ரோஹிதனின் மகன் ஹரிதன். அவனது மகன் சம்பன். இவன் சம்பா என்னும் நகரத்தை உருவாக்கினான். இவனது மகன் சுதேவன். அவனது மகன் விஜயன்.
விஜயனின் மகன் பருகன். அவனது மகன் விருகன். அவனது மகன் பாகுகன். இவன் பகைவர்களிடம் தோற்று மனைவியுடன் காட்டிற்குச் சென்று இறந்துபோனான். உடன் கட்டை ஏறப்போன அவனது மனைவியை கர்பிணி என்பதால் ஔர்வ முனிவர் தடுத்தார்.
அவள் கருவுற்றிருப்பதை அறிந்த அவளது சக்களத்திகள் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தனர்.
ஆனால், நஞ்சு குழந்தையைப் பாதிக்கவில்லை. அவன் நஞ்சுடன் சேர்ந்து பிறந்தான். அதனால் அவனுக்கு ஸகரன் என்ற சிறப்புப் பெயர் வந்தது.
ஸகரனது புதல்வர்களால் தோண்டப்பட்டு, ஸாகரம் உண்டாக்கப்பட்டது.
பூமண்டலத்தின் சக்ரவர்த்தியானான் ஸகரன். தன் குருவான ஔர்வ முனிவரின் கட்டளைப்படி தாலஜங்கம், யவனம், சகம், ஹைஹயம் மற்றும் பர்பர தேசத்தவர்களைக் கொல்லாமல் விட்டான். சிலரது தலையை மழித்தும், சிலரைப் பரட்டைத்தலையர்களாக வும், சிலரைப் பாதி மழித்த தலையராகவும் செய்து அனுப்பிவிட்டான்.
மேலும் சில பகைவர்களை உயிக்கொலை செய்யாமல், பலவாறு அவமானப்படுத்தித் துரத்திவிட்டான்.
அதன் பின் குருவின் கட்டளைப்படி, பகவான் நாராயணனை வேள்விகளால் ஆராதித்தான்.
ஸகரனது மனைவிகள் ஸுமதி, கேசினி ஆகியோர். ஸுமதியின் புதல்வர்கள் அறுபதினாயிரம் பேர்.
ஸகரன் ஏராளமான அசுவமேத யாகங்கள் செய்தான். அதனால் தன் பதவிக்கு ஆபத்து வருமோ என்றஞ்சிய தேவேந்திரன் அடுத்த வேள்வியின் குதிரையைக் கவர்ந்து சென்று கபிலரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
வேள்விக் குதிரையைக் காணாததால், கண்டுபிடித்துக்கொண்டு வரும்படி ஸகரன் தன் புதல்வர்களை அனுப்பினான்.
ஸார்வபௌமனின் மகன்கள் என்ற செருக்குடன் ஸகரனின் புதலவர்கள் பூமண்டலம் முழுதும் குதிரையைத் தேடி அலைந்தனர். பின்னர் பூமியின் கீழ் உலகங்களில் தேடுவதற்காகத் தோண்டினர்.
அவ்வாறு தோண்டும்போது பூமியின் வடகிழக்கு மூலையில் கபில முனிவரின் குடிலின் அருகில் வேள்விக் குதிரையைக் கண்டனர்.
தேவேந்திரன் அவர்களது புத்தியில் மயக்கம் தோற்றுவிக்க, அந்த அரசகுமாரர்கள் அனைவரும் கபிலர்தான் குதிரையைத் திருடினார் என்றெண்ணினார்கள்.
உடனே அவர்கள் அனைவரும் புத்தி கெட்டுப்போன நிலையில், இவன்தான் திருடன். இவனைக் கொல்ல வேண்டும் என்று கத்திக்கொண்டே கபிலரை நோக்கி ஓடிவந்தனர்.
சான்றோரை அவமதித்ததன் பயனாய், தங்கள் உடலிலேயே எழுந்த ஜாடராக்னியால் எரிக்கப்பட்டு சாம்பலாயினர்.
சுத்த ஸத்வகுணமுள்ள கபிலருக்கு சினம் என்பதே இல்லை. அவரது குணம் உலகங்களைத் தூய்மையாக்குவது. ஸத்வ குணத்துடன் சினம் என்னும் தமோ குணம் சேர்வது ஆகாயத்துடன் பூமி இணைந்தது என்று சொல்வதைப் போன்றது.
ஸம்ஸாரக் கடலைக் கடக்கும் ஸாங்க்ய யோகம் என்னும் தோணியை அமைத்துத் தந்த கபில முனிவர் சாக்ஷாத் பகவானே ஆவார். அவருக்கு சினம் என்பதே இல்லை. அவர் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க, ஸகர புத்திரர்கள் தங்கள் வினைத்தீயால் அழிந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment