உண்மையில் ப்ருது நம் அனைவர்க்கும் எப்படிப் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பகவான் ப்ருதுவைக் கருணை பொங்கப் பார்த்துக்கொண்டு சொன்னார்.
அரசே! உனக்கு என்னிடம் ஆழ்ந்த பக்தி உண்டாகட்டும். கடக்க முடியாத மாயையை நீ எளிதில் கடந்துவிட்டாய்.
நான் உனக்கு ஏற்கனவே கட்டளையிட்டவற்றைக் குறையின்றிச் செய்து வா. உனக்கு நன்மைகள் உண்டாகட்டும்.
என்று கூறி, பின் ப்ருதுவின் வணக்கங்களையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டு வைகுண்டம் கிளம்பினார்.
பகவானுடன் வந்திருந்த தேவர்கள், முனிவர்கள், யக்ஷ கின்னரர்கள், மற்றவர்களையும் ப்ருது அவர்கள் பகவானே என்ற எண்ணத்துடன் பூஜை செய்தார். அனைவரும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
ப்ருதுவும் நகரம் திரும்பினார்.
நாடு திரும்பும் மன்னனை வரவேற்க மக்கள் நகரத்தை மிக அழகாக அலங்கரித்திருந்தனர்.
வழியெங்கிலும் கிராம மக்களும் நகர மக்களும் மன்னரை முறைப்படி உபசரித்தனர்.
பெரும் சிறப்பை அடைந்தபோதும் ப்ருது செருக்கடையவில்லை.
விதுரர் கேட்டார்.
ப்ருது மஹாவிஷ்ணுவின் பாலன சக்தியைக் கைகளில் ஏற்று பூமியிலிருந்து அனைத்துப் பொருள்களையும் கறந்தவர். அவ்வாறு அவர் பூமியிடமிருந்து பெற்று வாரி வழங்கியவற்றைத்தான் இந்திராதி தேவர்களும் லோகபாலர்களும்மனம் போல்அனுபவித்து வருகிறார்கள்.
ஆகையால் அவரது சரித்திரத்தின் சிறந்த செயல்களைக் கூறுங்கள்.
மைத்ரேயர் கூறத்துவங்கினார்.
ஒவ்வொருவரும் தமது நல்வினை, தீவினைப் பயனை அனுபவித்துக் கழிக்காத வரை சம்சார பந்தத்திலிருந்து விடுபட இயலாது.
எனவே கங்கை யமுனை நதிகளுக்கிடையே உள்ள புண்யக்ஷேத்ரத்தில் வசித்துக்கொண்டு, ப்ரார்ப்த கர்மத்தால் கிடைத்த போகங்களை மட்டும் அனுபவித்து புண்யகர்மாக்களை குறைத்தார்.
பகவானது அடியார்களையும், அந்தணர்களையும் தவிர்த்து, ஏழு தீவுகள் கொண்ட பூமண்டலம் முழுவதிலும் அவரது ஆணை கொடி கட்டிப் பறந்தது.
ஒரு சமயம் மன்னர் மஹாஸ்த்ரம் என்ற வேள்வி செய்ய தீக்ஷை பெற்றார். அங்கு முனிவர்களும் சான்றோர்களும் ஒன்று கூடினர்.
வந்திருந்த அனைவரையும் முறைப்படி உபசரித்த மன்னர், நக்ஷத்திரங்களின் மத்தியில் ஒளிரும் சந்திரன் போல் ப்ரகாசித்தார்.
நெடிதுயர்ந்த திருமேனி, உருண்டு திரண்ட மேனி, பொன்னென ஒளிரும் உடலழகு, தாமரையொத்த கண்கள், உயர்ந்த மூக்கு, அழகிய முகம், வசீகரமான தோற்றம், திரண்ட தோள்கள், முத்துப் பற்கள், கவரும்புன்சிரிப்பு, பரந்த மார்பு, ஆலிலை போன்ற வயிறு, அதில் மூன்று மடிப்புகள், சுழல் போன்ற தொப்புள், நல்ல காந்தி, தங்கத்தூண்கள் போன்ற தொடைகள், நுனி உயர்ந்த பாதங்கள், மெல்லிய சுருண்ட பளபளப்பான கேசங்கள், சங்கு போன்ற கழுத்து, அரையில் பட்டாடை, தோளில் பொன்னாடை, இவ்வாறு அழகு ஜொலிக்க, வேள்வி தீக்ஷை மேற்கொண்டதால், ஆபரணங்கள் அற்று, தர்பைப் புல்லைக் கையில் தரித்து, நற்காரியங்களைச் செய்தார்.
பின் அன்பும், கருணையும் ததும்பி வழியும் கண்களால் சபையோரைக் குளிர குளிர நோக்கினார்.
அவையிலுள்ளோர் மனம்குளிருமாறு சொல்லழகு மிளிர, எளிதில் புரியும் வண்ணம், ஐயந்திரிபற உண்மைப் பொருளை விளக்கும் வண்ணம் ஆழ்ந்த கருத்துக்களை அனைவர்க்கும் பயன்படும்படி பேசினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment