Thursday, November 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 356

அனைவர் கண்களிலும் புழுதியை வாரி இறைத்துவிட்டு கணத்தில் குழந்தையைத் தூக்கிச் சென்றவன் காற்றரக்கன். த்ருணாவர்த்தன் என்பது அவன் பெயர்.

கண்ணனைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே வெகுதூரம் சுழன்று பறந்தான். உயர உயரக் கொண்டுபோய், ஆகாயத்திலிருந்து குழந்தையை பூமியில் விட்டெறிவது அவன் திட்டமாயிருக்கவேண்டும்.

அவன் குழந்தையைத் தன் பிடியில் கொண்டுபோனதாய் நினைத்துக் கொண்டிருக்க, உண்மையில் அவன்தான் தெய்வக் குழந்தையின் பிடியில் அறியாமலே மாட்டிக் கொண்டிருந்தான்.

நல்ல உயரம் சென்றபோதும் குழந்தை அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சிரித்தவண்ணம் இருந்தது.

அவனது கண்ணுக்கருகில் தன் கண்ணை வைத்துப் பார்த்தது குழந்தை. கோபியர்க்கே‌ கிட்டும் பாக்யம். அசுரனுக்குக் கொடுக்கிறான். யார் கேட்பது அவனை?

மெதுவாகச் சிரித்துக்கொண்டே அவனது கழுத்தை வளைத்து இறுக்கத் துவங்க, ஏதோ விபரீதம் என்று அசுரன் உணர்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

தன் முகத்தின் வெகு அருகில் இறைவனைக் கண்டவாறே விழிகள் பிதுங்கி, நாக்கு வெளியில் தள்ளி, மிக அதிகமான உயரத்திலிருந்து கீழே விழத் துவங்கினான் த்ருணாவர்த்தன்.

பரமேஸ்வரனின் அம்பினால் அடிபட்ட திரிபுரம்போல் உடல் சிதறிக் கீழே விழும் அரக்கனை அங்கே கூடி நின்று அழுதுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் கண்டனர்.

கீழே விழுந்திருந்த அசுரனின் உடலைப்‌ பார்த்ததும் மிகவும் பயந்துபோயினர். அருகில் ஓடிச்சென்று பார்த்தபோது, அரக்கனின் மார்பில் விளையாடிக்கொண்டிருந்தான் குழந்தை.

அவனை எடுத்துக்கொண்டுபோய் யசோதையிடம் கொடுத்ததும் அவளுக்குப்‌ போன உயிர் மீண்டு வந்ததுபோலாயிற்று.

குழந்தை நலமுடன் வந்ததற்கு மிகவும் மகிழ்ந்தபோழ்திலும் அவர்கள் அனைவர் அனைவரையும் ஒரு இனம் புரியாத பயம் அழுத்த ஆரம்பித்தது.

வான் வழியே அரக்கனால் கொண்டு செல்லப்பட்டு, எமனின் வாயிலை மிதித்துவிட்டு நலமுடன் வந்துவிட்டானே என்று சொல்லி சொல்லி அங்கலாய்த்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுவதற்கு நாம் என்ன செய்துவிட்டோம்? தவம் செய்தோமா? இறைவனை உளமுருகி வழிபட்ட பலனாயிருக்குமோ? குளம், கிணறு வெட்டி, நற்பணிகள் செய்திருப்போமா? உயிரினங்களிடம் கருணை காட்டினோமா? எந்த நல்வினை இப்படி ஒவ்வொரு முறையும் காப்பாற்றுகிறது?

விதம் விதமாக யோசித்த நந்தன், வசுதேவரின் சொற்களை நினைந்து நினைந்து அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார்.

மீண்டு வந்த குழந்தையைக் கண்டு சிரிக்கக்கூடத் தோன்றாமல், கண்ணீரையும் துடைக்காமல் முத்தமிட்ட வண்ணமே இருந்தாள் யசோதை. தலை மற்றும் உடல் முழுவதும் புழுதி அப்பிக்கொண்டிருந்ததால் குழந்தையை நன்னீரால் நீராட்டினாள்.

பாலூட்டியபின் மறுபடி கோசாலைக்குக் கொண்டுபோனாள்.

கோசாலைக்கு வந்ததுமே அடுத்தது கோமிய ஸ்நானம்தான் என்று பயந்த கண்ணன், கண்களை மூடி உறங்குவதுபோல் பாசாங்கு செய்யத் துவங்கினான்.
பசுக்கள் இருக்கும் இடத்திலேயே தொட்டிலைப் போட்டு, உறங்குகின்ற குழந்தையை அதில் விட்டு, பல்வேறு வகையான ஸ்லோகங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.

கண்ணைத் திறந்தால் கோமிய ஸ்நானம் செய்விப்பாள் என்று பயந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டான் அந்த தேவர் தலைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment