பலிச் சக்ரவர்த்தியின் யாகத்தில் யக்ஞநாராயணனான பகவான்
மூவுலகங்களையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கினார். அப்போது அவரது
திருவடியிலுள்ள நகம்பட்டு அண்டத்தின் மேல் பாகம்பிளந்தது. ப்ரும்மாண்டத்திற்கு
வெளியில் உள்ள நீர் அந்த ஓட்டை வழியாக வெளியேறியது. தூய்மையான அந்த நீரை பகவத்பதீ
என்றழைத்தனர். அந்நீர்ப்பெருக்கு பல்லாயிரம் வருடங்கள் கழித்து துருவலோகத்தில்
விழுந்தது. அதை விஷ்ணுபதம் என்றழைக்கின்றனர்.
அந்த துருவலோகத்தில்தான் மஹாவீரனான துருவஸ்வாமி இருக்கிறார்.
இந்த நீர் நமது குலதெய்வமான நாராயணனின் திருவடித் தீர்த்தம் என்று
சொல்லி தினமும் அதைத் தலையில் தெளித்துக்கொள்கிறார். அப்போது அவரது ஹ்ருதயத்தில்
பக்தியும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் பெருகுகின்றன.
ஸப்தரிஷிகளும் இந்ந்தியின் தீர்த்தத்தை சிரசில் ஏற்கின்றனர்.
எங்கும் நிறைந்த வாசுதேவனிடத்து ஏற்படும் அசையாத பக்தியே பெரும்
செல்வமாகக் கருதுபவர்கள். முக்தியின்பத்தைக்கூட வேண்டாதவர்கள்.
இங்கிருந்து அந்த கங்காதேவி வானவீதி வழியாக இறங்கி சந்திரமண்டலம்
வந்து மேரு பர்வதத்தின் முகட்டிலுள்ள ப்ரும்ம பட்டணத்தை அடைகிறாள்.
அங்கு சீதா, அளகநந்தா, சக்ஷுஸ், பத்ரா என்ற பெயர்களில் நான்காகப்
பிரிந்து நான்கு திசைகளிலும் ஓடி நதிகளின் தலைவனான ஸமுத்ரத்தில் கலக்கிறாள்.
இவற்றில் சீதா என்ற நதி ப்ரும்மதேவ உலகிலிருந்து கீழ்நோக்கிப்
பாய்ந்து கந்தமாதன மலைச்சிகரங்கள் விழுந்து பத்ராச்வ வர்ஷத்தைச் செழுமையாக்கி
உப்புக்கடலில் கலக்கிறது.
சக்ஷுஸ் நதி மால்யவான் மலையின் உச்சியில் விழுந்து கேதுமால
வர்ஷத்தைச் செழுமையாக்கி கடலில் சேர்கிறது.
பத்ரா நதி மேரு மலை யிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து பல மலைச்
சிகரங்களைக் கடந்து முடிவில் ச்ருங்கவான் என்ற மலை யு ச் சி யிலிருந்து விழுந்து
உத்தரகுரு தேசத்தின் வழியாகக் கடலில் கலக்கிறது.
அளகநந்தா ப்ரும்மலோகத்திலிருந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல
மலைச் சிகரங்கள் தாண்டி ஹேமகூடம் என்ற மலையை அடைகிறது. அங்கிருந்து இமயமலையில்
சீறிப் பாய்ந்து தென்திசைக்கடலில் கலக்கிறது. இதில் நீராடுபவர் ஒவ்வொருவர்க்கும்
அச்வமேதம் முதலிய யாகங்களின் பலன் கிடைக்கிறது.
இவை அனைத்திலும் பாரத வர்ஷம்தான் கர்மபூமி. மற்ற எல்லா
வர்ஷங்களும்ஸ்வர்கத்தில் வசிப்பவர்களின் சுகங்களில் எஞ்சிய போகங்களைத் தருபவை.
அங்கு வாழும் மனிதர்களின் ஆயுள் மனித உலகக் கணக்குப்படி பத்தாயிரம்
வருடங்கள்.
அவர்களது திருமேனி வஜ்ரம் போன்றது. எப்போதும் த்ரேதாயுகம் போன்று
அமைதி நிலவும். மக்கள் சிற்றின்பங்களிலேயே நீண்ட காலம் உழல்கின்றனர்.
இந்த ஒன்பது வர்ஷங்களிலும் பகவான் நாராயணன் பல வடிவங்களில்
விளங்குகிறார்.
இளாவிருத வர்ஷத்தில் பகவான் சங்கரர் மட்டுமே ஆண்மகன். இதில்
தெரியாமல் நுழைந்தாலும் பெண்ணாகிவிடுவர். இதைப் பற்றி ஒன்பதாவது ஸ்கந்தத்தில்
விரிவாகக் கூறப்படுகிறது.
அங்கு பகவான் சங்கரர் பார்வதியுடனும் பதினாயிரம் பணிப்பெண்களுடனும்
பரமபுருஷனான வாசுதேவனின் வியூக மூர்த்தியான ஸங்கர்ஷணரைப் பலவாறு துதிக்கிறார்.
பத்ராச்வ வர்ஷத்தில் தர்மதேவனின் புதல்வரான பத்ரச்ரவஸ் தன்
முக்கியட்க் தொண்டர்களுடன் சேர்ந்து ஹயக்ரீவரை உபாசிக்கிறார்.
ஹரிவர்ஷத்தில் பகவான் ஸ்ரீ ஹரி நரசிம்மரூபத்தோடு விளங்குகிறார்.
அவரது சரித்ரம் ஏழாவது ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. தைத்ய குலமும், தானவ
குலமும் அவரைப் பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.
கேதுமால வர்ஷத்தில் பகவான் மன்மத ரூபத்தில் திகழ்கிறார்.
மஹாலக்ஷ்மிக்கும், ஸம்வத்ஸரன் என்ற ப்ரஜாபதியின் சந்ததியினர்க்கும் அவர்கள்து
விருப்பங்களை நிறைவேறச் செய்கிறார்.
அவர்கள்தான் கேதுமால வர்ஷத்தின் தலைவர்கள்.
இங்கு மஹாலக்ஷ்மி பகவானை பல்வேறு மந்திரங்களைச் சொல்லித்
துதிக்கிறாள்.
ரம்யக வர்ஷத்தில் வைவஸ்வத மனு பகவானை மீனுருவில் வழிபடுகிறார்.
ஹிரண்மய வர்ஷத்தில் பகவான் ஆமை வடிவெடுத்துக் காணப்படுகிறார்.
அங்கு வசிப்பவர்களின் தலைவர் பித்ரு கணங்களின் தலைவரான அர்யமா என்பவர்.
கிம்புருஷ வர்ஷத்தில் பத்ச்ரேஷ்டரான ஹனுமான் ஸ்ரீ ராமபிரானை
அத்தீவிலுள்ள கின்னரர்களோடு இணைந்து வழிபடுகிறார்.
பாரத வர்ஷத்தில் நர நாராயணர்களாக அவதரித்து தவம் செய்கிறார்.
அவர்களை நாரதர் ஸாங்க்ய யோகத்தால் துதிக்கிறார். மேலும் பாஞ்சராத்ரம் என்ற ஸ்ரீ
வைஷ்ணவ ஆகமத்தை ஸாவர்ணி மனுவிற்கு உபதேசம் செய்து நரநாராயணர்களைப் பூஜை
செய்கிறார்.
தொடர்ந்து பாரத வர்ஷத்தின் சிறப்புகளை வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட
ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment