க்ஷத்ரவ்ருத்தனின் வம்சத்தில் வந்த ரம்பனுக்கு ரபஸன், கம்பீரன் என்று இரு மகன்கள். கம்பீரனின் மகன் அக்ரியன்.
அக்ரியனின் மனைவி யிடமிருந்து அந்தண வம்சம் துவங்கியது.
புரூரவஸின் வம்சத் தோன்றலான அனேனஸின் புதல்வன் சுத்தன். அவனது மகன் சசி. அவனது மகன் தர்மஸாரதி.
அவனுக்கு சாந்தரயன் பிறந்தான். அவன் இயல்பாகவே ஆன்மாவை உணர்ந்தவனாக இருந்தான். அதனால் அவனுக்கு சாதனைகள் பழகவேண்டிய அவசியமில்லாமல் போனது. அவனுக்குச் சந்ததி இல்லை.
ஆயுவின் மற்றொரு மகனான ரஜீக்கு ஐநூறு புதல்வர்கள் பிறந்தனர். அவன் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அசுரர்களைக் கொன்று ஸ்வர்கத்தை அளித்தான்.
ஆனால், பிரகலாதன் போன்ற எதிரிகளிடம் பயந்த இந்திரன், ரஜியிடம் ஸ்வர்கத்தை அளித்து அவனிடம் சரணடைந்து தன்னையும் காக்கும்படி வேண்டினான். ரஜி இறந்த பிறகு, அவனது மகன்களிடம் ஸ்வர்கத்தைத் திருப்பிக் கேட்டான் இந்திரன். அவர்கள் இந்திரனிடம் திரும்ப ஒப்படைக்காததோடு, வேள்விகளின் அவியுணவை அவர்களே பெற்றுக்கொண்டனர்.
அதனால் இந்திரன் சென்று தேவகுருவைச் சரணடைந்தான். அவர் இந்திரன் பொருட்டு ஒரு ஆபிசார வேள்வி செய்ய, அதன் பயனாக, ரஜியின் புதல்வர்களுக்கு புத்தி தடுமாற்றம் ஏற்பட்டு அறநெறி பிறழ்ந்தனர். அவர்களின் தீவினையைக் கொண்டே அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான் இந்திரன்.
க்ஷத்ரவ்ருத்தனின் பேரன் குசன். அவனது வழித்தோன்றல்கள் முறையே ப்ரதி, ஸஞ்சயன், ஜயன், க்ருதன், ஹர்யவனன், ஸஹதேவன், ஹீனன், ஜயஸேனன், ஸங்க்ருதி, ஜயன். இவர்களுள் ஜயன் மாபெரும் வீரன். மஹாரதனும் ஆவான். இனி நகுஷனின் வம்சத்தைப் பார்க்கலாம்.
புரூரவஸின் மகனான ஆயுவின் புதல்வன் நகுஷன்.
அவனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயதி, வியதி, க்ருதி என்று ஆறு புதல்வர்கள்.
அவனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயதி, வியதி, க்ருதி என்று ஆறு புதல்வர்கள்.
நகுஷன் தன் மூத்த மகனான யதிக்குப் பட்டம் கட்ட விரும்பினான். ஆனால் யதி அதை ஏற்கவில்லை. அரசுக்கட்டில், ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றினுள் நுழைந்தால் பரமனை மறந்துவிட நேரிடும் என்று உணர்ந்திருந்தான் யதி.
நகுஷன் இந்திர பதவியில் இருந்தான். இந்திராணியிடம் ஆசைப்பட்டு அவளை அடைய விரும்பினான். ஸப்தரிஷிகளால் சபிக்கப்பட்டு இந்திர பதவியை இழந்து மலைப்பாம்பாக ஆனான். அதன் பின் யயாதி அரசனானான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment