வேள்விக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தணர்களும் வரவழைக்கப்பட்டுவிட்டதால் அவர்களைக் கொண்டு உலக நன்மைக்காக சிறிய அளவில் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. வேள்வி முடிந்ததும் அனைவர்க்கும் தக்ஷிணைகளும் தானங்களும் வழங்கப்பட்டன.
இந்திர வேள்விக்காகச் சேர்த்த பொருள்களைக் கொண்டே அனைத்தும் செய்யப்பட்டன. அனைவரும் நன்கு அலங்கரித்துக்கொண்டு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அமர்ந்து கண்ணனின் லீலைகளைப் பாடிக்கொண்டு கோவர்தன மலையடிவாரத்தை அடைந்தனர்.
மலையின் முன்னால் பெரியதாக படையல் போடப்பட்டது. கோவர்தன மலையின் முன் குட்டி குட்டி மலைகள் போல் உணவுகள் பரத்தப்பட்டன. புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், ரொட்டிகள், லட்டுகள், முறுக்குகள், அப்பங்கள், திரட்டுப்பால், பாயசம், வடை, இன்னும் பல வகை இனிப்புகளும், சாதங்களும் படைக்கப்பட்டன.
அனைவர் மனத்திலும் ஒரு பெரிய சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. இந்திர வேள்வி என்று செய்யும்போது, அனைத்து உணவுகளும் அக்னி குண்டத்தில் படைக்கப்படும். இப்போது மலையின் முன் வைத்திருக்கிறோமே. இவ்வளவு உணவுகளும் என்னாகும்? என்பதுதான் அது.
அனைவரின் உள்ளும் உறையும் கண்ணனுக்கு அவர்களின் சந்தேகம் தெரியாதா? அவனே பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டான். நான் கோவர்தன மலை என்று சொல்லிக்கொண்டு அனைத்து உணவுகளையும் விழுங்கிவிட்டான்.
இப்போது சுவைக்காகவாவது ப்ரசாதம் மிஞ்சுமா என்று கவலை வந்துவிட்டது கோபர்களுக்கு.
வாயில் விரலைப் போட்டுக்கொண்டு நந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த கண்ணன்,
அப்பா! அதிசயம் பாருங்கள்! தெய்வமே காட்சி தருகிறது. இந்த மலையப்பனே நம்மை காத்தருள்கிறார். எல்லாரும் அவருக்கு நமஸ்காரம் செய்யலாம் என்று கூறிவிட்டு, முதலில் தான் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்செய்தான். கண்ணன் செய்வதைப் பார்த்து அத்தனை மக்களும் நமஸ்காரம் செய்தனர்.
பின்னர் அனைவரும் மலையை வலம் வந்தனர்.
வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் ஏறிக்கொள்ள, ஆண்கள் நடந்து சென்று மலையைச் சுற்றிவலம் வந்து வணங்கினர்.
பின்னர் கண்ணன் புகழைப் பாடிக்கொண்டு வீடு சென்றனர்.
அங்கே இந்திரலோகத்தில் தேவேந்திரன், கோகுலத்திலிருந்து விதம் விதமான உணவுகள் வரப்போகின்றன என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தான்.
ஏனெனில் ஸ்வர்கத்தில் உணவு என்பதே இல்லை. யாருக்கும் பசியும், உறக்கமும்கிடையாது. ஸ்வர்கத்தில் நுழையும் ஜீவனுக்கு உள்ளே வரும்போதே அவனது புண்யக் கணக்கிற்கேற்றபடி ஓரிரு துளிகள் அம்ருதத்தை வாயில் விடுவார்கள். அவ்வளவுதான். அந்த ஜீவனுக்கு ஸ்வர்கத்திலிருக்கும் வரை பசியும், உறக்கமும் கிடையாது. பசியுமில்லை, உறக்கமும் வராது என்றால் என்னவாகும்? பைத்தியம் பிடிக்காதா? எப்போதும் கேளிக்கைகளிலேயே பொழுதைக் கழிக்க இயலுமா என்ன?
மேலும் பூவுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்களில் சேகரித்த புண்யத்தின் பலன் ஸ்வர்கத்தில் மிகக்குறுகிய காலத்தில் கரைந்துவிடும்.
வேள்விகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்படும் உணவுதான் அக்னிபகவான் மூலமாக குறிப்பிட்ட தேவரைச் சென்றடையும். இப்போது இந்திரன் கோகுலத்திலிருந்து ருசியான உணவு வரப்போகிறதென்று காத்திருக்கிறான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment