ரிஷபதேவர் தன் மகன்களுக்கும் மக்களுக்கும் சில நல்லுபதேசங்கள் செய்தார்.
அதன் ஸாரம்.
* இவ்வுடல் கர்மவினையினால் தோன்றியது. வினைகளைப் போக்கிக்கொண்டு ப்ரும்மானந்தம் பெறவே ஏற்பட்டிருக்கிறது. உலக விஷயங்களில் மாட்டிக்கொண்டு தவிப்பதற்கு அல்ல.
* சான்றோர்களுக்குச் செய்யும் தொண்டு மோக்ஷத்தின் வாசல். பெண்பித்து கொண்டு அலையும் வீணர்களின் தொடர்பு துன்பத்திற்கு வழி.
*ஆன்றோர் என்பவர் தீயவழி நீக்கி நல்வழி நிற்பவர். காமம் நீக்கி கோபம் தவிர்த்தவர். அனைவரிடமும் சமநோக்குடையவர். அனைவர்க்கும் நன்மையே நினைப்பவர். எப்ப்போதும் அறநெறி வழுவாதவர்.
* உடலையும், மனைவி மக்களையும்காப்பாற்ற மிதமான முயற்சி செய்து, போதுமான அளவு பொருளீட்டி, ஸர்வேஸ்வரனான என்மீது பக்தி பூண்டு ஒழுகுபவர்களே பெரியோர்.
*கர்மங்களினால் ஏற்படும் எண்ணங்களே வாசனையாகப் பதிகிறது. அதுவே பிறவிக்குக் காரணம்.
*என்னிடம் பக்தி ஏற்படாதவரை கர்மத்தளை விலகாது.
*நான் எனது என்ற எண்ணம் அழியும்போதே ஒருவனது அனைத்து பற்றுகளும் விடுகின்றன.
*சம்சாரக் கடலைக் கடக்க விரும்புகிறவன்
தைரியம், பகுத்தறிவு, விடாமுயற்சி, சத்வகுணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.
தைரியம், பகுத்தறிவு, விடாமுயற்சி, சத்வகுணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.
*ஆத்மா எது? ஆத்மா இல்லாதது எது என்று தெளியவேண்டும்.
*இன்பதுன்ப இரட்டைகளைப் பொறுக்கவேண்டும்.
*உண்மை எது? பொய் எது? என்று ஆராய்ந்து அறியவேண்டும்.
*குருவிடமும் என்னிடமும் மாறாத பக்தி கொண்டிருக்கவேண்டும்.
* என்னையே எல்லாமாகக் காணவேண்டும்.
*எப்போதும் என் குணங்கள் நிரம்பிய கதைகளைக் கேட்கவேண்டும்.
*ப்ராணவாயுவை ப்ராணாயாமத்தாலும், பொறிபுலன்களை ப்ரத்யாஹாரத்தாலும், மனத்தை தாரணையாலும், புத்தியை தியானத்தாலும் தன்வசமாக்கிக்கொள்ளுதல், நற்செயல்களில் ஈடுபாடு, பெரியோர்களும் சாஸ்திரங்களும்ப்கூறும் வாக்கில் நம்பிக்கை, அந்தந்த வாழ்க்கை முறைப்படி ப்ரும்மசர்யம் பேணுதல், செய்யும் செயலில் கவனமும் ஈடுபாடும், வீண் வார்த்தைகள் பேசாத நாவடக்கம், எங்கும்எதிலும் நான் இருப்பதை உணர்தல் ஆகியவற்றால் தன் லிங்க சரீரத்தை ஒருவன் நீக்கிக்கொள்ளலாம்.
*இவை அனைத்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டவை. இவற்றைக் கொண்டு தளைகளை உடைத்தபின், மேற்கூறிய சாதனைகளையும் விட்டு விட வேண்டும்.
*உலக ஆசைகளில் சிக்கி ஒரு நிமிட ன்பத்திற்காக பகைமை கொள்கிறார்கள். அந்த அறிவிலிகள் பகைமையால் நரகம் வந்து சேரும் என்பதை உணர்வதில்லை.
*அரசன் குடிமக்களையும், தந்தை தனயனையும், குரு சீடனையும் இம்மார்கத்தில் திருப்பவேண்டும். அவர்கள் கேட்காவிடினும் கோபப்படாமல், பொறுமையோடு எடுத்துச் சொல்லவேண்டும்.
*படுகுழியில் விழப்போகும் ஒருவனை நல்லவன் பார்த்துக்கொண்டிருப்பானா? தடுக்கமாட்டானா?
*இறையன்பை ஊட்டி மரணபயத்தைப் போக்குபவனே ஆசார்யன், உறவினன், நண்பன் அனைத்தும்.
*நீங்கள் அனைவரும் பரதனை அரசனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
* அசையாத அனைவற்றிலும் மரங்கள் உயர்ந்தவை. அதை விட உயர்ந்தவை அசையும் ஜீவராசிகள். ஊர்வனவற்றைக் காட்டிலும் பறப்பவை சிறந்தவை. அவற்றைக் காட்டிலும் விலங்குகள் சிறந்தவை. விலங்குகளை விட மனிதன் சிறந்தவன். மனிதனை விட தேவர்கள் சிறந்தவர்கள். தேவர்களை விடச் சிறந்தவன் இந்திரன். அவனை விட ப்ரும்மாவின் புதல்வர்களான ப்ரஜாபதிகள். அவர்களை விடச் சிறந்தவர்கள் ருத்ரனும், ப்ரும்மாவும். ப்ரும்மா என்னிடமிருந்து தோன்றியவர். அவரை விட உயர்ந்தவன். என்னிலும் சிறந்தவர்கள் அந்தணர்களும் என் அடியாரும்.
*வேதத்தை அழியாது பாதுகாக்கும் அந்தணர்கள் நடமாடும் கோவில்கள்.
*குழந்தைகளே! இடம் காலத்திற்கேற்ப, அனைத்து ஜீவராசிகளிலும் என்னைக் கண்டு அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள்.
*பொறிகளின் பயன் என்னை ஆராதிப்பதே. இல்லையேல் அவை நரகத்தில் வீழ்த்திவிடும்.
இவ்வாறு கூறிவிட்டு பரதனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார் ரிஷபர்.
அக்கணமே அனைத்தையும் துறந்து பற்றுக்களை விடுத்து பித்துப் பிடித்தவர்போல் ஆடையையும் களைந்து திகம்பரர் ஆனார். தலையில் சடைமுடியுடன், தான் செய்துவந்த அக்னிஹோத்ரத்தில் ஆஹவனீயம் என்ற அக்னியை தன்னுள்ளேயே ஆரோபணம் செய்துகொண்டு ப்ரும்மாவர்த்தம் என்ற தன் தேசத்தைவிட்டு வெளியேறினார்.
மக்கள் என்ன கூறினாலும் மௌனமாக, ஜடம் போலவும், குருடன் போலவும், ஊமை செவிடன் போலவும், பிசாசு போலவும், பித்தன் போலவும், அவதூதம் என்னும் அதிவர்ணாஸ்ரமியாகத் திகழ்ந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment