தன்னொளியாலே அகிலத்தை ஒளிரச் செய்யும் சிசு பரம்பொருளே என்பதை உணர்ந்தார் வசுதேவர். உடனே அஞ்சலி செய்து தொழலானார்.
தாங்களே அகில உலகத்திற்கும் ஆதாரப் பொருள். அனுபவத்தினால் வரும் ஆனந்தமும் நீங்களே. மாயையைக் கொண்டு ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண வடிவான இவ்வுலகைப் படைத்துப் பின் அதனுள் நுழைந்தவர்போல் இருக்கிறீர்.
மாறுபாடற்ற மஹத் தத்துவம் ப்ரக்ருதி என்ற நிலையில் மாறுபாடாகத் தெரிவதுபோல் தாங்களும் பல்வேறு மாறுபாடுகளுடன் காணப்படுகிறீர்கள். ஆனால், உண்மையில் மாறாதவர் தாங்கள்.
பிரகிருதியின் பதினாறு தத்துவங்களும் தனித்தனியாகப் பிரிந்து பல சக்திகள் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றை இணைத்து மாறுபாடுகளுடன் கூடிய இந்த ப்ரும்மாண்டத்தைத் தோற்றுவித்திருக்கிறீர்.
(பதினாறு தத்துவங்களாவன
ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மற்றும் மனம்)
ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மற்றும் மனம்)
அவை காரண நிலையில் உலகம் தோன்றுவதற்கு முன்னமே ப்ரும்மாண்டத்தில் வைத்துவிட்டீர்கள். காரிய ரூபமாக பிரபஞ்சம் தோன்றும் சமயம், அவை எதுவும் புதிதாகத் தோன்றாமல் செயல்பாட்டில் அமைந்தன.
கண் முதலியவைகளுக்குப் புலப்படும் பொருளாகக் காட்சியளிக்கும் தாங்கள் எப்புலனாலும் அறியமுடியாதவராகவும் விளங்குகிறீர்கள்.
இரு நிலைகள் ஒரே சமயத்தில் எப்படி சாத்தியம்?
உருவம் மேற்கொண்டு ஸகுண பிரம்மமாகவும், உருவமற்ற நிர்குணப் பொருளாகவும் ஒரே சமயத்தில் எவ்வாறு இருக்க இயலும்?
என்றால்
நீர் என்பது நீர், நீராவி, பனிக்கட்டி என்று பல நிலைகள் கொண்டது. நீராக இருக்கும்போது கண்களுக்குப் புலப்படுகிறது. அதைத் தாங்கும் பாத்திரத்திற்கேற்ப வடிவம் பெருகிறது. தொடு உணர்வும் தரும்.
நீராவியானால் வடிவமும் இல்லை. கண்களுக்கும் புலப்படாது. தொடு உணர்வும் இல்லை.
பனிக்கட்டியாக மாறும்போது குறிப்பிட்ட வடிவமும் உண்டு, கண்களுக்கும் புலப்படும். தொடு உணர்வையும் தரக்கூடியது.
ஐம்பெரும் பூதத்தில் ஒன்றான நீருக்கே மாறும் தன்மை, மாறாத தன்மை இரண்டும் உண்டெனில், ஐந்தையும் அடக்கி ஆளும் பெரும் சக்திக்கு ஐந்துபூதங்களின் அத்தனை குணங்களும் உண்டல்லவா?
வசுதேவர் தொடர்கிறார்
தன்னைக் காட்டிலும் வேறொன்று உள்ளது என்று எவன் நினைக்கிறானோ அவன் அறிவாளி ஆகமாட்டான். உடல் முதலான அனைத்து ஸ்தூலப் பொருள்களும் தனித்தனியாகத் தெரிகின்றனவே தவிர, உண்மையில் தனி அல்ல.
எங்கும் நீக்கமற நிறைந்த இறைவா! தங்களுக்கு எல்லா நிலைகளுமே பொருந்துகின்றன.
குணங்களின் செய்கையே தங்கள் செய்கையாகப் பேசப்படுகிறது.
தாங்கள்மூவுலகையும் படைக்க, ரஜோகுணத்தால் செந்நிறத்தையும், காக்கும் சமயம் ஸத்வ குணத்தினால் வெண்மை நிறத்தையும், அழிக்கும் சமயம் தாமச குணத்தை ஏற்று கருமை நிறத்தையும் ஏற்கிறீர்கள்.
எல்லா உலகையும் காக்கவே நீங்கள் என் வீட்டில் அவதாரம் செய்திருக்கிறீர்கள். பண்பாடற்ற கம்சன் உங்களுக்கு முன்னால் இங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் இரக்கமின்றிக் கொன்றுவிட்டான். இப்போது நீங்கள் பிறந்திருப்பதை அறிந்தால் ஆயுதமேந்தி ஓடி வருவானே.
என்றார்.
என்னதான் ஞானத்தினால் இறைவன் என்று தெரிந்தபோதும், கடைசியில் தந்தையாக மாறிக் கவலைப் படுகிறார் வசுதேவர்.
தேவகி என்ன சொன்னாள்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment