Wednesday, December 26, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 181

ஆறாவது ஸ்கந்தம்



 ஸ்ரீ மத் பாகவதம் ஒரு அழகிய மாலை என்று வைத்துக் கொண்டால் அதன் மத்தியில் விளங்கும் பதக்கம் போன்றது ஆறாவது ஸ்கந்தம்.

பகவன் நாம மஹிமையை வலியுறுத்தும் வண்ணம் அஜாமிளன் கதை சொல்லப்படுகிறது. தக்ஷனைப் பற்றியும், புகழ் பெற்ற ஸ்ரீ நாராயண கவசம், வ்ருத்ராசுரனின் கதை, சித்ரகேதுவின் கதை, பும்ஸுவன விரதத்தின் செயல்முறை ஆகியவை இந்த ஸ்கந்தத்தில் விவரிக்கப்படுகின்றன.

பரீக்ஷித் கேட்டார்.

ப்ரபோ! முன்பு (இரண்டாவது ஸ்கந்தத்தில்) நிவ்ருத்தி மார்கம் பற்றிச் சொன்னீர்கள். ஜீவன் அதன் வழியாகப் படிப்படியாகச் சென்று ப்ரும்ம லோகத்தை அடைகிறான். பின்னர் ப்ரும்மதேவருடன் முக்தியடைகிறான்.

மேலும்‌ (மூன்றாவது ஸ்கந்தத்தில்) ப்ரவ்ருத்தி மார்கம் பற்றி விளக்கிக் கூறினீர்கள். 

மறநெறியைப் பின்பற்றுபவன் அடையும் பயனான நரகங்கள் பற்றியும் கூறினீர்கள். 
மேலும் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் ஆகொயோரின் வம்சம் பற்றியும், மூன்று லோகங்களைப்‌ பற்றியும், அவற்றை பகவான் படைத்ததைப் பற்றியும் விரிவாகக் கூறினீர்கள்.

ஆனால், நரகங்களுக்குச் செல்லாமல் இருக்க வழி உள்ளதா? அதனை விளக்கமாகக் கூறுங்கள் என்றார்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் பாவங்களுக்கு மனிதன் அந்தப் பிறவியிலேயே ப்ராயசித்தம் செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் நரகங்களுக்குச் செல்லத்தான் வேண்டும்.

நோயின் தன்மையறிந்து சிகிச்சையை உடனே துவங்குவதுபோல், இறப்பதற்கு முன்பே செய்த பாவங்களின் தன்மையை உணர்ந்து ப்ராயசித்தம் செய்யவேண்டும். 

பரீக்ஷித் கேட்டான்.

பாவம் செய்வதால் நரகம் கிட்டும் என்று நன்றாக அறிந்தபோதும், மனிதன் தன் மனப் பழக்கத்தினால் (வாஸனை) பாவத்தைச் செய்கிறான். ப்ராயசித்தம் செய்தாலும் மீண்டும் அதே பாவத்தைச் செய்கிறானே. எனில், பாவங்கள் எப்படிப் போகும்?

பல மணிநேரங்கள் செலவழித்து பாகன்‌ நதியில் யானையைத் தேய்த்து தேய்த்துக் குளிப்பாட்டுவான். யானையோ குளித்துக் கரையேறியதுமே, தும்பிக்கையால்  சேற்றை அள்ளித்தலையில் போட்டுக்கொள்ளும். அதுபோலாகிவிடாதா? 

மேலும் ஒரு பாவத்தினால் மனிதனுக்கு ஒரு லட்சரூபாய் கிடைக்கும் என்பதாக வைத்துக்கொள்வோம். ப்ராயசித்த கர்மா செய்வதற்குப் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றால், மீதி தொண்ணூறாயிரம் லாபம் என்றுதானே அவன் மனம் கணக்கிடும். ஒவ்வொரு முறையும் பாவத்தையும் ப்ராயசித்ததையும் சேர்த்தே செய்வது வாடிக்கையாகிவிடாதா? அவ்வாறு செய்தால் ப்ராயசித்த கர்மாக்கள் பாவச் செயலை ஊக்குவிப்பது போலாகிவிடுமே.

இந்தக் கேள்வியால் ப்ரும்ம ஞானியான சுகர் மிகவும் மகிழ்ந்தார்.

ஆம், பரீக்ஷித். ப்ராயசித்தகர்மாக்கள் பாவத்தைப் போக்குமே தவிர, பாவம் செய்யும் எண்ணத்தை இயலாது. உண்மையான பாவ பரிகாரம் பகவானை உணர்தலே ஆகும். அஞ்ஞானம் நீங்கியவன் மீண்டும் பாவம் செய்யமாட்டான்.

ஒருவன் தன் கடைமைகளை முறைப்படி ஒழுங்காகச் செய்தாலே பாவ வாசனைகளிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.

அறநெறிகளின் தத்துவம் அறிந்தவர்கள் தவம், ப்ரும்மசர்யம், மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தானம், உண்மை பேசுதல், உள்ளும் புறமும் தூய்மை காத்தல், கொல்லாமை, ஜபம் ஆகியவற்றால் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் தூய்மைப்படுத்தி, பெரிய பெரிய பாவங்களையும் சாம்பலாக்குகிறார்கள். பகவத் பக்தர்கள் பக்தியினாலேயே பாவம் நீங்கப் பெறுகிறார்கள்.

 பாவம் செய்தவனுக்கு அடியார்களுக்குச் செய்யும் சேவையாலும், பகவானிடம் தன்னை அர்ப்பணிப்பதாலும் விடுதலை  கிடைக்கும்.

பெரிய பெரிய ப்ராயசித்தங்களாலும், மனத்தூய்மையைக் கொடுத்து விட முடியாது.
ஒரே ஒருமுறையேனும் பகவன் நாமத்தை உணர்ந்து கூறுவதாலும், க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளை நினைப்பதாலும் பாவங்கள் ஓடும்.

இவ்விஷயம் தொடர்பாக ஸமர்த்த ராமதாசரின் சரித்ரத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment