பிரபஞ்சத்தின் ஆதார சக்தி, ஆதியஞ்சோதி உரு இப்போது அழகிய குழந்தை உருவில்.
பெற்றெடுத்த பாக்யசாலிகளுக்கு வளர்க்கும் பேறு இல்லை. அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு, ப்ரேமையில் நனைவதற்காகக் கிளம்பினான் இறைவன்.
இறைவனின் சொற்படி குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் வசுதேவர்.
ச்ருஷ்டியின் தலைவன் அவன். மாயையே அவனது சக்தி. அவன் கிளம்பினால் தடையேது.
உயிர்த்திருக்கும் பொருள்களை ஜடமாகவும், ஜடப் பொருள்களுக்கு உயிரூட்டவும், எண்ணிய மாத்திரத்தில் அதை செயலாக்கவும் வல்லவன்.
அவனளித்த ஞானத்தினால், இங்கு வசுதேவர் மிளிர்கிறார்.
அவனளித்த ஞானத்தினால், இங்கு வசுதேவர் மிளிர்கிறார்.
ஐந்தடுக்குக் காவலில், பாதாளச் சிறையில், கம்சனுக்குத் தெரியாமல் காற்று கூட புக முடியாத இடத்தில் இருக்கிறார். இறைவனோ தன்னைக் கொண்டுபோய் கோகுலத்தில் விடுமாறு கூறுகிறான்.
இங்கு எழும் கேள்விகள் ஆயிரம்.
அத்தனை காவலைத் தாண்டி எப்படிச் செல்வது?
வசுதேவர் தேவகி இருவரின் கைகளும் கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. பெரிய பெரிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் சாவிகள் காவலாளிகளிடத்தில்.
இத்தனையும் தாண்டிச் சென்றாலும் வெளியில் அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. அப்போதுதான் பிறந்த பச்சிளங்குழந்தையை எப்படிக் கொண்டு செல்வது?
வழியில் பெருவெள்ளத்தோடு யமுனை கரை புரண்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது. கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடப்பது எப்படி?
படகில் சென்றால், படகோட்டி கம்சனிடம் கூறமாட்டானா?
ஆற்றங்கரையிலும் காவல் உண்டே.
அங்கு கோகுலத்தில் நந்தகோபர் என்ன சாதாரண ஆளா? அவர் அங்கு சிற்றரசராயிற்றே.
அவரது அரண்மனையில் காவல் இருக்குமே.
பல ஆண்டுகள் கழித்து அவரது மனைவிக்கு செல்வமாய் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதை மாற்றிக்கொள்ள யார் அனுமதிப்பார்?
ஞானம் பெற்ற வசுதேவர், ஒரே ஒரு கேள்விகூட கேட்கவில்லை. அவ்வளவு ஏன்? இத்தகைய கேள்விகளில் ஒன்றுகூட அவர் மனத்தில் எழவே இல்லை.
ஞானத்தின் அடையாளம் பூரண சரணாகதி. இறைவன் சொல்லியிருக்கிறான். நடக்கும். எப்படி என்ற கேள்வி எதற்கு? நடப்பதை வேடிக்கை பார்ப்பதும், அதில் தனக்கான பங்கை சரிவரச் செய்வதுமே சரணாகதனின் லக்ஷணம்.
கையில் குழந்தையை எடுத்துக்கொண்டதும் அவரது சங்கிலிகள் பட் பட்டென சிதறின.
அங்கொரு கூடை தோன்றியது. தேவகி, தன் பழம்புடைவைகளில் ஒன்றைப் போட்டு பீதாம்பரதாரிக்கு கூடைக்குள் ஒரு மஞ்சம் செய்தாள். பெற்ற குழந்தையை அக்கணமே பிரியும் அளவிற்கு ஞானத்தினால் முதிர்ச்சி பெற்றிருந்தாலும், தாயுள்ளத்திற்கும் முன் எதுவும் எடுபடுவதில்லை.
அங்கொரு கூடை தோன்றியது. தேவகி, தன் பழம்புடைவைகளில் ஒன்றைப் போட்டு பீதாம்பரதாரிக்கு கூடைக்குள் ஒரு மஞ்சம் செய்தாள். பெற்ற குழந்தையை அக்கணமே பிரியும் அளவிற்கு ஞானத்தினால் முதிர்ச்சி பெற்றிருந்தாலும், தாயுள்ளத்திற்கும் முன் எதுவும் எடுபடுவதில்லை.
குழந்தையைக் கூடையில் வைத்து, கூடையைத் தலையில் வைத்துக் கிளம்பினார் வசுதேவர்.
இறைவன் பூமியில் அவதாரம் செய்ய ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லாம் வல்லவன் பிறந்துதான் காரியங்களைச் செய்ய வேண்டுமா? சங்கல்ப மாத்திரத்தில் செய்ய வல்லவனாயிற்றே என்ற கேள்வி எழாமல் இல்ல.
எனில், எதற்குப் பிறக்கிறான்?
தன் பெயரை நிறுத்த, அதன் மூலம் பாமரரையும் எண்ணற்ற உயிர்களையும் கரையேற்ற.
கலியுகத்தின் மக்களுக்கு எந்த உபாசனையும் செய்யப் பொறுமையோ நேரமோ இல்லை எனும்போது, கதியில்லை என்று தள்ளிவிடக்கூடாதே என்ற கருணை.
அவன் வெண்ணெய் திருடினால்தானே நவநீதசோரன் என்ற பெயரிட்டு அழைக்க இயலும். மாடு மேய்த்தால்தானே கோபாலா என்று ஆசையாய்க் கூப்பிட இயலும். மலையைத் தூக்கினால்தானே கிரிதாரி என்று கொண்டாடலாம்.
எத்தனை எத்தனை லீலைகள். அத்தனையும் பெயர்கள். பெயரைச் சொன்னாலே போதும், லீலையும், மகிமையும் விளங்கும்.
தன் பெயரை நிலைநிறுத்தவும், தன்னைக் கொண்டாடும் வழிமுறைகளை காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கவுமே இறையின் அவதாரம்.
அவதார காலத்தில் தன்னைக் காணும் உயிர்களைக் கரையேற்றுகிறான் என்றால், அவதாரம் முடிந்தபின், தன் பெயரை வைத்துக்கொண்டே கோடிக்கணக்கான உயிர்களைக் கரையேற்றுகிறான்.
கோவில்களில் உற்சவங்கள் என்றால் ஸ்வாமி புறப்பாடாகி வருவதைக் காண்கிறோம். தென்னிந்தியாவின் அழகு இந்த உற்சவங்கள். அதைத் தான் பிறந்ததுமே துவங்கினான் இறைவன். கோகுலத்தை நோக்கி வசுதேவர்மீதேறி புறப்பாடு நடக்கிறது. பின்னாலேயே போவோம் வாருங்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..