அம்பரீஷனின் உயர்ந்த குணங்களைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்ன ஸ்ரீ சுகர், அவனது மனைவி பற்றிச் சொல்லும்போது 'மஹிஷ்யா துல்ய சீலயா' என்று ஒரே வரியில் தெளிவுபடுத்திவிடுகிறார்.
அம்பரீஷனுக்குச் சமமாக நற்குணங்கள் அனைத்தும் பொருந்தியவள் அவனது மனைவி என்பதாக.
அம்பரீஷனுக்குத் திருமணம் நடந்த விவரங்களை பெரியோர்கள் வாயிலாக அறிகிறோம்.
அம்பரீஷன் தினமும் கோவிலுக்குச் சென்று, அரசன் என்ற படாடோபம் இல்லாமல், தானே கோவில் வேலைகளில் பங்கெடுப்பான் என்று பார்த்தோம். இறைவன் ஸ்ரீ ஹரியே தன் எஜமானன். தான் அவனது சேவகன் என்ற எண்ணத்தில் கோவிலைச் சுத்தம் செய்வது, மலர்கள் சேகரிப்பது, இன்ன பிற சேவைகளையும், சமயத்திற்குத் தகுந்தபடி தினமும் செய்யும் பழக்கமுள்ளவன். கோவிலுக்கு அரச உடையோடு வராமல், சாதாரணமாக வருவான் அம்பரீஷன்.
அந்நாட்டில் பகவானின் மேல் அளவற்ற பக்தி கொண்ட ஸ்ரீமதி என்பவள் தானும் இயன்றபோதெல்லாம் வந்து கோவிலில் கோலம் போடுவது, சுத்தம் செய்வது, மாலை கட்டுவது போன்ற கைங்கர்யங்களைச் செய்துவந்தாள்.
வயதான அவளது தந்தையோ, அவளுக்கு மணம் முடிப்பதற்காக விரும்பினார். அவளோ ஹரிபக்தர் ஒருவரை மணப்பதே விருப்பம் என்று வரும் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் மாலை கோவிலில் சிரத்தையாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அம்பரீஷனைப் பார்த்து, தந்தையிடம் காட்டினாள்.
இவர் மிகவும் ஆசையாக இறைவனுக்கு கைங்கர்யம் செய்கிறார். இவரை மணக்கச் சம்மதம். என்றாள்.
அவர் யாரென்று விசாரித்ததில் அரசன் என்று தெரிந்ததும், அதிர்ந்துபோனார் பெண்ணைப் பெற்றவர்.
இரவு வீட்டில், தந்தைக்கும் பெண்ணுக்கும் விவாதம் துவங்கியது.
கல்யாணம் வேணாம் வேணாம்ன. இப்ப ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கறேங்கற. சத்தமா சொல்லாதம்மா. சுவத்துக்குக் கூட காது உண்டு. நம்மளை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க.
ஏழு த்வீபங்களுக்கும் ராஜா, ஸார்வபௌமனான அவர் எங்க? குடிசைல வாழற நாம எங்க? உன் பேராசைக்கு ஒரு அளவில்லையா? நீ என்ன ராஜகுமாரின்னு நினைப்பா?
அவள் மகளைப் பார்த்து சத்தம் போட, அவளோ
அப்பா, அவர் ராஜான்னு எனக்குத் தெரியாது. அவர் பகவான் ஹரியின் சிறந்த பக்தர். ரொம்ப ஆசையா கைங்கர்யம் பண்றார். அவரைக் கல்யாணம் செய்துண்டா நான் பக்தி பண்ணவும் தடையிருக்காது. நான் அரசபோகத்துக்கு ஆசைப்பட்டு சொல்லலப்பா என்றாள்.
இறைவனின் சங்கல்பத்தினால், அன்றைய இரவு மாறுவேடத்தில் நகர சோதனைக்குச் சென்ற அம்பரீஷன் ஒரு குடிசையிலிருந்து ராஜா ராஜா என்று சத்தம் கேட்பதைப் பார்த்து, மறைந்திருந்து தந்தையும் பெண்ணும் பேசுவதைக் கேட்டான்.
மறுநாள் அரசவையில், ஒரு வீரனை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான்.
பயந்து நடுங்கிவிட்டார் தந்தை.
பாரு. உன் துடுக்குத்தனத்தால ராஜ தண்டனை கிடைக்கப்போறது
என்று பலவாறு பெண்ணைத் திட்டிக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு அரசவைக்கு வந்தார்.
அம்பரீஷன் ஸ்ரீமதியைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான், அவள் சிறந்த பக்தை என்றும், தனக்கேற்றவளாக இருப்பாள் என்பதையும்.
சபையோருக்காக விசாரித்தான்.
என்ன தைரியத்தில் நீ என்னைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டாய்? செல்வந்தன் என்பதாலா? அரசியாகவேண்டுமா? என்றதும் காதைப் பொத்திக்கொண்டாள் ஸ்ரீமதி.
பின்னர் தைரியமாக பதில் சொன்னாள்,
உங்கள் பக்திக்காகவும், கைங்கர்யத்தில் தங்களுக்கு இருக்கும் ருசிக்காகவும், மேலும் தங்களுடன் இணைந்து தானும் பல கைங்கர்யங்களில் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டும் என்பதற்காகவுமே ஆசைப்பட்டேன். அரசன் என்பதற்காக அல்ல. என்றாள்.
அவளது மன உறுதியைப் பார்த்து சபையோர் அசந்துபோனார்கள். பின்னொரு நன்னாளில் அம்பரீஷனுக்கும் ஸ்ரீ மதிக்கும் நன்முறையில் விவாஹம் நடந்தது.
ஒருவருக்கொருவர் மிகவும் அனுசரணையாய் தினமும் கைங்கர்யம் செய்யத் துவங்கினர்.
அம்பரீஷன் பெருக்கினால், ஸ்ரீ மதி குப்பையை வாரிக் கொட்டுவாள்.
அவன் மலர் பறித்து வந்தால், மாலை கட்டிக் கொடுப்பாள். இவ்வாறாக இன்னும் பல கைங்கர்யங்களை அரசனும் அரசியும் இணைந்தே செய்வதைக் கண்ட மக்களுக்கும் தன்னலமற்ற சேவையிலும், இறைவன் மீதும் நாட்டம் அதிகரித்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment