வைகுண்டத்தில் பரவாசுதேவனாக சேவை சாதிக்கும் பகவான், ஸாக்ஷாத் ப்ரும்ம ஸ்வரூபம். அவரை தரிசனம் கூட செய்ய முடியாமல், பாற்கடலின் கரையிலேயே நின்று ப்ரும்மாவை முன்னிட்டுக்கொண்டு தத்தம் குறைகளைச் சொன்னார்கள் தேவர்கள்.
ப்ரும்மாவாவது நேரில் பகவானைக் கண்டாரா என்றால் இல்லை. அவருக்கும் துர்லபமானது (கடினம்) பகவத் தரிசனம். உள்ளே அனுமதிக்கவும் இல்லை. மானசீகமாக ப்ரும்மாவின் தியானத்தில் பேசினார் பகவான்.
அப்பேர்ப்பட்ட பகவான் இப்போது தேவகியின் வயிற்றில்.
ஒரு நெகிழிப்பை போன்ற மெல்லிய கர்பப்பை. அதைச் சுற்றி சந்தனமும், பன்னீருமா வைத்திருக்கிறார்கள்?
ஒரு பக்கம் இரைப்பை. தாய் ஏதாவது சூடாகவோ குளிர்ச்சியாகவோ உண்டால், குழந்தையைத் தாக்கும். ஒரு பக்கம் கணையம், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், இரத்தம், மலம் இவை சூழ விளங்கும் கர்பப்பை.
வீட்டுக்குள்ளேயே இருக்கும் கழிப்பறையை நன்றாக சுத்தம் செய்திருந்தாலும்கூட, நாம் சாதாரணமாகத் திறந்து வைப்பதில்லை. மற்ற அறைகளிலில் அதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க கதவை மூடி வைக்கிறோம்.
இந்த மெல்லிய கர்பப்பைக்குள் முழுவதும் நீர், இருள். அந்நீரில் சிற்சிறு கிருமிகள் உண்டாகி குழந்தையின் மெல்லிய சருமத்தை அவ்வப்போது தீண்டும்.
தாயார் காரமான உணவு உண்டால் குழந்தைக்குக் கண் எரியுமாம்.
பத்து மாதங்கள் சிறைவாசம். கையை காலை விருப்பம்போல் நீட்டக்கூட முடியாமல், சுருண்டு கிடக்கவேண்டும்.
தாய் ஏதாவது பயமுறுத்தும் நாராசமான சத்தங்களைக் கேட்டால் குழந்தை அஞ்சும். தாயின் காம, கோப, பய உணர்வுகள் குழந்தையின் மனத்தையும் பாதிக்கும்.
கர்பப்பையைச் சுற்றி இருக்கும் மற்ற பாகங்களிலிருந்து நறுமணமா வீசப்போகிறது?
இத்தகைய கொடுமையான கர்ப வாசத்திற்கு பல மஹான்கள் கூட அஞ்சுவதைப் பார்க்கிறோம்.
மஹாலக்ஷ்மித் தாயார் கூட கர்பவாசம் வேண்டாம் என்று பொற்றாமரையிலோ, துளசிச்செடியின் அடியிலோ, பூமிக்கடியில் பெட்டிக்குள்ளோ நேரடியாக குழந்தையாக அவதாரம் செய்கிறாள்.
ஆனால், பகவானுக்கு எவ்வளவு ஸௌலப்யம் (எளிமை) பாருங்கள்! யோகியர்க்கும் துர்லபமான இறைவன் இத்தகைய கொடிய கர்பவாசத்தை விரும்பி ஏற்கிறான்.
இவ்வளவு சுலபனாக பகவான் வரும்போது அவனை விடலாமா?
இறைவனைச் சுமந்த தேவகி தேவமாதாகவே விளங்கினாள்.
வைகுண்டத்தில் தரிசனம் கூட கிடைக்காத தேவர்கள் இப்போது தேவகியைச் சுற்றி சுற்றி வலம் வந்து வணங்கித் துதி செய்கிறார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment