தர்மராஜரின் அம்சமான தாங்கள் வெற்றி கொள்ள முடியாத பகவானின் புகழ் மாலையை நொடிக்கு நொடி புதிதாகத் தொடுக்கிறீர்கள்.
உலக மக்கள் அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு செயலைச் செய்து, அதனால் பெரிய துன்பத்தை அடைகிறார்கள். அது நீங்கவே நான் பகவானைப் பற்றிய இந்த பாகவதத்தைக் கூறுகிறேன்.
இதை ஒரு சமயம் ஸங்கர்ஷண மூர்த்தி ஸனகாதி முனிவர்களுக்கு தானே முன்வந்து கூறினார்.
குறைவற்ற அறிவின் வடிவினரான ஸங்கர்ஷண மூர்த்தி பாதாள லோகத்தில் இருக்கிறார். ப்ரும்ம தத்வத்தை அறிய விரும்பிய ஸனகாதி முனிவர்கள், அவரிடம் சென்று வினவினார்கள்.
மானஸீக பூஜையில் தனக்கு ஆதாரமான பகவானைப் பூஜித்துக்கொண்டிருந்தார் ஸங்கர்ஷணராகிய ஆதிஸேஷ பகவான். ஸனகாதிகள் கேள்வி கேட்டதும், மூடியிருந்த தாமரை மொட்டுப்போன்ற தன் திருக்கண்களைத் திறந்து அவர்களை நோக்கினார்.
ஸனகாதிகள் ப்ரும்மலோகத்திலிருந்து கிளம்பும்போது அங்கிருந்து பாதாளம் வரை பாயும் கங்கை நதியில் நீராடி வந்தனர். அதனால், அவர்கள் திருமுடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட திருமுடியை ஸங்கர்ஷணரின் திருப்பாத தாமரைகளில் வைத்து வணங்கினர்.
அவரது பெருமையை நன்கறிந்த அவர்கள், கசிந்து கண்ணீர்மல்கி அவர் புகழைப் பாடினர்.
அவர் மகிழ்ந்து பாகவதத்தை ஸனகாதியர்க்குச் சொன்னார்.
அதை ஸனத்குமாரர் ப்ரும்மசர்ய விரதம் பூண்ட ஸாங்க்யாயன முனிவர்க்குக் கூறினார்.
ஸாங்க்யாயனர் பகவானின் திருவிளையாடல்களை தனது சீடரும் எனது குருவுமாகிய பராசரர்க்கும், ப்ருஹஸ்பதி பகவானுக்கும் கூறினார்.
புலஸ்திய முனிவரின் பரிந்துரையின் பேரில், பராசர மஹரிஷி இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எனக்கு உபதேசித்தார்.
குழந்தாய் விதுரா, நீ மிகவும் ச்ரத்தை கொண்டவன். பக்தியும் விநயமும் கொண்ட உனக்கு நான் இதைச் சொல்கிறேன்.
படைப்பு துவங்கும் முன் ப்ரபஞ்சமே நீரில் ஆழ்ந்திருந்தது. அப்போது ஸ்ரீ மன் நாராயணன் ஒருவரே பரிபூரண ஞானஸ்வரூபமான ஆனந்தத்தில் திளைத்து வேறெந்த செயலுமின்றி ஆதிசேஷனாகிய படுக்கையில் கண்களை மூடிய வண்ணம் யோகத்துயில் கொண்டிருந்தார்.
நெருப்பின் எரிக்கும் திறன் கட்டை முழுதும் பரவியிருப்பினும் அது மறைந்திருப்பதுபோல், அனைத்து ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு, தன் வாசஸ்தலமாகிய நீரில் சயனித்துக்கொண்டிருந்தார்.
படைப்பு துவங்குமுன் அனைத்தையும் விழிக்கச் செய்ய கால சக்தியை மட்டும் விழித்திருக்கச் செய்தார்.
காலசக்தி பகவானையே அச்சாணியாக உடையது.
காலசக்தி பகவானையே அச்சாணியாக உடையது.
இவ்வாறு பகவான் ஆயிரம் சதுர்யுகங்கள் தனது சித்சக்தியுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, தன்னாலேயே தூண்டப்பட்ட காலசக்தி ஜீவன்களையும், அவர்களது செயல்பாடுகளையும் செய்ய முடுக்கிவிட்டது.
அப்போது பகவானின் உடலிலேயே அத்தனை லோகங்களும் காணப்பட்டன.
அவற்றின்மீது அவரது திருக்கண்ணோக்கு விழவே, பூத ஸூக்ஷ்மங்கள் ரஜோகுணத்தால் மாறுதல் அடைந்து ,படைப்பைத் துவக்குவதற்கான சக்தியாக அவரது தொப்புளிலிருந்து வெளிப்பட்டன.
பகவானின் தொப்புளிலிருந்து ஒரு தாமரை மலர் வெளிவந்தது. அதன் ஒளியால் ப்ரளயஜலம் ப்ரகாசித்தது.
அந்தத் தாமரையில் பகவான் அந்தர்யாமியாக உள்நுழைந்தார். அப்போது அதிலிருந்து தனக்குத்தானே அத்தனையும் உணர்ந்தவராக ப்ரும்மதேவர் தோன்றினார்.
அவரை உலகம் ஸ்வயம்பூ (தான்தோன்றி) என்றழைக்கிறது.
ப்ரும்மதேவர் தன்னைச் சுற்றி ஏதுமின்றி தான் தனித்திருப்பதைக் கண்டு நாற்புறங்களிலும் நோக்கினார். அப்போது அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின.
முதலில் அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
இத்தாமரை மலரில் அமர்ந்துள்ள நான் யார்? என் பெயரென்ன? எந்த ஆதாரமும் இன்றி தாமரை எப்படித் தோன்றியது? இதன் அடியில் ஆதாரமாக இருப்பது எது?
என்றெல்லாம் யோசனை செய்தார்.
என்றெல்லாம் யோசனை செய்தார்.
ஏதும் விளங்காததால், தாமரையின் உள்நாளம் வழி கீழ்நோக்கிச் சென்று நீரின் அடிமட்டத்தை அடைந்தார். இருப்பினும் ஆதாரம் கிடைக்கவில்லை.
இவ்வாறு இருளிலேயே தேடி தேடிப் பலகாலம் கடந்துவிட்டது.
அனைத்து உயிர்களின் காலத்தைக் கணக்கிட்டு அழிக்கும் சக்திதான் பகவானின் ஆயுதமான காலச் சக்கரம். அது அனைவர்க்கும் பயத்தை அளிப்பது.
முயற்சி பயனற்றுப்போனதால் ப்ரும்மதேவர் மீண்டும் தன் இடத்திற்கே வந்தமர்ந்தார்.
மூச்சையும் மனத்தையும் அடக்கித் தவத்தில் மூழ்கினார்.
தேவர் காலக் கணக்கில் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தார். த்யான ஸமாதியில் அவருக்கு ஞானம் தோன்றியது. முன்பு தேடிக் காணாதது இப்போது இதயத்தில் ஒளிரக் கண்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment