கண்ணன் காளியனினை விடுவித்ததும், காளியன் கண்ணனை வணங்கிப் பேசத் துவங்கினான்.
நாங்கள் பிறவியிலேயே தமோ குணம் மிக்கவர்கள். கோபவெறி உள்ளவர்கள். பிறருக்குத் தீங்கிழைக்கும் இயல்புள்ளவர்கள். எங்கள் இயல்பை எங்களால் எளிதில் விட இயாலாதே. நான், எனது என்ற அபிமானத்தால் தவறு செய்கிறோம்.
முக்குணங்களின் கலவையாலேயே இவ்வுலகம் உம்மால் படைக்கப்பட்டுள்ளது.
உமது மாயையில் கட்டுண்டு கிடக்கும் எங்களுக்கு உண்மை அறிவு ஏது? எல்லாம் அறிந்த உலகின் தலைவரான தாங்கள் என்ன செய்தாலும் கட்டுப்படுகிறோம். மன்னிப்பதும், தண்டிப்பதும் தங்கள் விருப்பம்.
என்றான்.
கண்ணன் அவனைக் கருணையுடன் பார்த்தான்.
ஹே! சர்ப்பமே! நீ இனி இங்கு வசிக்கலாகாது. உன் இனத்தார், மற்றும் குடும்பங்களுடன் கடலுக்குப் போ. இங்குள்ள மக்களுக்கு இவ்வாற்று நீர் பயன்படட்டும்.
நான் உனக்கிட்ட கட்டளையையும், இந்த லீலையையும் காலை மாலை இரு வேளைகளிலும் நினைப்பவர்க்கு பாம்புகளிடம் பயம் கிடையாது. நான் விளையாடிய இம்மடுவில் நீராடி, உபவாசமிருந்து தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணம் செய்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
நீ கருடனுக்கு பயந்துதானே இங்கு வந்தாய். உன் தலைகளின் மீது என் பாதச் சுவடுகளைப் பதித்திருக்கிறேன். அவற்றிலுள்ள சின்னங்களைப் பார்த்தால் கருடன் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டான். நீ விரைவில் இங்கிருந்து புறப்படு.
என்று அருளினான்.
காளியனும் அவனது மனைவியரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
உயர்ந்த மாலைகள், ரத்தினங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றைக் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்தனர். பின்னர் கண்ணனை வலம் வந்து வணங்கிவிட்டுத் தன் மனைவி, சுற்றங்களுடன் தன் இருப்பிடமான ரமணகத் தீவிற்குப் புறப்பட்டான் காளியன். யமுனை நதி் விஷம் நீங்கி அமுதநீராய்ப் பாயலாயிற்று.
பரீக்ஷித் உடனே கேட்டான்.
மஹரிஷீ! காளியன் ரமணகத் தீவை விட்டு ஏன் வெளியேறினான்? கருடன் ஏன் அவனைத் தொந்தரவு செய்தான்? வேறெங்காவது செல்லாமல் இந்த மடுவிற்கு காளியன் வரக் காரணம் என்ன?
சபாஷ்! மிகவும் கவனமாகக் கேட்கிறாய் அரசனே! என்று மகிழ்வுடன் கூறிய ஸ்ரீ சுகர், தொடர்ந்தார்.
ரமணகத் தீவிற்கு உணவிற்காக கருடன் அடிக்கடி வருவான். திடீர் திடீரென்று அவன் பாம்புகளைக் கொத்திச் செல்வதால், அனைத்து பாம்புகளும் பயந்து போயின.
எனவே ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று பூக்காமல் காய்க்கும் ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் கருடனுக்கு தாங்களே முன்வந்து உணவு வைப்பதாகவும், மற்ற நாள்களில் தங்கள் தீவிற்கு வரக்கூடாதென்றும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அதன்படி எல்லா நாகங்களும் கருடனுக்குத் தத்தம் பலியைக் கொடுத்துவந்தன. காளியன் மட்டும் தன் விஷத்தின் தன்மையால் மிகுந்த செருக்கு கொண்டிருந்தான். எனவே கருடனின் பலியைத் தானே சாப்பிட்டு வந்தான்.
இதனால் கோபமடைந்த கருடன் காளியனைத் தாக்கினான். காளியன் தீப்பொறி பறக்க கருடனைக் கடித்தான். பேராற்றலும் கடும் வேகமும் கொண்ட கருடன், உருக்கிய தங்கம் போல் ஒளிவீசும் தன் இடது இறக்கையால் காளியனைக் கடுமையாகத் தாக்கினான். உயிருக்கு பயந்து காளியன் அங்கிருந்து வெளியேறினான்.
ஒரு சமயம் கருடன் யமுனையின் மடுவில் மீனைக் கொத்திக்கொண்டு பறந்தான். அப்போது நீருக்குள் இருந்த சௌபரி மஹரிஷி, மற்ற மீன்கள் பயப்படுவதைப் பார்த்து அவற்றின் மீது கருணை கொண்டார்.
இனி கருடன் இங்கு வாழும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் நோக்குடன் வருவானாகில் அவனது உயிர் போகும் என்று சபித்தார்.
சௌபரி மஹரிஷியின் சாபத்தை அறிந்த காளியன், யமுனையின் மடுவில் ஒளிந்தால் கருடனால் தீங்கு நேராதென்று மடுவிற்கு வந்து வாழலானான்.
இன்று கண்ணன் காளியனின் பயத்தைப் போக்கியதோடு, அவனிடமிருந்து மடுவையும் காத்தான்.
ஏராளமான கண்ணைக் கவரும் விலை உயர்ந்த ரத்தினங்களையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு வந்த கண்ணனை கோகுல வாசிகள் அனைவரும் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment