தேவஹூதி கபிலபகவானைப் பார்த்துச் சொன்னாள்.
ப்ரபோ! ஸாங்க்ய சாஸ்திரத்தில் கூறியவாறு மஹத் தத்வம், புருஷன், ப்ரக்ருதி ஆகியவற்றின் இலக்கணங்களையும், அவற்றைத் தனித்தனியே பிரித்தறியும் வழியையும் ஸாங்க்ய யோகத்தின் லட்சியமே பக்தி யோகம்தான் என்றும் கூறினீர்கள்.
ஜீவராசிகள் பிறப்பு, இறப்பு என்னும் பற்பல வழிகளில் உழல்கின்றனவே. எதனால் அப்படி?
இதைக் கேட்டறிந்தால் உலக விஷயங்களில் வெறுப்பு தோன்றுமல்லவா?
ப்ரும்மா முதலியவர்களையும் கட்டுப்படுத்தும் உங்கள் காலஸ்வரூபத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். காலனைப் பற்றிய பயத்தால்தான் மக்கள் சிறிதளவாவது நற்காரியங்களைச் செய்கின்றனர்.
கபிலர் கூறலானார்.
பக்தியோகத்தில் பல வழிகள் உண்டு. அவரவர் மன இயல்பிற்கேற்ப பல பிரிவுகளைக்கொண்டது.
படம், சிலை ஆகியவற்றில் என்னை நினைத்து பூஜை செய்வார்கள். உலகியல் இன்பங்கள், புகழ், செல்வம் வேண்டுமென்று பூஜை செய்வார்கள். பகவான் தனது அந்தராத்மா என்று அறியாமல் செய்யப்படும் பூஜை ராஜஸ பூஜையாகும். இவனது வேண்டுதலின் பலனுக்கேற்ப பக்தியும் குறையும்.
தன் பாவங்கள் தொலைய வேண்டும். செய்யும் பூஜையின் பயனையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து அதனால் பகவான் மகிழ வேண்டும். இது அறநெறி. இதைச் செய்வது நமது கடைமை என்று செய்யப்படும் பக்தி சாத்வீக பக்திதான். ஆனால் ஒட்டுதல் இல்லை.
பெருக்கெடுத்து வரும் கங்கை வழியில் ஏற்படும் அத்தனை தடைகளையும் மீறிக்கொண்டு கடலைக் குறித்தே ஓடுகிறது. அதுபோல், பகவானின் கல்யாண குணங்களைக் கேட்டு ஹ்ருதய வாசியான என்னை நோக்கி, எவ்விதச் சலனமும் இன்று, பயனை எதிர்நோக்காமல் மனம் ஓடி வரவேண்டும்.
தைலதாரை போன்று இடையறாத இறைச் சிந்தனை இயல்பாக இருக்கவேண்டும். இதுவே பக்தியோகத்தின் இலக்கணம்.
தாய்க்குக் குழந்தையைப் பற்றிய சிந்தனை இயல்பாகவே இடையறாது ஏற்படுவதுபோல் உள்ளம் பகவானிடம் ஓடிவருவதே பக்தி.
இவ்விதமாக பக்தி செய்யும் பக்தன் வைகுண்டவாசத்தையும் கூட விரும்பமாட்டான். எப்போதும் என் சேவையிலேயே த்ருப்தி அடைவான்.
இத்தகைய பக்திதான் அடைய வேண்டியதாகும். இதனால் அவன் முக்குணங்களைத் தாண்டி அன்பே உருவான என் ஸ்வரூபத்தில் ஐக்கியமாகிறான்.
பகவானது கல்யாண குணங்களைக் கேட்டதும் எப்படி பக்தி வரும்?
என்று கேட்டாள் தேவஹூதி.
கபிலர் சிரித்துக்கொண்டே கூறினார்.
ஒருவன் நித்ய கர்மாக்களை பயன்கருதாமல் செய்யவேண்டும். யாருக்கும் எவ்விதத் துன்பமும் தராத செயல்களையே செய்யவேண்டும். சாஸ்திரங்களில் சொல்லியவாறு பூஜை செய்யவேண்டும்.
எனது அர்ச்சாவதாரத்தை தரிசித்தல்,
தொட்டு நீராட்டுதல்,
அர்ச்சனை செய்தல்,
ஸ்துதி செய்தல்,
வணங்குதல்,
உலகப்பற்றை விடுதல்,
எல்லா ஜீவராசிகளிடமும் என்னை உணர்தல்,
தைரியமாகவும்,வைராக்யத்தோடும் இருத்தல்,
பெரியோர்களிடம் மரியாதை,
ஏழை எளியோரிடம் கருணை,
எனது திருநாமங்களை உரக்கச் சொல்லி மகிழ்தல்,
மனத்தை ஒடுக்குதல்,
எப்போதும் ஸத்சங்கத்தில் இருத்தல்
ஆகிய குணங்களை ஒருவன் கைக்கொள்வானாயின் எவ்வித முயற்சியும் இன்றி அவன் மனத்தூய்மை பெற்று எளிதாக பக்தியும் பெறுவான்.
சிலையில் மட்டும் என்னைக் கண்டு, மற்ற ஜீவராசிகளிடம் என்னை உணராமல் வெறுப்பைக் காட்டுபவன் என்னை அவமதிப்பவனாகிறான். இதனால் அவனுக்கு மன அமைதி ஏற்படாது.
பிற உயிர்களை மதிக்காது எவ்வளவுதான் என்னை விதிப்படி பூஜித்தாலும், நான் உகப்பதில்லை.
பூஜையின் நோக்கமே நான் எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக இருகிறேன் என்பதை உணர்வதுதான்.
பிற உயிர்களிடம் வேற்றுமை பாராட்டுபவனுக்கு மரணபயம் உண்டு.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment