Monday, November 5, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 141 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 85

ப்ருது பேசியதைக் கேட்டதும், மிகவும் மகிழ்ந்தனர் ஸநகாதியர். ஸநத்குமாரர் பேசத் துவங்கினார்.

அரசே! அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிட்டவேண்டும் என்ற ஆசையால் இவ்வாறு கேட்டீர்கள்.

பகவானிடம் உறுதியான பற்று,
தீவிரமான ஈடுபாடு,
பகவானைப் பற்றிய தர்மநெறிகளில் நிற்றல்,
ஆன்மஞானம் பெறத் துடிப்பு,
மனத்தை ஒரு முகப்படுத்துதல்,
பகவானையே உபாசித்தல்,
எப்போதும் பகவத் கதைகளைச் செவியாரப் பருகுதல்,
உலகியல் செல்வங்களில் ஈடுபாடு கொண்டவரிடம் இணக்கமின்மை,
அவ்வகையான விருப்பங்களில் வெறுப்பு,
அவர்களது கொள்கைகளைத் தாம் ஏற்காதிருத்தல்,
பகவத் கதையமுதம் பருகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தனித்திருத்தல்,
அஹிம்சை,
துறவு மனப்பான்மை,
பயன் கருதாத யமம்,
நியமம், மற்றும் விரதங்களைக் கைக்கொளல்,
பிறர் மனம் புண்படப் பேசாதிருத்தல்,
தன்னலம் கருதிப் பொருள் சேர்க்காமை,
வெம்மை-குளுமை ஆகிய இரட்டையைப் பொறுத்தல்,
பகவத் குணங்களை வாயாரக் கீர்த்தனம் செய்தல்,

ஆகிய இவற்றால் பகவானிடம் பக்தி பெருகும்.

பின்னர் ஒரு ஸத்குருவை நாடி அடையவேண்டும்.

அவரது உபதேசத்தால், அஹங்காரமும், வாசனைகளும் அழிந்துவிடும்.

இதனால் மனிதன் நான் செய்கிறேன் என்று நினைக்கும் குணத்திலிருந்து விடுபடுகிறான். கனவு காணும்போது பார்க்கும் பொருளை, கனவு கலைந்த நிலையில் காண இயலாது. அதுபோல், ஞானத்தை அடைந்தவனுக்கு இந்த ப்ரபஞ்சமோ அதன் சுக துக்கங்களோ தெரிவதில்லை.

இந்த நிலையடைவதற்கு முன்னால், ஜீவாத்மாவிற்கும், பரமாத்மா விற்கும் இடையே மெல்லிய திரையாக விளங்குவது நான் செய்கிறேன் என்ற எண்ணமே.

அப்போது பார்க்கிறவன், பார்க்கப்படுகிறவன் என்ற வேறுபாடு இருக்கும்.

மனம் என்ற ஒரு எண்ணங்களின் கூட்டுப்பொருள்‌இருக்கும் வரையே ஜீவாத்மாவான, 'தான்', புலனுக்குப் புலனாகும் விஷயங்கள், இரண்டுக்கும் தொடர்பைக் கொடுக்கும் அஹஙாரம்‌ ஆகியவை புலப்படுகின்றன.

மனம் அழிந்துபோனாலோ, அல்லது செயலற்றுப்போனாலோ, வேறுபாடுகள் முற்றிலுமாக நீங்குகின்றன.

ஜலம் அல்லது முகம்‌பார்க்கும் கண்ணாடி இருக்கும் போது, பொருளும் அதன்‌ ப்ரதிபிம்பமும் தெரியும்.

மனமாகிய கண்ணாடி தன்னிஷ்டம்போல் செயல்பட்டால் அவன் தானல்லாத பிற பொருள்களைக் காண்கிறான்.

மனக் கண்ணாடி உடைந்தால் வேறுபாடுகள், ப்ரதிபிம்பம் எதுவுமே இல்லை.

உலக விஷயங்களைத் தேடி அலையும்‌ மனது, நுகர்ப்பொருளையே சிந்திப்பவனின் பகுத்தறிவை அழிக்கிறது.

குளம் முதலிய நீர்நிலைகளின் கரையில் வளரும் புற்கள், குளத்து நீரை உறிஞ்சிவிடுவது போல், மனம் புத்தியின் நல்லது தீது என்று ஆராய்ந்தறியும் சக்தியை உறிஞ்சி, தன்னிஷ்டம்போல் ஆட்டுவிக்கிறது.
ஆராயும் அறிவு அழியுமானால், முன்பு நடந்த செயல்களும்‌ மறந்துபோகின்றன.

ஞாபக சக்தி அழிந்தால் ஞானமும் நாசமடைகிறது. இதைத்தான் தன்னைத்தான் அழித்தல் என்கிறார்கள்.

ஆன்மா இருப்பதால்தான் அனைத்துப் பொருள்களிலும் அன்பு உண்டாகிறது. ஆன்மாவிற்கு தன்னாலேயே கேடு விளையுமானால் அதுவே ஆத்மஹத்தி.
இதுவே ஜீவனுக்கு பெரிய இழப்பு.
அதாவது ஆன்மாவை அறிவதைத் தவிர மற்ற அனைத்து இன்பங்களும் வீண்..

மேலும் தொடர்ந்து கூறலானார் ஸநத்குமாரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment