கண்ணன் தவழத் துவங்கினான். அவனைப் பார்த்து பலராமனும் அவனோடு சேர்ந்து தவழ்ந்தான்.
ஒருநாள் வாசல்படி தாண்டி தவழ்ந்ததும், அதை அனைவரும் உற்சவமாகக் கொண்டாடினார்கள்.
குழந்தைகள் நகரத் துவங்கியதும் யசோதைக்கு ஒரு வேலையும் ஆவதில்லை. எந்த நேரம் எந்த அரக்கன் வருவானோ என்று கண்கொத்திப் பாம்பாக கண்ணனை கவனித்து கவனித்து ஏரார்ந்த கண்ணியாகிப்போனாள்.
யார் வாசல் பக்கம் போனாலும் அவர்கள் பின்னாலேயே தவழ்ந்து ஓடுவதும், சலங்கை சத்தம் கேட்டு யசோதை ஓடி வருவதுமாக ஆயிற்று.
சிலசமயங்களில் யசோதையின் புடைவை நிறத்தில் வேறு யாராவது உடுத்தியிருந்தால் அவர்கள் பின்னால் போய் விடுவான் கண்ணன். சலங்கை சத்தம் கேட்டு அந்த கோபி திரும்பிப்பார்த்தால் முகத்தைப் பார்த்துவிட்டு அம்மா இல்லை என்று அழுவான்.
பின்னர் திரும்பித் தவழ்ந்து வருவான்.
பின்னர் திரும்பித் தவழ்ந்து வருவான்.
வீட்டுக்குள் கண்ணனுக்கு விஷமத்துக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
நீரை அடித்து விளையாடுவது, பால், தயிர்ச் சட்டிகளைக் கவிழ்ப்பது, வெண்ணெய்ப் பானைக்குள் கைவிட்டு அண்ணனும் தம்பியுமாக உண்பதுபோக, உடல் முழுவதும் பூசிக் கொள்வது, உலக்கையைத் தள்ளிவிடுவது, திமிரும் கன்றுக்குட்டியை அழுத்திப் பிடிப்பது, கோட்டை அடுப்பை சிறுநீர் கழித்து அணைத்துவிட்டு வந்துவிடுவது, காலிப் பானையைத் தலையில் கவிழ்த்துக்கொள்வது என்று ஒரே அமர்க்களம்.
தோட்டத்திற்குச் சென்றால், பெரிய கொம்புள்ள மாடுகளுக்கு நடுவில் போய் நிற்பது, கன்றுக்குட்டியின் வாலைப் பிடித்து இழுப்பது, பட்டாம்பூச்சி பின்னால் ஓடுவது, சேற்றுக்குள் இறங்கி காலை இழுத்துக்கொண்டு நடப்பது, அதை மேலே பூசிக்கொள்வது.
இவற்றைத் தவிரவும், கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதும், உலக்கையை இடிக்கவிடாமல் அதைப்பிடித்துக்கொண்டு தொங்குவதும், கன்றுக்குட்டிக்குப் போட்டியாக தானும் நேராக மாட்டின் மடியில் வாய் வைத்துக் குடிப்பதும், மாட்டுச் சாணியை எடுத்து கோபிகளின் மீது அப்பிவிடுவதுமாக எண்ணற்ற விளையாட்டுகள்.
பொழுது புலர்ந்தது முதல் உட்காரக்கூட விடாமல் யசோதையையும் மற்ற கோபிகளையும் வேலை வாங்கினான் கண்ணன்.
இவைகளுக்கு நடுவில் எப்படியாவது கண்ணனை நீராட்டி, உச்சிக் கொண்டை போட்டு, முத்து மாலைகளால் அலங்கரித்து, சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைப் பூசி, அழகாகக் கஸ்தூரி திலகம் இட்டு, கைகளில் வளைகளும், கால்களில் சதங்கைகளும் மாட்டி அலங்காரம் செய்வாள் யசோதை. நீராடுவதற்குத்தான் அமர்க்களமே தவிர, அலங்காரங்கள் செய்யப் பொறுமையாகக் காட்டுவான் கண்ணன். எல்லா நகைகளையும் கண்ணனுக்கு அணிவித்து அழகு பார்க்கும் யசோதை அவனுக்கு இடுப்பில் ஒன்றும் அணிவிக்கமாட்டாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment