கபிலர் ஜீவனின் நிலையை மேலும் சொல்லலானார்.
தாயே! முற்பிறவியில் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நரகவாசம் முடித்தபின், ஜீவன் மீண்டும் பிறவியெடுக்கவேண்டி, ஒரு புருஷனின் வீரியத்தில் விந்து மூலம் நுழைந்து ஒரு பெண்ணின் கருப்பையை அடைகிறான்.
கர்மங்களை அனுபவித்துத் தூய்மையாகி வருகிறான் என்றால் அவனுக்கு கர்மவினைக்கேற்ப பிறவி ஏற்படுவதெங்ஙனம்? முரணாயிருக்கிறதே..
சட்டென்று கேட்டாள் தேவஹூதி.
கலகலவென்று சிரித்த கபிலர்,
நன்றாகக் கேட்டீர்கள் அம்மா!
நன்றாகக் கேட்டீர்கள் அம்மா!
சில தீய வினைகளின் பயனை ஜீவனின் உடலால் தாங்க இயலாது. எனவே அவற்றின் பயனை அவன் யாதனா சரீரத்தில் அனுபவித்துக் கழிக்கிறான். அதனால் முற்றிலுமாக வினைகள் அழிந்துவிடுவதில்லை.
மற்றைய பாவ புண்யங்களின் பலனை உடல் எடுத்து சுக துக்கங்கள் மூலம் அனுபவித்தே கழிக்கவேண்டியிருக்கிறது. இதில் முரண் ஏதுமில்லை அம்மா.
என்று சொன்னதும் சமாதானமடைந்தாள் அன்னை.
தெய்வச் சேய் தொடந்து மானுடச் சேயைப் பற்றிச் சொல்லத் துவங்கியது.
பெண்ணின் கர்பத்தில் புகும் வீரியம் ஓரிரவில் அவளின் குருதியில் கலக்கிறது.
பத்து நாள்களில் ஓர் இலந்தைப்பழ அளவு உள்ளதாக ஆகிறது. பின் சில நாள்களில் மாமிசப் பிண்டமாகவோ, பறவை முதலிய பிறவிகளில் முட்டையாகவோ ஆகிறது.
ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதங்களில் கைகால்களும், மூன்றாவது மாதத்தில் நகங்கள்,எலும்பு, தோல், தோலின் மேல் உரோமங்கள், ஆண், பெண் குறிகள், கண், காது, மூக்கு முதலிய துவாரங்களும் உண்டாகின்றன.
நான்காம் மாதத்தில் ஏழு தாதுக்களும், ஐந்தாம் மாதத்தில் பசி, தாகம் முதலியன ஏற்படுகின்றன.
ஆறாம் மாதத்தில் தொப்புள் கொடியுடன் கூடிய ஜவ்வு கருவைச் சுற்றிக்கொள்கிறது.
இப்போது ஆணாக இருந்தால், வலது புறமாகவும், பெண்ணாக இருந்தால் இடது புறமாகவும் சுழல்கிறது.
தாய் உட்கொள்ளும் உணவால் ரத்தம், மாமிசம் ஆகியவை வளர்கிறது.
தாய் உண்ணும் சூடான, குளிர்ந்த, காரமான உணவுகள் ஜீவனை பாதிக்கிறது.
தாய் உண்ணும் சூடான, குளிர்ந்த, காரமான உணவுகள் ஜீவனை பாதிக்கிறது.
அவனைச் சுற்றி மிக மெல்லிய சிற்சிறு ஜவ்வுப்பைகள். அவற்றில் மல மூத்திரங்கள், பித்த நீர், குழாய்களில் பாயும் உதிரம்.
கருப்பையில் இருக்கும் நீருக்குள் மிதக்கிறான். அதில் உண்டாகும் சிற்சிறு புழு பூச்சிகள் அவன் உடலைத் தீண்டுகின்றன.
அதனால் வேதனையடைகிறான்.
இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே கழிவறைகள்.
அவை சுத்தமாக இல்லையெனில் அவற்றின் துர்நாற்றம் வீட்டுக்குள் வீசினால் நம்மால் வீட்டினுள் இயங்கமுடியாது.
கருப்பையைச் சுற்றி மெல்லிய ஜவ்வுப்பைகளுக்குள் விதம் விதமான மலங்களின் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு
விருப்பமே இல்லாமல் படுத்துக் கிடக்கிறான்.
விருப்பமே இல்லாமல் படுத்துக் கிடக்கிறான்.
கரு, தொப்புள் கொடி யால் சுற்றப்பட்டு, ஜவ்வினால் மூடப்பட்டு, முதுகும் கழுத்தும் வளைந்து கால் மேல்வயிற்றிலும், தலை கீழாகவும் இருக்க கருப்பைக்குள் வாசம் செய்கிறான்.
கைகால்களை அசைக்க இயலாது. நெடுமூச்சு விட இயலாது.
அப்போது தெய்வாதீனமாய் அவனுக்கு தான் செய்த கர்மங்களின்நினைவு வருகிறது.
பாவம்!
ஏழாவது மாதம் முதல் சுகதுக்கங்களைப் பற்றிய நினைவு உண்டாகி, கருப்பையில் ப்ரசவக் காற்றினால் (சூதிகா வாயு) வருந்தி, அந்த வயிற்றிலேயே புழுபோல் நில்லாமல் சுழன்றுகொண்டே இருப்பான்.
இவ்வாறு ஏழு தாதுக்களால் ஏற்பட்ட தேகத்திற்குள் அடைபட்டுக்கிடக்கும் ஜீவனுக்கு உடல் வேறு ஆன்மா வேறு என்ற ஞானம் தோன்றுகிறது.
இனி என்ன பிறவி வருமோ? என்னென்ன துன்பங்கள் வருமோ?
தன்னைச் சுமக்கும் தாயும், மற்ற உறவினர்களும் இனியாவது பிறவிச் சுழலிலிருந்து விடுபட உதவி செய்வார்களா? அல்லது, உலக வாழ்க்கையில் பணம், மற்றும் வசதிகளைத் தேடி உழலும்படி பணித்துவிடுவார்களா? என்று அஞ்சுவான்.
அப்போது தன்னைக் கருப்பையில் இட்ட பகவானை நோக்கி ஒவ்வொரு ஜீவனும் கரம் கூப்பித் தொழுகின்றது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment