ஸங்கர்ஷணர்
பாதாள உலகின் கீழ் முப்பதாயிரம் யோஜனை தூரத்தில் அனந்தன் என்ற பெயருள்ள பகவானின் அம்சம் உள்ளது.
இந்தக் கலை நான் என்ற அஹங்கார ரூபமாக இருக்கிறது. பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் இரண்டையும் இணைக்கிறது. பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றும் பக்தர்கள் இதை ஸங்கர்ஷணர் என்றழைக்கின்றனர்.
ப்ரளய காலம் வரும்போது அவர் தன் புருவங்க்களை நெறித்து பஞ்சபூதங்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு ப்ரபஞ்சத்தை அழித்துவிடுகிறார்.
அழகான சிவந்த பளபளக்கும் நகங்களை உடையவர். பல நாக கன்னிகைகள் அவருக்கு சேவை செய்கிறார்கள்.
எல்லையற்ற நற்குணங்கள் கொண்ட ஸங்கர்ஷண பகவான், உலகங்களின் நன்மைக்காக தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறார்.
தேவர்கள், முனிவர்கள், நாகர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள் அனைவரும் இவரை தியானம் செய்கின்றனர்.
அடியார்கள் மீது கொண்ட அன்பினால் அவர் கண்கள் கலங்கிச் சிவந்து காணப்படுகிறது. அன்பு மிகுந்த சொற்களால் அனைவரையும் மகிழ்விப்பவர். நீலப்பட்டாடை அணிந்தவர். காதுகளில் ஒரே ஒரு குண்டலம் மட்டும் அணிந்தவர். கையில் கலப்பை வைத்திருக்கிறார். கழுத்தில் என்றைக்கும் வாடாத, வண்டுகள் முரலும் வைஜயந்தி மாலை.
தன்னைத் துதிப்பவர் மனத்தில் உள்ள மாயையை அக்கணமே அகற்றுபவர்.
நாரதரும், தும்புருவும் இவர் புகழை கானம் செய்கின்றனர்.
அளப்பரிய பெருமைகள் வாய்ந்த அனந்த பகவான் தன் தலையில் இப்பூமண்டலத்தைத் தாங்கி நிற்கிறார்.
பரீக்ஷித்! மனிதர்களின் கர்ம பலனாக அவர்கள் அடையும் அத்தனை லோகங்கள் பற்றியும் உனக்குக் கூறிவிட்டேன். மேலும், என்ன அறியவேண்டுமோ, வேண்டுமோ கேள். என்றார் ஸ்ரீ சுகர்.
கேள்வியின் நாயகனான பரிக்ஷித் மீண்டும் கேட்டான். அவனது கேள்விகளாலேயே இத்தனை சுவையான பாகவதப் பழம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
மஹரிஷி! மக்கள் அடையும் பயன்களில் இவ்வளவு வேறுபாடுகள் எப்படி உண்டாகின்றன?
அன்றலர்ந்த தாமரைபோல் மலர்ந்த முகம் கொண்ட ஸ்ரீ சுகர் கூறலானார்.
அரசே! ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களுக்கேற்ப ஒரு செயலில் மனிதனுக்கு ஈடுபாடு அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது. ஏற்கனவே உள்ள கர்ம வாசனைப்படியும், முக்குணங்களின் மாறுபாட்டாலும் அவன் செய்யும் செயலும் அமைகிறது.
அதற்கேற்பவே பலன்களும் உண்டாகின்றன.
செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களால் தடை செய்யப்பட்ட பாவச் செயல்களானாலும்கூட அவனது ஈடுபாட்டைப் பொறுத்தே பாவம் விளைகிறது.
பன்னெடுங்காலமாக அஞ்ஞானத்திற்கு ஆட்பட்டு செய்யப்படும் பாவச் செயல்களின் பயனாகக் கிடைக்கும் நரகங்கள் பற்றிக் கூறுகிறேன் கேள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment