது.
கண்ணா! நீ இந்த கோகுலத்தில் பிறந்திருப்பதாலேயே மஹாலக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள். அதனால், இந்த கோகுலம் இந்திர லோகத்தை விடவும் மேலானதாக விளங்குகிறது.
உம்மிடம் உயிரை வைத்த நாங்கள் நான்கு திசைகளிலும் உன்னையே தேடுகிறோம்.
கண்ணா! ஆயுதங்களால் செய்வது மட்டும்தான் கொலை என்று எண்ணுகிறாயா? சரத்காலத்தில் மலர்ந்த தாமரையிதழை விஞ்சும் அழகுடைய கண்களால் எங்களைக் கொல்லுகிறாயே. இது கொலையில்லையா? நாங்கள் உந்தன் அடிமைகள் ஆவோம். எங்களை இப்படி சித்ரவதை செய்யலாமா?
யமுனையின் விஷநீர், மலைப்பாம்பினால் வந்த துன்பம், பெருமழையால் வந்த விபரீதம், காட்டுத்தீ, மற்றும் பல அசுரர்களிடமிருந்து எங்களைக் காத்தாயே.
யசோதையின் புதல்வனான நீ, ப்ரபஞ்சத்தின் அனைத்து பொருள் மற்றும் ஜீவன்களிலும் உள்ளிருந்து ஒளிவீசும் ஆத்மா என்பதை நாங்கள் நன்கறிவோம். உலகைக் காப்பதற்காக நீ யதுகுலத்தில் பிறந்திருக்கிறாய்.
மஹாலக்ஷ்மியின் கரம் பற்றிய, ஸம்ஸார பயம் போக்கும் தாமரை போன்ற உன் அபயக் கரத்தை எங்கள் தலை மீது வைத்து எங்களுக்கு அருள் செய்வாயாக.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment