திருமகள் திருமாலின் கழுத்தில் மாலையிட்டதும், சங்கு, துரியம், ம்ருதங்கம் ஆகிய வாத்யங்கள்முழங்கின. அபஸரஸ்களும், கந்தர்வர்களும் ஆடிப்பாடினர்.
இதன் பின் சிவந்த கண்களை உடைய வாருணி தேவி தோன்றினாள்.
பகவானின் அனுமதியுடன் அவளை தேவர்கள் பெற்றனர்.
பகவானின் அனுமதியுடன் அவளை தேவர்கள் பெற்றனர்.
தொடர்ந்து பாற்கடலைக் கடையத் துவங்கினர்.
அப்போது மிக அழகான ஒரு ஆண்மகன் தோன்றினார்.
அப்போது மிக அழகான ஒரு ஆண்மகன் தோன்றினார்.
உருண்டு திரண்டு முழந்தாள் வரை நீண்ட திருக்கரங்கள், மூன்று மடிப்புகள் கொண்ட கழுத்து, செவ்வரியோடிய கண்கள், நீலமேக வண்ணம், இளம் வயதினர். கழுத்தில் மாலை, அரையில் மஞ்சள் பட்டாடை, மணிமயமான மகர குண்டலங்கள், விசாலமான மார்பு, ஒப்பற்ற அழகுடன் வளைகள் மின்னும் கரங்களில் அமுத கலசத்தை ஏந்தி வந்தார்.
அவர் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாவார்.
அவரே ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை சாஸ்திரத்தை அளித்த தன்வந்திரி பகவான் ஆவார்.
அவரைக் கண்டதும் அசுரர்கள் ஓடிச்சென்று அமுத கலசத்தைப் பறித்துச் சென்றனர்.
அதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய தேவர்கள், பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைந்தனர்.
வருந்தும் தேவர்களைக் கண்ட பகவான் மனமிரங்கி அவர்களைக் காப்பதாக உறுதியளித்தார்.
அமுததில் ஆசைகொண்ட அசுரரகள், கலசத்தைக் கையில் வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களது உட்பூசல் அதிகமாகிக் கொண்டிருந்தபோது, பகவான் அங்கு வர்ணனைக்கெட்டாத அழகுடன் ஒரு பெண்ணாக உருவம் எடுத்து வந்தார்.
நீலோத்பல புஷ்பம் போன்ற மேனி, அழகான அவயவங்கள், காதணிகள் மின்னும் கன்னங்கள், எடுப்பான மூக்கு, பார்க்கத் தெவிட்டாத திருமுகம், கலங்கிய கண்கள், அழகிய கழுத்து, கூந்தலில் மல்லிகை மாலை, ஒட்டியாணம் மின்ன, சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிரம்பிய புன்முறுவல் கொண்டு மயக்கும் மோஹினி ரூபம் எடுத்து அசுரர்களில் மனத்தில் காமத்தீயை வளர்த்தார்.
அவளைக் கண்டதும், மயங்கிய அசுரர்கள், அமுதத்தை மறந்தனர். அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டனர்.
அவளைப் பலவாறு வர்ணித்தவர்கள், பெண்ணே, நாங்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த அமுதத்தைப் பங்கிடுவதில் எங்களுக்குள் பகையும் போட்டியும் ஏற்படுகிறது. எனவே ஓரவஞ்சனையின்றி இவ்வமுதத்தை நீ எங்கள் அனைவர்க்கும் பிரித்து வழங்கவேண்டும் என்றனர்.
மோஹினி கூறினாள்.
கச்யப முனிவரின் புதல்வரான நீங்கள் ஒரு பெண்ணிடம் நம்பிக்கை வைக்கலாமா? புதிதாய்க் கிடைக்கும் நட்பு நிலைக்குமா? நியாய பாரத்தை ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்? என்றாள்.
இவ்வாறு மோஹினி சொன்னதும், அசுரர்களுக்கு அவள் மேல் இருந்த நம்பிக்கை அதிகமாயிற்று.
உரக்கச் சிரித்த வண்ணம் அவளிடம் அமுத கலசத்தைக் கொடுத்தனர்.
அதை வாங்கிக்கொண்டவள், நான் செய்வது எதுவாயினும் நீங்கள் ஏற்கவேண்டும். நியாயம் அநியாயம் என்று வாதிடக்கூடாது. இதற்கு ஒப்புக்கொண்டால், அமுதத்தைப் பகிர்ந்தளிக்கிறேன் என்றாள்.
அவள் மேலிருந்த மயக்கத்தினால் அசுரர்கள் ஒப்புக்கொண்டனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment