கண்ணனைக் காணாமல் தவித்த கோபியரின் எண்ணம் முழுவதும் கண்ணனே. அவனது நடை, சிரிப்பு, கண்களைச் சுழற்றிப் பார்க்கும் பார்வை ஆகியவற்றையே எண்ணிக்கொண்டு கண்ணனைப் போலவே செய்யத் துவங்கினர்.
நான்தான் கண்ணன் நான்தான் கண்ணன் என்று அவனுடைய லீலைகளைச் செய்தனர். அவன் புகழைப் பாடினர். ப்ருந்தாவனத்திலுள்ள எல்லாக் காடுகளிலும் கண்ணனைத் தேடி அலைந்தனர்.
கண்ணனைப் பற்றி மரங்களிடம் கொடிகளிடமும் கேட்டனர்.
அரச மரமே! கண்ணனைப் பார்த்தாயா? ஆல மரமே! கண்ணன் இவ்வழிச் சென்றானா? இவ்வாறு சிரிப்பானே. என்று சிரித்துக் காட்டி அவனைக் கண்டாயா என்று ஒவ்வொரு மரமாகக் கேட்டுக்கொண்டு அலைந்தனர்.
மருதோன்றி, நாகமரம், புன்னை மரம், சம்பக மரம் ஒன்றையும் விடவில்லை.
சிறிது தூரத்தில் துளசி வனம் இருந்தது. அங்கு சென்று துளசியை வழிபட்டு
நீ இருக்கும் இடத்தில் கண்ணன் இருப்பான் அன்றோ துளசி மாதாவே? அவனைப் பார்த்தாயா? என்று கேட்டானர்.
மல்லிகை, ஜாதி, பிச்சி, மாலதி ஆகிய செடி கொடிகளிடம் உங்களைத் தடவிக்கொண்டே இவ்வழிச் சென்றானா? கண்ணனின் கரம் உங்கள் மேல் பட்டதா? என்று வினவினர்.
ரஸாலமரம், மா, முரள், பலா, வேங்கை, மலையகத்தி, நாவல், எருக்கு, வில்வம், மகிழம், கடம்பு, பெருங்கடம்பு ஆகிய ஒரு மரத்தையும் விடவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே வாழும் மரங்களே! கண்ணன் சென்ற பாதையைக் காட்டி உதவுங்கள் என்று மன்றாடினர்.
பூமாதேவியை வணங்கிக் கேட்டனர்.
அம்மா! நீ செய்த தவமென்ன? கண்ணனின் திருவடிகள் பட்டதாலன்றோ புல்லரித்துப்போய்ப் பூத்துக் குலுங்குகிறாய்?
அதுமட்டுமா, திரிவிக்ரமனாக உன்னை அளந்தானே. வராகராக வந்தபோது அவனை அணைத்தாயே. கண்ணன் எங்கே என்று உனக்குத் தெரியாமல் போகுமா? எங்களுக்குக் கூறலாகாதா?
கண்ணனின் நறுமணம், வனமாலையின் சுகந்தம், சந்தனப்பூச்சின் வாசம் அனைத்தும் இவ்வழியில் உணர்கிறோமே. கண்ணன் இவ்வழிச் சென்றானா? என்று வழியில் நின்ற மானைக் கேட்டனர்.
இவ்வாறு புலம்பிக்கொண்டே கண்ணனின் லீலைகளை மறுபடி செய்யலானார்கள்.
ஒருத்தி பூதனையானாள். மற்றொருத்தி அவளைக் கொல்ல வந்தாள். சகடாசுரன் போல் நடித்தவளை ஒருத்தி காலால் உதைத்தாள்.
குழந்தைபோல் உட்கார்ந்திருந்தவளை த்ருணாவர்த்தன் போல் ஒருத்தி தூக்கிச் சென்றாள்.
ஒருத்தி கண்ணனைப் போல் தவழ்ந்தாள்.
சிலர் மாடுகளைப்போல் நிற்க, கண்ணனாக ஒருத்தி அவர்களை ஓட்டிச் சென்றாள்.
ஒருத்தி கண்ணனைப்போல் நடந்துகாட்டினாள்.
ஒருத்தி காற்றையும் மழையையும் கண்டு பயப்படாதீர்கள். உங்களை நான் காப்பேன் என்று மேலாடையை உயர்த்திப் பிடித்தாள்.
காளியனாக நின்ற ஒருத்தியின் தலை மேல் கண்ணனாக இன்னொருத்தி காலை வைத்துக்கொண்டு நின்றாள்.
ஒருத்தி தன்னை உரலில் கட்டினாற்போல் பயந்து நின்றாள்.
இவ்வாறு புலம்பிக் கொண்டும் நடித்துக்கொண்டும் தேடிச் சென்றவர்கள் ஒரு இடத்தில் கண்ணனின் காலடிகளைக் கண்டனர்.
அவற்றில் தாமரை, கொடி, வஜ்ராயுதம் முதலிய அச்சுகள் இருந்தன. எனவே அவை கண்ணனின் காலடிகள்தான் என்பது உறுதியாயிற்று.
அவற்றைப் பின்பற்றி ஒரு பெண்ணின் காலடிகளையும் கண்டனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment