குழலிசை கேட்டு ஓடிவந்த பெண்களைப் பார்த்து பகவான் கூறினான்.
வாருங்கள் வாருங்கள் பாக்யசாலிகளே!
இந்த இரவு வேளையில் இத்தனை பேரும் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களே. ஏதாவது காரணம் உண்டா? என்ன விஷயம்?
ஏற்கனவே காடு பயங்கரமானது. அதிலும் இரவில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடும். நீங்கள் இப்படி வரலாமா? எதுவாகினும் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள்.
உங்கள் வீட்டில் தேடமாட்டார்களா? முழு நிலவு வீசும் அழகில் காட்டை ரசித்தாயிற்று அல்லவா? இனியும் இங்கென்ன வேலை?
உங்கள் கணவருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பாலுக்காக அழுகின்றன. என்னிடம் உள்ள அன்பினால் வந்திருந்தால் மிகவும் நல்லது.
ஆனால், குடும்பத்தைக் குறைவின்றிக் காப்பதே உங்களது முதல் கடைமை. கணவரை விட்டு விட்டு இன்னொருவனைத் தேடி இப்படி இரவில் வருவது தகாது. அப்படி வந்தால் பாவம் வரும்.
என் லீலைகளைக் கேட்பதாலும், என்னைக் காண்பதாலும், என்னை தியானம் செய்வதாலும் பக்தி ஏற்படும். அருகில் இருக்கவேண்டும் என்பதில்லை. வீட்டுக்குக் கிளம்புங்கள்.
என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னான்.
கண்ணனின் பேச்சைக் கேட்ட கோபியர்கள் மனம் நொந்தனர். மிகுந்த துக்கம் ஏற்பட்டது. கண்களில் கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்துப் பேசத் துவங்கினர்.
கண்ணா! பற்றற்றவர்கே பிடிபடும் மாயோன் நீ. எங்களைக் கைவிட்டுவிடாதே. கடுஞ்சொல் கூறலாகாது. எதற்கும் கட்டுப்படாதவன் நீ. ஆதி புருஷனான நாராயணன் எப்படி தன்னை அண்டியவர்களைக் கைவிடமாட்டாரோ அவ்வாறே நீ எங்களைக் கைவிடலாகாது.
கணவருக்கும், குடும்பத்தாருக்கும் பணிவிடை செய்வதும், குழந்தைகளைப் பேணுவதும் எங்கள் கடைமைதான். அவர்கள் அனைவரும் இவ்வுடலின் உறவுகள். ஆனால், நீயோ ஆன்மாவின் உறவினன். மனித வாழ்வின் நோக்கமே உன்னை அடைவதுதானே. அதனால் அந்தச் சேவைகளை உயிரின் உறவான உனக்கே செய்கிறோம். தயவுசெய்து ஏற்றுக்கொள்.
கணவரும் மக்களும் எப்போதும் துன்பம் தருபவர்கள். மேலும் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் மாறக்கூடும். உண்மைப் பொருளான உன்னைக் காண்பவர்கள் உனக்கே சேவை செய்வர். அதுவே நிலைத்து வாழும் வழியாகும்.
வீடுகளிலிருந்த எங்கள் ஈடுபாடு அறவே ஒழிந்தது. எங்களால் எதிலும் ஈடுபட முடியவில்லை. இங்கே எப்படி வந்தோம் என்றே தெரியவில்லை. எவ்வாறு கோகுலம் செல்ல முடியும்?
எங்களின் அனைத்து விதமான தாபத்தையும் போக்கவல்லவன் நீ ஒருவனே. உமது பிரிவால், உள்ளத்தில் ஏற்படும் நெருப்பு எங்கள் உடலையும் அழித்துவிடும்.
மஹாலக்ஷ்மிக்கே உனது பாத சேவை சில நேரங்களில்தான் கிட்டும். ஆனால், காட்டுவாசியான எங்களிடம் அன்பு வைத்து நீ இங்கேயே இருக்கிறாய். எங்களுடைய பாக்யம் இது. இந்த ஆனந்தம் நிரந்தரமானது. இதை விடுத்து வேறொரு செயலை எப்படிச் செய்ய முடியும்?
எப்படி மஹாலக்ஷ்மியும், யோகிகளும் மற்ற பக்தர்களும் உனது சேவையை விரும்புகிறார்களோ அவ்வாறே நாங்களும் விரும்புகிறோம்.
உனது அழகிய பார்வை, புன்சிரிப்பு, முடிக்கற்றை அசையும் நெற்றி, ஒளி பொருந்திய திருமுகம், மோகிக்க வைக்கும் உன் திருமேனியழகு ஆகியவற்றிற்கு நாங்கள் அடிமைகள்.
உன்னைக் கண்டு பசுக்களும், விலங்குகளும் தம் நிலை மறக்கின்றன. பேதைப் பெண்களாகிய நாங்கள் எம்மாத்திரம்? உனது குழலிசையைக் கேட்டு உருகாதவர்கள் உயிரில்லாதவர்களே.
எங்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவித்தவன் நீதானே. இப்போது நீயே துன்பம் தரலாமா? உனது திருக்கரங்களை எங்கள் தலை மீது வைத்து ஆட்கொள்வாயாக.
என்று அழுதுகொண்டே கூறினார்கள்.
கோபிகளின் இந்த ஸ்துதி ப்ரணய கீதம் எனப்படுகிறது. பஞ்ச கீதங்களுள் இரண்டாவது கீதம் இது.
இதே போல் அந்தணர்களின் மனைவிகளுக்குக் கேட்கத் தெரியவில்லை. அவர்கள் ஏமாந்துபோய் வீட்டுக்குப் போய் விட்டனர். இப்போது பூரண சரணாகதி அடைந்த கோபியர்களைக் கண்ணன் என்ன செய்தான்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment