கண்ணனின் விஷமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. பொறுத்து பொறுத்துப் பார்த்த கோபிகள் யசோதையிடம் வந்து தினமும் முறையிடத் துவங்கினர்.
கண்ணன் வந்தால் பானையை எடுப்பானே என்று எங்கள் வீட்டில் வெண்ணெய்ப்பானையை உயரத்தில் உத்தரத்தில் உறிகட்டி அதில் வைத்திருந்தேன். கண்ணன் வந்து மேலே ஏறுவதற்கு சிறு பீடம், உரல் முதலியவற்றைப் பயன்படுத்துகிறான். சில சமயங்களில் பலராமன் மீதோ அல்லது வேறு சிறுவர்கள் மீதோ ஏறி உறியிலிருக்கும் வெண்ணெய்யை எடுக்கிறான்.
பானை அப்படியும் எட்டவில்லையென்றால் கையிலிருக்கும் கோலால் அழகாகத் துளைபோட்டு, அதிலிருந்து கொட்டும் தயிரை அள்ளிக் குடிக்கிறான்.
எவ்வளவு இருட்டாக இருந்தாலும் பயப்படுவதில்லை. அவன் அணிந்திருக்கும் ரத்தினங்களின் ஒளியே பானை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கப் போதுமாயிருக்கிறது.
வீட்டில் யாருமில்லாத சமயம் வந்து பானைகளைக் காலிசெய்துவிட்டு உடைக்கிறான்.
இவ்வாறு கோபிகள் மாற்றி மாற்றி யசோதையிடம் சொல்ல, பயந்தவன்போல் முகத்தை வைத்துக்கொண்டு இல்லை என்பதுபோல் தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டு யசோதையின் புடைவைக்குள் ஒளிந்து நின்றுகொண்டிருந்தான் கண்ணன்.
கோபிகள் சொன்ன புகார்களைக் கேட்ட யசோதை கண்ணனைப் பார்த்தாள். அவனது பயந்த முகத்தைப் பார்த்து அதட்ட மனமின்றிச் சிரித்துவிட்டாள்.
புகார் சொன்னால் யசோதை கண்ணனை ஏதாவது கண்டிப்பாள் என்று நம்பி வந்த கோபிகள் யசோதை சிரித்ததைப் பார்த்து ஒன்றும் சொல்லமுடியாமல் திரும்பினர்.
மறுநாள் கண்ணனை வெளியில் செல்லக்கூடாதென்று காலையிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் யசோதை.
காலை எழுந்தது முதல் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தனர் குழந்தைகள். தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடினான் கண்ணன்.
பலராமன் இன்னொரு கன்றின் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.
காலை பொழுதுவிடியும்போதே ஏதாவது விஷமம் செய்வதற்காகத் தெருவில் அலையும் கண்ணனைக் காணாமல் கோபிகளுக்கு என்னவோ போல் இருந்தது. நேற்று புகார் சொன்ன அனைவரும் இன்று கண்ணனைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டு யசோதை வீட்டிற்கு வந்தனர்.
அங்கே தோட்டத்தில் கன்றுக்கு இணையாக துள்ளி ஓடினார்கள் குழந்தைகள்.
வந்த அத்தனை பேரும் ஒரு புறம் குழந்தைகள் துள்ளி ஓடும் அழகை ரசித்தாலும் கீழே விழுந்துவிடப்போகிறார்களே என்று பயந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment