வைவஸ்வதனுக்கு வெகுநாள்கள் குழந்தையில்லாததால், அதற்காக யாகம் செய்யப்பட்டது. யாகத்தில் மந்திரங்கள் மாற்றிச் சொல்லப்பட்டதால், இளை என்ற பெண்மகவு பிறந்தது. மந்திரம் மாறியதால் அவ்வாறு நிகழ்ந்ததென்று உணர்ந்த குருவான வசிஷ்டர் வாரிசு வேண்டும் என்பதற்காக அவளைத் தன் தவ வலிமையால் ஆண்மகவாக மாற்றினார். அவனுக்கு ஸுத்யும்னன் என்பது பெயர்.
அவன் ஒரு முறை கைலாயத்தில் பார்வதி தேவியின் அந்தப்புரம் இருக்கும் வனத்திற்குள் தன் நண்பர்களுடன் நுழைந்தான்.
அவ்வனத்திற்குள் நுழையும் ஆடவர் அனைவரும் பெண்ணாக மாறும்படி அமைத்திருந்தார் பரமேஸ்வரன்.
வனத்தில் நுழைந்த இளையும், நண்பர்களும் பெண்களாக மாறிவிட்டனர். காரணம் புரியாமல், நினைவின்றி அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தபோது இளையின் அழகில் மயங்கிய புதன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். புதன் சந்திரனின் மகனாவான்.
அவர்களுக்கு புரூரவஸ் என்ற மகன் பிறந்தான்.
பின்னர் நாடு திரும்பியதும், வசிஷ்டரை வணங்கினாள் இளை. தன்னை மீண்டும் ஆணாக்கும்படி அவரிடம் வேண்ட, அவர் கருணை கொண்டு, பரமேஸ்வரனைத் துதித்தார்.
பரமேஸ்வரன், வனத்தின் விதியை மாற்ற இயலாது. எனவே ஒரு மாதம் பெண்ணாகவும், ஒரு மாதம் ஆணாகவும் இருக்கட்டும் என்று அருளினார்.
இப்போது மிகவும் இரண்டும் கெட்டானாகப் போய்விட்டது. ஆணாகவும், பெண்ணாகவும் மாறிக்கொண்டே இருக்கும் அரசனை மக்கள் ஏற்கவில்லை. எனவே அவன், தன் மகனான புரூரவஸிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுத் தவம் செய்யக் கானகம் ஏகினான்.
ஸுத்யும்னனுக்கு உத்கலன், கயன், விமலன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். அறநெறியில் சிறந்து விளங்கிய அவர்கள் தென்னாட்டை ஆண்டு வந்தனர்.
ஸுத்யும்னன் கானகம் சென்றதும், ச்ராத்ததேவர், நன்மகனை விரும்பி யமுனைக் கரையில் நூறு வருடங்கள் ஸ்ரீ மன் நாராயணனை நோக்கித் தவமிருந்தார்.
அதன் பலனாக தன்னையொத்த பத்து புதல்வர்களைப் பெற்றார். அவர்களில் மூத்தவன் இக்ஷ்வாகு.
மனுவின் இன்னொரு புதல்வனான ப்ருஷ்த்ரனை குருவான வசிஷ்டர் பசுக்களைக் காக்க நியமித்தார்.
ஒருநாள் நள்ளிரவில் பெருமழை பெய்யவே, பசுக்களின் கொட்டிலில் ஒரு புலி நுழைந்தது. அது ஒரு பசுவைப் பற்றவே, அங்கு ஓடிவந்த ப்ருஷ்த்ரன் இருளில் தெரியாமல் புலியை வெட்டுவதாக நினைத்து பசுவை வெட்டினான். புலியின் மீதும் வாள் படவே, அது பயந்து ஓடிவிட்டது.
புலியைக் கொன்றதாக நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, தான்கொன்றது பசுவென்று சற்று வெளிச்சம் வந்ததும்தான் தெரிந்தது.
மிகவும் மனம் வருந்தினான். தெரியாமல் செய்தாலும், தன் பாவச் செயலுக்கு தண்டனையை எதிர்பார்த்திருந்தான். அவனது மனநிலை அறிந்த வசிஷ்டர், நீ க்ஷத்ரியனாக இருக்கத் தகுதியற்றவன் இவ்விடம் விட்டு நீங்கு என்று பணித்தார்.
அவன் அந்த தண்டனையை அமைதியாக ஏற்றான். நைஷ்டிக ப்ரும்மசாரி விரதம் ஏற்று அன்பையே குறிக்கோளாகக் கொண்டு எல்லா ஜீவராசிகளிடமும் இரங்கினான். ஸ்ரீமன் நாராயணனிடம் பக்தி பூண்டதன் விளைவாக, விரைவில் புலனாசை அடங்கி அவனது மனம் அமைதி பெற்றது. இறையருளால் கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்திருந்தான். ஆன்மஞானம் பெற்று, ஜடம் போலவும், குருடன் போலவும், தன்னைக் காட்டிக்கொண்டான்.
ஒருநாள் காட்டுத் தீயினுள் புகுந்து சரீரத்தை விட்டு பகவானை அடைந்தான்.
ஒருநாள் காட்டுத் தீயினுள் புகுந்து சரீரத்தை விட்டு பகவானை அடைந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment