Saturday, November 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 346

சேர்க்கை எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே செயல்களும் அமைகின்றன. தன்னைச் சுற்றி அசுரர்களை மந்திரிகளாக நியமித்துக் கொண்டிருந்தான் கம்சன். அவர்களது ஆலோசனைகள் எப்படி இருக்கும்?

சாதுக்களையும், அந்தணரையும் துன்புறுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூற, அனைத்தையும் செயல்படுத்த விரும்பினான் கம்சன். அவற்றை செயல்படுத்த அவர்களை திசைக்கொருவராய் அனுப்பினான்.

ஏற்கனவே ரஜோ குணம் மிகுந்தவர்கள் அசுரர்கள். அறிவு மழுங்கியவர்கள். நல்லோர்க்குத் தீங்கு செய்யக் குதூஹலத்துடன் கிளம்பினர்.

நல்லோரை அவமதிப்பதும், அவர்க்குத் தீங்கு செய்வதும் பெருங்குற்றம். அச்செயல்கள் ஒருவருடைய அத்தனை உயர்வுகளையும் அழித்துவிடும்.

மதுராவிலேயே இருக்கிறோமே. இறைவன் கோகுலம் சென்றானே. அங்கென்ன நடக்கிறது? பார்க்கலாம் வாருங்கள்.

கோகுலம்..
லட்சக் கணக்கான பசுக்கள் வசிக்குமிடம். இறைவன் அங்கு வந்துவிட்டதை உணர்ந்து சந்தோஷக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. பறவைகள் நந்தனின் அரண்மனையையே வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இயற்கை முழுவதும் தன் கவனத்தை நந்தனின் அரண்மனை மீது திருப்பியிருந்தது.

யாரேனும் குழந்தையை வெளியில் கொண்டுவருவார்களா? எப்படியாவது ஒரு கணமாவது தரிசனம்‌ கிட்டுமா என்ற ஆவலில் பொழுது விடிவதற்காகக் காத்திருந்தன.

சூரியன் படு உற்சாகமாகக்‌ கிளம்பி வந்தான். கொஞ்சம் கொஞ்சமாகப் பொழுது புலரத் துவங்கியது.

கோபிகளுக்கெல்லாம் செய்தி தெரியாமல் மண்டை குடைந்துகொண்டிருந்தது.
இரவே யசோதாவிற்கு பேறு வலி வந்ததாகக் கேள்வியுற்றோமே. இன்னுமா குழந்தை பிறக்கவில்லை? என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

நள்ளிரவில் குழந்தை பிறந்ததும், யசோதைக்குப் பிரசவம் பார்த்த மூதாட்டி, குழந்தையைக் குளிப்பாட்டி, யசோதை பக்கத்தில் போட்டாள். யசோதைக்கு மயக்கம் தெளியாததால், அங்கேயே ஓரமாக அமர்ந்திருந்தாள். பின்னர் உறக்கம் அவளை ஆட்கொள்ள அவளும் தூங்கிவிட்டாள்.

காலையில் விழிப்பு வந்ததும், யசோதையிடம் போய் கூப்ப்பிட்டாள்.
யசோதே, யசோதே இங்க பாரு, உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. நீ வணங்கற கௌரியே வந்து பொறந்திருக்கா.

மெதுவாகக் கண்களைத் திறந்து குழந்தையைப் பார்த்த யசோதைக்கு ஒன்றும் புரியவில்லை. கிழவியிடம் கேட்பதற்குள் அவள் வெளியே ஒடினாள். நந்தனிடம் சேதி சொல்ல.

மஹாராஜா! மஹாராஜா!
உங்களுக்கு பொண் குழந்தை பொறந்திருக்கு! வாங்க வாங்க வந்து பாருங்க.

நந்தன் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றார்.

வயதான காலத்தில் வாராது வந்த மாமணியல்லவா? ஓட்டமும் நடையுமாக பிரசவ அறையை அடைந்தார்கள்.

அங்கே, கன்னங்கரேலென்று, சுருள் சுருளான கேசங்களுடன், தாமரை போன்ற கை கால்களுடன், பெரிய விழிகளும், எள்ளுப்பூ போன்ற நாசியும், கொவ்வைப் பழம்போன்ற சிவந்த அதரங்களுடன், சுழிந்த வயிறு, கை கால்களில் த்வஜ, அங்குச, வஜ்ர, பத்ம ரேகைகளுடன் அங்குமிங்கும் பார்த்து சிரித்துக்கொண்டு கொழு கொழுவென்று ஒரு ஆண்குழந்தை இருந்தது. நந்தனைப் பார்த்ததும் களுக்கென்று சிரித்தது.

ப்ரும்மத்தை உணரும் ஆனந்தத்தை, அது எப்படிப்பட்டதென்று சொற்களால் வர்ணிக்க இயலாது. ஆனால், அதற்கு ஏதேனும் உவமை கொடுக்கவேண்டும் என்றால், பெரியவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்.

தன் முதல் குழந்தையை முதன் முதலில் தொட்டுப் பார்க்கும் தந்தையின் ஆனந்ததை ஓரளவுக்கு ப்ரும்மானந்ததோடு ஒப்பிடலாம்‌ என்கிறார்கள்.

இங்கே பிறந்திருப்பதோ, சாக்ஷாத் ப்ரும்மமேதான். அதைத் தொடும் ஆனந்தத்தை வர்ணிக்க இயலுமா?
ஆனந்தக் கூத்தாடினான் நந்தன்.

கிழவியைக் கூப்பிட்டான். உனக்கு மகிழ்ச்சியில் புத்தி பேதலித்துவிட்டதா? சிங்கக்குட்டி மாதிரி ஆண் குழந்தை பிறந்திருக்கு. பெண் குழந்தைன்னு மாத்திச் சொல்றயே என்றான்.

அவளோ நான் நன்றாகப் பார்த்தேன். பிரசவமானதும் நான்தான் குழந்தையைக் குளிப்பாட்டினேன். பெண் குழந்தைதான் என்றாள்.

பாட்டீ, உனக்கு பைத்தியம் பிடிச்சாச்சு. இவனைப் பாரு. எப்படி சிரிக்கறான்? இவன் முகத்தைப் பாத்து சொல்லு. இவன் பொண்ணா?

குழம்பிப்போனாள்‌ கிழவி. சிரித்துக்கொண்டே அவளுக்கு நிறைய சன்மானங்கள் கொடுத்து அவளை அனுப்பினார் நந்தன். பின்னர் தண்டோரா போட்டு குழந்தை பிறந்திருப்பதை அறிவிக்கச் சொன்னார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment