முதுமையை சாபமாகப் பெற்ற யயாதி, எவரேனும் விரும்பினால் அவருடன் மாற்றிக்கொள்ளலாம் என்ற விமோசனத்தையும் சுக்ராசார்யாரிடமிருந்து பெற்றான்.
தன் நகரம் திரும்பி, தன் மூத்த மகனான யதுவிடம், உன் தாத்தா எனக்களித்த சாபத்தால் முதுமை வந்துவிட்டது. என் மனத்தில் இன்னும் உலகியல் ஆசைகள் அடங்கவில்லை. உன் இளமையை எனக்குக் கொடு. சில காலம் நான் இன்பங்களை அனுபவித்துவிட்டு மீண்டும் முதுமையை வாங்கிக்கொள்கிறேன். என்றான்.
யது அதற்கு மறுத்துவிட்டான். யயாதியின் மற்ற புதல்வர்களான, த்ருஹ்யு, துர்வஸு, அனு ஆகிய மூவரும்கூட யயாதி எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மறுத்துவிட்டனர்.
யயாதி் கடைசி மகனான பூருவை அழைத்துக் கேட்டான்.
அவனோ,
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அளிக்கவல்ல இவ்வுடலை அளித்ததே நீங்கள்தான். உங்களுக்கு என்னால் என்ன கைம்மாறு செய்து விட முடியும்? தங்களை மகிழ்விப்பதே எனக்கு எல்லா அருளையும் பெற்றுத்தரும்.
தந்தை நினைப்பதை அவர் சொல்லாமலே நிறைவேற்றுபவன் உத்தமன். தந்தை சொல்வதைச் செய்பவன் மத்யமன். தந்தை கூறியபின் அதை ஈடுபாடின்றிச் செய்பவன் அதமன். செய்யாதவன் மகனே அல்லன்.
என்று சொல்லி முதுமையை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இளமையைக் கொடுக்க இசைந்தான்.
யயாதி இளமையைப் பெற்று பற்பல உலகியல் இன்பங்களை விருப்பம்போல் அனுபவித்தான். ஏழு தீவுகளுக்கும் ஒரே தலைவனாக இருந்து தந்தை போல் மக்களைக் காத்தான்.
அவனிடம் அதிக அன்பு கொண்டிருந்த தேவயானியும் நன்கு பணிவிடை செய்து, அவனுக்கேற்ற இல்லாளாக விளங்கினாள்.
யயாதி பற்பல வேள்விகள் செய்து ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்தான்.
ஆயிரமாண்டுகள் விருப்பம்போல் வாழ்ந்த யயாதி, எவ்வளவு அனுபவித்தும் புலன்கள் அடங்காததைக் கண்டு ஒருநாள் வெட்கினான்.
தேவயானியை அழைத்து, புலன்களின் பற்றால் தன் மனம் அடங்காததையும் தன் இழிநிலையைச் சொல்லி வருந்தினான்.
இனியும் இவ்வாறு இருக்கலாது என்று உணர்ந்து பூருவிடம் அவனது இளமையைக் கொடுத்துவிட்டு, தன் கிழத்தனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டான்.
இனியும் இவ்வாறு இருக்கலாது என்று உணர்ந்து பூருவிடம் அவனது இளமையைக் கொடுத்துவிட்டு, தன் கிழத்தனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டான்.
தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவிற்கும், தென்திசை நாடுகளை யதுவிற்கும், மேற்றிசை நாடுகளை துர்வஸுவிற்கும், வடதிசை நாடுகளை அனுவிற்கும் அரசர்களாக நியமித்தான்.
பூருவை தன் ராஜ்ஜியத்தின் அரசனாக்கிவிட்டு அவனை ஏழு த்வீபத்திற்கும் ஒரே சக்ரவர்த்தியாக அறிவித்து, மற்ற புதல்வர்களை பூருவிற்குக் கீழ் அரசாட்சி செய்யுமாறு பணித்தான்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக புலன்களின் பிடியிலிருந்த யயாதி, இறக்கை முளைத்ததும் கூட்டை விட்டுப் பறக்கும் பறவை போல் ஒரு கணத்தில் சிற்றின்ப வேட்கையைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினான்.
வனத்தை அடைந்த யயாதி, ஆன்மாவின் உண்மை நிலையை உணர்ந்து, இவ்வுடலை மறந்து நற்கதியடைந்தான்.
அச்செய்தியைக் கேள்வியுற்ற தேவயானியும், விரக்தியடைந்து பற்றை ஒழித்தாள். இறைவனையே த்யானம் செய்து நற்கதி அடைந்தாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment