மன்னன் அங்கனின் மகன் கனபானன். அவனது மகன் திவிரதன், திவிரதனின் மகன் தர்மரதன். அவனது மகன் சித்ரரதன்.
சித்ரரதனின் மற்றொரு பெயர் ரோமபாதன் என்பதாகும். அவன் தசரதனின் நண்பன். இவனுக்கு மக்கட்பேறில்லாததால் தசரதன் தன் மகளான சாந்தையை தத்துக் கொடுத்தார்.
ஒரு சமயம் ரோமபாதனின் பலகாலம் தேசத்தில் மழை பொய்த்துப் போயிற்று. அதனால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவ்வமயம் அவன் பற்பல கணிகைப் பெண்களை அனுப்பி நாட்டியம், பாடல்கள், வாத்தியங்கள் ஆகியவற்றால் காட்டிலிருந்த ரிஷ்ய ச்ருங்கரை மயக்கி அங்க தேசத்திற்கு அழைத்துவந்தான். ரிஷ்யச்ருங்கர் நாட்டின் எல்லையை மிதித்ததுமே பெருமழை பெய்து நாட்டின் பஞ்சம் தீர்ந்தது.
பின்னர் நாட்டின் சுபிக்ஷத்திற்காக அவரைத் தன் நாட்டிலேயே தங்க வைக்க விரும்பிய ரோமபாதன் சாந்தையை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.
இந்த ரிஷ்ய ச்ருங்கர் விபண்டக முனிவரின் புதல்வர். மானின் வயிற்றில் தோன்றியவர்.
தசரதன் பிள்ளைப்பேறின்றி தவித்தபோது, ரிஷ்யச்ருங்கர் மருத் தேவதைகளைக் கொண்ட புத்ரகாமேஷ்டியை செய்துவைத்தார். அதனால் தசரதர்க்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
ரோமபாதனுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அவனது மகன் சதுரங்கன். அவனது மகன் ப்ருதுலாஷன். அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ருஹத் கர்மா, ப்ருஹத்பானு ஆகிய மூன்று புதல்வர்கள். ப்ருஹத்பானுவின் மகன் ப்ருஹத்மனஸ். அவனது மகன் ஜயத்ரதன். அவனது வம்சம் முறையே விஜயன், திருதி, திருதவிரதன், ஸத்கர்மா, அதிரதன் ஆகியோர்.
அதிரதனுக்கு மக்கட்பேறில்லை. அவன் ஒருநாள் கங்கையில் நீராடும்போது ஒரு பெட்டி மிதந்து வந்தது. அதனுள் ஒரு குழந்தை இருந்தது. அதை இறைவனின் பிரசாதமாக நினைத்து கர்ணன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தான்.
அந்தக் குழந்தை பாண்டுவின் மனைவி குந்தியின் குழந்தை. திருமணமாவதற்கு முன்பே சூரியனின் அருளால் குந்திக்கு குழந்தை பிறந்தது. அதை வளர்க்க அஞ்சிய குந்தி பெட்டியில் வைத்து கங்கையில் விட்டுவிட்டாள். அந்தக் குழந்தைதான் கர்ணன்.
துரியோதனின் நண்பனான கர்ணனை அவன் அங்கதேசத்தின் அரசனாக்கினான்.
கர்ணனின் மகன் வ்ருஷஸேனன்.
கர்ணனின் மகன் வ்ருஷஸேனன்.
யயாதியின் மூன்றாவது மகனான த்ருஹ்யுவின் வம்சம் முறையே பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், தர்மன், திருதன், துர்மனன், பிரசேதஸ். அவனுக்கு நூறு புதலவர்கள். அவர்கள் வடதிசையில் இருந்த மிலேச்சர்களை ஆண்டனர்.
யயாதியின் இரண்டாவது மகன் துர்வஸுவின் வம்சம் வஹ்னி, பர்க்கன், பானுமான், திரிபானு, காந்தமன், மருதன். மருதனுக்குப் பிள்ளைப்பேறில்லாததால், பூரு வம்சத்தில் பிறந்த துஷ்யந்தனை வளர்ப்பு மகனாக்கிக் கொண்டான்.
பூருவைத் தவிர மற்ற பிள்ளைகளுக்கு யயாதியின் சாபத்தால் அரசுரிமை இல்லாமல் போயிற்று. துஷ்யந்தன் மருதனுக்கு வளர்ப்பு மகனான போதும் அரச போகத்திற்காக மீண்டும் புரு வம்சத்திற்கே சென்றுவிட்டான்.
ஹே! பரீக்ஷித்! இனி யயாதியின் மூத்த மகனான யதுவின் வம்சத்தை விரிவாகக் கூறுகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment