கபிலர் தொடர்ந்து தத்வங்களை விளக்கினார்.
தாயே!
அஹங்கார தத்வத்தின் ரூபம் ஸங்கர்ஷணன் ஆவார். இதுவே இந்திரிய அபிமானம் உள்ளவர்களித்தில் செய்கையின் காரணமாகத் தென்படுகிறது. ஸத்வகுணங்களோடு அமைதியாகவும், ரஜோகுணம் மேலிட்டால் கோரமாகவும், தமோகுணங்களைக் கொண்டு மடமையாகவும் நிற்பது இதுவே.
அஹங்கார தத்வத்தின் ரூபம் ஸங்கர்ஷணன் ஆவார். இதுவே இந்திரிய அபிமானம் உள்ளவர்களித்தில் செய்கையின் காரணமாகத் தென்படுகிறது. ஸத்வகுணங்களோடு அமைதியாகவும், ரஜோகுணம் மேலிட்டால் கோரமாகவும், தமோகுணங்களைக் கொண்டு மடமையாகவும் நிற்பது இதுவே.
ஸாத்வீக அஹங்காரமே மனஸ் தத்வம் உண்டாகக்காரணம். மனஸ் தத்வமே இந்திர்யங்களின் அதிஷ்டான தேவதையான அனிருத்தன் என்று அழைக்கப்படுகிறது.
ராஜஸ அஹங்காரம் மாறுதல் அடைந்து புத்தி தத்வம் தோன்றியது. கண்ணுக்குப் புலனாகும் விஷயங்களைப் புரிந்துகொள்வது, இந்திரியங்களை அதன் தொழிலில் ஊக்குவிப்பது, உலகியல் பொருள்களில் தோன்றும் மாற்றத்தை ஆராய்வது இவை புத்தியின் காரியங்களாம்.
ஐயப்பாடு(சம்சயம்), தவறாகப் புரிந்துகொள்வது (விபர்யயம்),உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வது (நிச்சயம்), ஞாபக சக்தி (ஸ்ம்ருதி), தூக்கம் (நித்திரை), ஆகியவையும் புத்தியின் இலக்கணங்களே. இந்த புத்தி தத்வமே பகவானது மூன்றாவது வியூகமான ப்ரத்யும்னன் எனப்படுகிறது.
கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் இதிலிருந்து தோன்றின. செயல், அறிவு என்ற பிரிவினால் இருவகை இந்திரியங்களாயின. இதில் செயல் ப்ராணனின் சக்தி, அறிவு புத்தியின் திறன்.
பகவானின் சைதன்யத்தின் தூண்டுதலால் தாமஸ அஹங்காரம் மாறுதலடைந்தது. அது சப்த தன்மாத்திரையைத் தோற்றுவித்தது. சப்தத்திலிருந்து ஆகாயமும், ஒலியை அறியும் காது என்ற புலனும் தோன்றின.
கண்களால் காணமுடியாமல் மறைந்திருக்கும் பொருளின் தன்மையையும், பெயரையும் புத்திக்குத் தெரிவிப்பது ஒலி. ஒலி வடிவான சாஸ்திரங்களின் வாயிலாக பகவானைக் காட்டித் தரக்கூடியது. இது ஆகாயத்தின் நுண்ணிய வடிவாகும்.
அனைத்து ஜீவன்களிலும் உள்ளும் புறமாக நிரம்பி இருப்பது ஆகாயமாகும். இந்திரியங்களுக்கும், ஆன்மாவிற்கும் இருப்பிடமாக விளங்குவது ஆகாயமே.
சப்த தன்மாத்திரையை இயல்பாக உடைய ஆகாயம் காலத்தினால் மாற்றமடைந்து ஸ்பர்ச தன்மாத்திரை உண்டாயிற்று.
அதிலிருந்து வாயு தோன்றியது.
தொடுவுணர்ச்சியை நமக்குத் தரும் தோல் என்ற புலன் உண்டாயிற்று.
மென்மை, கடினம், குளிர்ச்சி, சூடு ஆகியவை தொடுவுணர்ச்சியின் இயல்புகள்.
வாயுவின் நுண்ணிய சக்தி இதுவே. மரம் செடி கொடிகளை அசைத்தல், எங்கும் உலாவுதல், வாசனை, நாற்றம் முதலியவற்றை மூக்கிற்கு எடுத்துச் செல்லுதல், அனைத்துப் புலன்களுக்கும் செயல் ஊக்கத்தை அளித்தல் ஆகியவை வாயுவின் செயல்கள்.
அதன் பின்னர், காலரூபியான பகவானால் தூண்டப்பட்டு ஸ்பர்ச தன்மாத்திரையான வாயு மாறுதல் அடைந்து அதிலிருந்து ரூப தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து ஒளியும் உருவத்தைக் காட்டித்தரும் கண்கள் என்னும் புலனும் தோன்றின.
பொருள்களின் உருவத்தைக் காட்டுதல், பொருளின் அமைப்பாகவே இருத்தல், ஒளியின் குணமாக இருத்தல் ஆகியவை ரூப தன்மாத்திரையின் இலக்கணங்கள்.
வெளிச்சம் தருவது, வேக வைப்பது, ஜீரணிப்பது, குளிரைப் போக்குவது, பசி தாகம் உண்டுபண்ணுவது அதற்காகச் சாப்பிடுவது, பருகுவது ஆகியவை அக்னியின் காரியங்கள்.
அதன் பின் ரூப தன்மாத்திரையான அக்னியிலிருந்து ரஸ தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து நீரும், நாக்கு என்ற புலனும் தோன்றின. ரஸம் என்பதே மதுரம் என்ற சுவை. அதனுடன் சேரும் பொருள்களின் வேறுபாட்டால் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்ற சுவைகள் பிரித்துக் காட்டப்படுகின்றன.
பிறவற்றை ஈரமாக்குதல், பிரிந்திருப்பதை ஒன்றாக்குதல், போதும் என்ற மனநிறைவு கொளல், ப்ராணனை நிலைக்கச் செய்தல், பசி தாகத்தால் விளையும் சோர்வை நீக்குதல், வெம்மையைக் குறைத்தல், கிணறு முதலியவற்றிலிருந்து இறைக்க இறைக்க ஊறுதல் ஆகியவை நீரின் காரியங்கள்.
பகவானால் தூண்டப்பட்டு ஜல தத்வத்திலிருந்து தோன்றியது கந்தம்(வாசனை). அந்த தன் மாத்திரையிலிருந்து ப்ருத்வி என்னும் மஹாபூத்ம் தோன்றியது. இந்த கந்தத்தை அறிவிப்பது கிராணேந்திரிய்ம் (மூக்கு) ஆகும்.
கந்தம் என்பது ஒன்றாக இருப்பினும் பல்வேறு பொருள்களின் சேர்க்கையால் கலப்பான மணம், துர் நாற்றம், நறுமணம், சாரம் (நெடி), புளிப்பு மணம் எனப் பலவாறு வேறுபடுகிறது.
விக்ரஹம், பொம்மை முதலிய உருவங்களால் , ப்ரும்மத்திற்கு ஓர் உருவத்தை காட்டுவது, ஆதாரமற்ற போதிலும் நிலையாய் நிற்றல், அசையும் அசையாப் பொருள்களின் ஆதாரமாதல், ஆகாயத்தை ஒரு நிலைக்குள் அடக்குதல் (குடத்துக்குள் ஆகாயம்), குணங்களைப் பிரித்துக்காட்டுதல் ஆகியவை பூமியின்காரியங்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment