பகவானைத் துதி செய்த ப்ரும்மா பகவானை தியானம் செய்யத் துவங்கினார்.
ஸமாதிநிலையில் பகவான் ப்ரும்மாவிற்கு மட்டும் பிரத்யக்ஷமாகி பேசினார்.
ப்ரும்மாவே ஆனாலும், தேவர்களே ஆனாலும், பாற்கடலின் கரைக்கே சென்றாலும் பகவத் தரிசனம் சுலபமில்லை.
பகவான் ப்ரும்மாவிடம் கூறியவற்றை ப்ரும்மா ஸமாதி கலைந்ததும் தேவர்களிடம் கூறினார்.
தேவர்களே! பகவான் என்னிடம் கூறியதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
பூமியின் துயரத்தை பகவான் அறியமாட்டாரா என்ன? எனவே தானே பூமியில் அவதரிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். அவர் அவதாரம் செய்யும் சமயம் நீங்களும் உங்கள் அம்சங்களுடன் பூமியில் சென்று பிறக்கலாம்.
பரமபுருஷரான பகவான் வசுதேவனின் வீட்டில் அவதாரம் செய்யப்போகிறார். ( வீடு என்பது மனைவி என்று பொருள் கொள்ளப்படும்).
ஆதிசேஷன் அவருக்குக் கைங்கர்யம் செய்வதற்காக அவருடைய தமையனாகப் பிறக்கப்போகிறார். பகவத் கைங்கர்யத்தை விரும்பும் தேவமாதர்கள் அவ்விடத்தில் சென்று பிறக்கலாம்.
மஹாவிஷ்ணுவின் மாயை எனப்படும் அம்பிகையும் பகவானின் கட்டளைப்படி அவதரிக்க இருக்கிறார்.
கைங்கர்யத்தில் விருப்பமுள்ள அனைவரும் பகவான் பிறக்கப்போகும் ஸ்தலங்களிலும், லீலைகள் செய்யப்போகும் இடங்களிலும் சென்று பிறந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு ஏற்றம் கொடுக்கப்போகும் பிறவியாதலால் மாதராய்ப் பிறத்தல் நலம்.
என்று கூறிவிட்டு, பூமிக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி தன் இருப்பிடம் சென்றார்.
பகவான் தான் அவதரிக்கப்போவதை ப்ரும்மாவிடம் மட்டுமே தெரிவித்தார். அவர்தான் அதை மற்ற தேவர்களுக்குத் தெரிவித்தார். அப்படி இருக்க பகவான் அவதரித்தும் அவரது லீலைகளில் மயங்கி, கண்ணனைச் சோதனை செய்யவும் முனையப்போகிறார்.
ப்ரும்மாவே ஆனாலும் மாயை விடாது. மாயையின் பலம் அத்தகையது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment