எப்போதெல்லாம் அசுர இயல்பு கொண்டவர்கள் அரசர்போல் வேடமிட்டு இந்நிலவுலகை ஆக்கிரமித்து மக்களைத் துன்புறுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவதாரம்செய்து அவர்களை அழிக்கப் போகிறார்.
தீயோரை அழிப்பதைக்காட்டிலும் அவரது முக்கியமான பணி நல்லோரைக் காப்பதாகும்.
மேலும், கலியுகத்தில் பிறந்து தவிக்கும் மக்களுக்கு அருள் செய்வதற்காக பல திருவிளையாடல்களைச் செய்து அவற்றின் கதைகளை ஸாதுக்கள் மூலம் பரப்புகிறார். அவற்றைக் கேட்பவர்களுக்கு, உடல் பற்றிய துன்பங்கள், மனக்கவலை, அறியாமை ஆகியவை முற்றிலுமாய் அழிந்துவிடும்.
பகவானின் புகழே அகத்து மாசைக் கழுவும் நன்னீராம். இரு காது மடல்களிலிட்டு ஆசைதீரப் பருகினால், அவை ஜீவன்களின் உலக வாசனைகளை அழித்துவிடும்.
அன்பு குழைந்து வழியும் புன்முறுவல், அழகான ஓரப்பார்வை, இன்னமுதாகத் தெறிக்கும் சொற்கள், ஒவ்வொரு அங்கத்திலும் ததும்பி வழியும் அழகு, ஆகியவற்றால் இவ்வுலகையே ஆனந்தத்தில் ஆழ்த்துகிறார்.
தேவர்களைப் போல் இமைக்காமல் இருந்து காணவேண்டிய அழகுத் திருமுகம். கண்ணிமைக்கும் நேரம் இறைவனைக் காணமுடியாததால் அடியார்கள் இமை மீது கோபம் கொள்கிறார்கள்.
அத்தகைய பகவான் தேவகியின் திருவயிற்றில் தோன்றினார். பாமரக் குழந்தையின் திருமேனி ஏற்றார். பிறந்தது வடமதுரைச் சிறையில். வளர்ந்தது நந்தகோகுலத்தில், இடைச் சேரியில்.
இடையர்கள், இடைச்சிகள் அனைவர்க்கும் இன்பத்தின் எல்லையைக் காட்டினார்.
தானும் கன்றுகள் மேய்த்தார். பின்னர் வடமதுரை திரும்பினார். தீயோர் அனைவரையும் அழித்தார். கடலின் நடுவே துவாரகை என்னும் நகரம் அமைத்து அங்கு குடியேறினார்.
பதினாறாயிரம் பெண்களைத் திருமணம் செய்தார். நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் பெற்றார். பற்பல வேள்விகள் செய்து, அதில் மகிழ்ந்தார்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த பூசலில் கௌரவர்களின் தீயொழுக்கத்தால் பூமிக்கு பாரமாக இருந்த அனைவரையும் கொன்றார்.
தன் கடைக்கண் பார்வையாலேயே பல அக்ஷௌஹிணி சேனைகளின் உயிரை மாய்த்தார். அர்ஜுனன் வென்றான் என்று உலகெங்கிலும் ஜெயகோஷம் செய்தார்.
தன் உற்ற நண்பரான உத்தவனுக்கு பரமாத்ம தத்துவத்தை உபதேசம் செய்துவிட்டு பரமதம் எழுந்தருளினார்.
இவ்வாறு மிகவும் சுருக்கமாக ஸ்ரீ சுகர் கண்ணனின் கதையை எடுத்துரைத்தார்.
ஒன்பதாவது ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment