Monday, July 16, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 43 இறைவனின் திருத்தோற்றங்கள் - 1


ப்ரும்மதேவர் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிக் கூறுகிறார்.
பொதுவாக தசாவதாரம் என்று பத்து முக்கிய அவதாரங்களைக் கூறுகிறோம். இருபத்து நான்கு முக்கிய அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா எடுத்துரைக்கிறார்.
ஆனால் உண்மையில் பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை. ஒவ்வொரு மஹாத்மாவிற்கும் காட்சி கொடுப்பதற்காக பகவான் இறங்கி வருவதெல்லாமும் அவதாரங்களே.
எத்தனை எத்தனை பக்தர்கள்! ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக அல்லவா வந்திருக்கிறார்!
ஒரு ஊருக்குச் செல்லும் வழியில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன என்று கேட்டால், உதாரணத்திற்கு சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் செல்லும் வழியில் என்னென்ன ஊர்கள் வரும் என்று கேட்டால், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் என்று முக்கிய ஊர்களைச் சொல்வோம். இன்னும் கேட்டால், மதுராந்தகம், மேல்மருவத்தூர், உளுந்தூர்ப்பேட்டை, விருத்தாசலம், அரியலூர் என்று சொல்லலாம்.
ஆனால் உண்மையில் இவை மட்டுமா இருக்கின்றன? இருப்பூர்தியில் செல்லும்போது எத்தனயோ கிராமங்களைக் கடக்கிறோமே. அத்தனையும் வழியிலுள்ள ஊர்கள் தாமே.
சாலை வழியாகச் சென்றால் இன்னும் வேறு பல கிராமங்களும் சிற்றூர்களையும் கடக்க நேரிடும்.
அதுபோல், நாமே இடைவிடாமல் குருவின் கருணையால் இறையின் திருப்பெயரைச் சொல்லி, மகிழ்ந்துபோய், இறைவன் நமக்கு காட்சி அளிப்பாராயின் அதுவும் ஒரு திருத்தோற்றம் (அவதாரம்) என்றே கருதப்படும்.
ப்ரும்மா குறிப்பிடும் முக்கிய அவதாரங்களாவன:-
1. வராக அவதாரம்
ஆவரண ஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை வெளிக்கொணர பகவான் எடுத்த முதல் அவதாரம். அப்போது எதிர்த்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை வதைத்தார்.
2. சுயக்ஞன்
ருசி என்னும் ப்ரஜாபதிக்கும் ஆஹூதி என்ற அவரது மனைவிக்கும் மகவாய்த் தோன்றினார். தக்ஷிணை என்ற தன் மனைவியிடம் சுயமர்கள் என்ற தேவர்களைத் தோற்றுவித்து மூவுலகங்களின் துயரையும் போக்கினார்.
3. கபிலாவதாரம்
கர்தம ப்ரஜாபதிக்கும் தேவஹூதி என்ற ஸ்வாயம்புவ மனுவின் பெண்ணுக்கும் ஒன்பது பெண் குழந்தைகளுக்குப் பிறகு, திருமகனாய்த் தோன்றினார். தாய்க்கு ப்ரும்ம வித்யையை உபதேசித்தார். அது ஸாங்க்ய யோகம் என்றழைக்கப்படுகிறது.
4. தத்தாத்ரேயர்
அத்ரி மகரிஷிக்கும் அன்சூயா தேவிக்கும் பிறந்தவர். அத்ரி மஹரிஷி இறைவனையே தன் மகனாகப் பிறக்கும்படி வேண்ட, என்னையே உனக்கு தந்தேன் என்னும்படியாக தத்தன் என்ற பெயருடன் அவதரித்தார்.
5. குமாராவதாரம்
படைப்புத்திறனைப் பெறுவதற்காக ப்ரும்மா பகவத் அர்ப்பணமாக தவம் புரிந்தார். அப்போது பகவான் ஸனகர், ஸனந்தனர், ஸனத்சுஜாதர், ஸனத்குமாரர் என்ற திருப்பெயர்களுடன் நால்வராக அவதாரம் செய்தார். ப்ரளயத்தில் மறைந்துபோன ப்ரும்ம தத்வத்தை இந்த கல்பத்தில் ரிஷிகளுக்கு உபதேசம் செய்தனர்.
6. நர-நாராயணாவதாரம்
தர்மதேவதைக்கும் தக்ஷப்ரஜாபதியின் பெண்ணான மூர்த்தி என்பவளுக்கும் நரன், நாராயணன் என்ற குழந்தைகளாகப் பிறந்தார். இவர்களுடைய தவ வலிமை ஒப்புயர்வற்றது.
7. உத்தானபாதனின் மகனான துருவன் என்ற ஐந்து வயதுக் குழந்தைக்குக் காட்சி கொடுப்பதற்காக வந்த அவதாரம். அவனுக்கு அழிவற்ற துருவ பதத்தையளித்தார். இன்றும் ஸப்தரிஷிகளும் துருவனைச் சுற்றி வந்தே இறைவனைத் துதிக்கின்றனர்.
8. ப்ருது சக்ரவர்த்தி
தீயவழியில் சென்ற வேனன் என்ற மன்னனை ரிஷிகள் ஒரு ஹூங்காரம் செய்து அழித்தனர். அவர்களது ப்ரார்த்தனைக்கிணங்கி பகவான் வேனனின் கைகளிலிருந்தே தோன்றினார். பூமியிலிருந்து அனைத்து செல்வங்களையும் வெளிக்கொணர்ந்தார். இவர் பெயராலேயே பூமி ப்ருத்வீ என்றழைக்கப்படுகிறது.
9. ரிஷப தேவர்
ஆக்னீத்ரன் என்பவரின் மகனான நாபி என்பவருக்கும் ஸுதேவி என்றழைக்கப்படும் மேரு தேவிக்கும் மகனாய்ப் பிறந்தார். பரமஹம்ஸ ஆசிரமத்தில் நிற்கும் ரிஷிகளின் தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்.
10.ஹயக்ரீவ அவதாரம் ப்ரும்மா செய்த ஸத்ர யாகத்தில் யக்ஞபுருஷரான பகவான் உருக்கி வார்த்த தங்கம் போன்ற திருமேனியுடன் வெளிவந்தார். வேதமே உருவெடுத்து வந்ததோ என்னும்படி அவர் மூச்சு விடும்போது மனம் கவரும் வேதங்கள் வெளிவந்தன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment