வெள்ளம் ஏறிக்கொண்டே இருப்பதை உணராதவராக வசுதேவர் தொடர்ந்து நடந்தார்.
ஒவ்வொரு ஜீவனிலும் உறைகின்ற இறைவனுக்கு யமுனையின் உள்ளக்கிடக்கை தெரியாதா? குட்டி இறைவன் தன் பட்டுப் பாதத்தை கூடைக்கு வெளியே நீட்ட, யமுனையின் ஆனந்ததிற்கு அளவே இல்லை.
தாமரை மொட்டு போன்ற குட்டிப்பாதம். சங்கு, சக்ர, வஜ்ர, பத்ம ரேகைகள் நிறைந்த பாதம். முதன் முதலில் அபயம் கொடுப்பதற்காகப் பாதத்தை நீட்டி விட்டானே.
துள்ளி எழுந்து தொட்டு வணங்கினாள். தன் நீரால் நீராட்டிப் புனிதமானாள். அதற்கு மேல் தடை செய்யலாகாதென்று பளீரென்று விலகி வசுதேவருக்கு வழி விட்டாள்.
விடுவிடுவென்று நடந்து கோகுலத்தை அடைந்தார் வசுதேவர்.
அங்கும் பல அடுக்குகள் காவல். ஆனால், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
நேராக, நந்தனின் அரண்மனைக்குச் சென்று அந்தப் புரத்தினுள் நுழைந்தார்.
அங்கே பிரசவம் ஆன களைப்பில் யசோதை மயக்கத்தில் இருந்தாள்.
அவளருகே அன்றலர்ந்த தாமரைபோல் அங்கயற்கண்ணி கிடந்தாள்.
வசுதேவரைப் பார்த்துக் கையைக் காலை உதைத்துக்கொண்டு என்னை அள்ளிக்கொள் என்பதாகச் சிரித்தாள்.
சின்னஞ்சிறு இறைவனை நெஞ்சோடு கட்டியணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டார். பின்னர், யசோதையின் அருகில் விட, சட்டென்று அண்ணனும் தங்கையும் கையைப் பிடித்துக் கொண்டனர்.
வசுதேவருக்கு குழந்தையைப் பார்த்ததும் கண்ணீர் வந்தது. அடக்கிக்கொண்டு, சின்னஞ்சிறு அம்பிகையை அள்ளி மறுபடி கூடையில் வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு மெல்ல நடக்கத் துவங்கினார்.
அவர் நெஞ்சம் முழுதும் கண்ணனின் கருகருவென்று அலையும் குழலும், அன்பொழுகும் பார்வையும், கள்ளச் சிரிப்பும், நீலமேகம் போன்ற திருமேனியும் நிறைந்திருந்தன.
அரண்மனையை விட்டு வெளியில் வந்ததும் விடுவிடுவென்று நடந்து யமுனைக் கரையை அடைந்தார்.
யமுனை மீண்டும் வழிவிட, விரைவில் அரண்மனையை அடைந்தார். அவர் சிறையை அடைந்து பெண்குழந்தையை எடுத்து தேவகியிடம் கொடுத்ததும், கூடை மறைந்தது. கதவுகள் தாளிட்டுக்கொண்டன. தானாகப் பூட்டிக்கொண்டன.
எல்லாம் முன்போலானதை உறுதிப் படுத்திக்கொண்டு யோகமாயை வீல் என்று அலறி, தன் குரலால் பிரபஞ்சத்தை எழுப்பினாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment