Saturday, December 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 369

புல்லாய்ப்‌ பிறவிதரவேணும்,

‌எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே,

தவ திவ்ய மந்திரே ஸ்தம்போ பவாமி வா

என்று இறைவனின் வாழிடத்தில் ஏதாவது ஒன்றாகப் பிறவி வேண்டி மஹான்கள் அனைவரும் வரம் கேட்டுக் கொண்டிருக்க, இங்கோ நாரதரிடம் அபசாரப்பட்டதற்கு கோகுலத்தில் மரமாகும்படி சபிக்கிறார். உண்மையில் அது சாபமா, வரமா?

மஹான்களிடம் எத்தகைய தொடர்பு ஏற்பட்டாலும் அது அவர்களின் கருணையின் வெளிப்பாடே ஆகும். அத்தொடர்பு இறைவனிடம் கொண்டு சேர்த்துவிடும்.

கண்ணன் பிறந்தது முதல் இன்று வரை ஒரு கணம் கூட விடாமல் அவனது லீலைகளை ரசித்துவந்தனர் இந்த மணிக்ரீவனும், நளகூபரனும்.

மரம் என்ற நிலையிலிருந்து விடுபட்டதற்காக மகிழ்ந்தாலும், மற்றொருபுறம் அங்கிருந்து கிளம்பவேண்டுமே, கண்ணனை அருகிலிருந்து காண இயலாதே என்ற ஏக்கமும் இருந்தது.

இருவரும் பகவானை நோக்கி‌ என்ன சொன்னார்கள் தெரியுமா?

க்ருஷ்ணா! யோகீஸ்வரனே! ப்ரக்ருதியைக் கடந்த புருஷோத்தமன் நீரே! நீங்களே இப்பிரபஞ்சத்தின் ஸ்தூல வடிவமாகவும், ஸூக்ஷ்ம வடிவாகவும் இருக்கிறீர்.

அனைத்து ஜீவன்களுக்கும், உயிருக்கும், உள்ளத்திற்கும், புலன்களுக்கும் தலைவன் நீர் ஒருவரே. நீங்களே காலம். எங்கும் வியாபித்திருப்பவர். சகல உயிர்களின் சாட்சியும் நீங்களே.

தங்களை அறிவது எளிதல்ல. ப்ரக்ருதிக்கும் அப்பாற்பட்டு முன்னமே விளங்கும் தங்களை ப்ரக்ருதியில் இருந்துகொண்டு எப்படி அறிய இயலும். அனைத்து சிறப்புகளும் கொண்டவர். உலகைப் படைத்தவர். குணங்களால் மறைக்கப்பட்டவர். பரம்பொருளான தங்களை வணங்குகிறோம்.

தங்களது இந்த உடல் இயற்கையானதல்ல. தெய்வீகமானது. ஆனால், உடல் பொருந்தியவர் எவராலும் செய்யையலாத காரியங்களைச் செய்கிறீர்.

எல்லா உலகங்களின் நன்மைக்காக பேராற்றல் கொண்டு அவதாரம் செய்திருக்கிறீர்.

நம: பரம கல்யாண நம: பரமமங்கள|
வாஸுதேவாய ஶாந்தாய யதூநாம் பதயே நம:||

எங்களுக்கு நீங்கள் ஒரு வரத்தை அளிக்கவேண்டும்.

எங்கள் வாக்கு எப்போதும் தங்களின் திருக்கல்யாண குணங்களையே பாடவேண்டும்.
எங்கள் உடல் தங்களுக்குப் பணிபுரிவதிலேயே ஈடுபடட்டும்.

எங்கள் மனத்தில் எப்போதும் தங்கள் திருவடித் தாமரை மலர்ந்திருக்கட்டும்.
நீங்கள் குடியிருக்கும் இவ்வுலகை எப்போதும் எங்கள் தலை வணங்கட்டும். உங்களின் உடலாக விளங்கும் சாதுக்களையே எங்கள் கண்கள் எப்போதும் பார்க்கட்டும்.

எவ்வளவு அழகான வேண்டுதல்?
இத்தகைய பிரார்த்தனையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த கண்ணன் கலகலவென்று சிரித்தான்.

உலகத்தளையால் பிணைக்கப்பட்ட ஜீவன் உரலில் கட்டுப்பட்ட என்னைத் துதிக்கிறான். நானோ தளைகளற்றவன். ஆனால் ஜீவன் கட்டுப்பட்டவன் என்று சிரித்தான் போலும்.

கண்ணன் அவர்களைப் பார்த்து, நீங்கள் நாரதரை அவமதித்திருந்தபோதும் அவர் உங்களுக்குச் செய்தது அருளே ஆகும். நல்லோரின் தரிசனத்தால் சூரியனைக் கண்ட இருள்போல் ஜீவன்களின் பந்தம் விலகுகிறது.

நீங்கள் உங்கள் இருப்பிடம்‌ செல்லுங்கள். உங்களுக்கு என்மேல் நிலையான பக்தி ஏற்படட்டும். என்று கூற, அவர்கள் இருவரும் கண்ணனை வலம் வந்து மீண்டும் வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் கண்ணனை அவிழ்த்துவிட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே என்று தோன்றலாம். ஆனால், கண்ணனை எவரும் கட்ட இயலாது. அன்பினால் தானே கட்டுண்ணப் பண்ணிக்கொண்டான் எம்பெருமான். எனவே அத்தகைய அன்புடையவர்களே கட்டை அவிழ்க்கவும் தகுதியானவர்கள் என்று எண்ணி விட்டுச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment