Wednesday, July 4, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 31 அந்தணச் சிறுவனின் சாபம்


சான்றோனான பரீக்ஷித் இவ்வுலகில் அரசனாக விளங்கிய வரை கலியின் ஆட்டம் செல்லவில்லை.
பகவான் பூமியிலிருந்து கிளம்பியதுமே கலிபுருஷன் வந்துவிட்டான்.
ஆனால், வண்டு மலரிலுள்ள தேனை மட்டும் பருகுவதுபோல், பரீக்ஷித் எல்லாவற்றிலும் உள்ள நன்மைகளை மட்டும் பார்த்ததால், கலியிடம் வெறுப்புக் கொள்ளாமல் அவனை விட்டுவிட்டான்.
கலியுகத்தில் புண்ய கர்மாக்கள் செய்ய வேண்டுமென்று நினைத்தாலே போதும், அவற்றின் நற்பலன் கிடைத்துவிடும். தீய செயல்களை நினைத்தால் பயனில்லை. செய்தால் மட்டுமே அதன் பலன் கிட்டும்.
கலிபுருஷன் அறிவிலிகளிடம்தான் தன் கைவரிசையைக் காட்டுவான். விவேகிகளை அவனால் ஒன்றும் செய்ய இயலாது.
ஒருநாள் பரீக்ஷித் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குள் சென்றான்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 
வேட்டையாடுவது அரச தர்மம். காடுகள் அதிகம். அவற்றில் விலங்குகளும் அதிகம். அரசனுக்குத்தான் வேட்டையாடும் அதிகாரம் வழங்கப்பட்டது. அப்போதுதான் துஷ்ட மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகாமல், அவற்றால், நாட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் காக்கமுடியும். அரசர்களும் வேட்டையாடும் தர்மம் அறிந்தவர்கள். இஷ்டம்போல் கொன்று குவிக்கமாட்டார்கள்.
காட்டில் அலைந்தலைந்து மிகவும் களைத்துப்போன பரீக்ஷித் தன் படைகளைப் பிரிந்து வெகுதூரம் சென்று விட்டான். பசியும் தாகமும் அவனை மிகவும் வாட்டியது.
நீர்நிலைகள் ஏதும் தென்படவில்லை.
ஒரு குடிசை கண்ணில் பட்டது.
அதன் வாயிலில் முனிவர் ஒருவர் கண்களை மூடி த்யானத்தில் ஆழ்ந்து நிர்விகல்ப ஸமாதியில் இருந்தார்.
அரசன் அவரருகில் சென்று அழைத்தான்
பதில் இல்லை.
மீண்டும் அழைத்தான்
ம்ஹூம். அவர் ஏனென்று கேட்கவில்லை.
மறுபடி மறுபடி அழத்துப் பார்த்தான். முனிவரிடம் அசைவே இல்லை.
குடிசைக்குள் சென்று பார்த்தான். நீர் இருக்கும் இடமும் தெரியவில்லை.
தெரிந்தோ தெரியாமலோ துஷ்டர்களிடம் சிறிது நேரம் பழகினாலும், அதன் பாதிப்பு விடாமல் தொடரும். அரசனோ கலிபுருஷனைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறானே.
பசியோடும் தாகத்தோடும் அலைந்து அரசன் பலவீனமான தருணத்தில் கலி தன் வேலையைத் துவங்கினான்.
தன்னை அடக்கிவிட்ட அரசனை வீழ்த்தத் தருணம் பார்த்து க் கொண்டிருந்தான் கலி.
பொதுவாகவே, எதைக் கேள்விப்பட்டாலும் பரீக்ஷித் அதை ஆராய்ந்து சோதித்தபின்னரே ஏற்றுக்கொள்வான். அதாலேயே அவனுக்கு பரீக்ஷித் என்ற பெயர் மிகவும் பொருத்தம்.
இப்போது விநாச காலே விபரீத புத்தி என்று முனிவரைச் சோதிக்கும் எண்ணம் வந்துவிட்டது.
இவர் நிஜமாகவே தியானத்தில் இருக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று சந்தேகம் வந்தது.
எப்போதும் மேலோரோடு பழகி, சான்றோனாக விளங்குபவன், கர்பத்திலேயே பகவத் தரிசனம் பெற்றவன், புகழ் பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவன் பரீக்ஷித்.
அரசனே தவம் செய்பவர்களைக் காக்கவேண்டும். அவனே புத்தி தடுமாறி ஒரு காரியம் செய்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு செத்த பாம்பின் உருவில் கலியே கிடந்தான் போலும். அதை ஒரு அம்பினால் எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டான். அப்போதும் அவர் அசையவில்லை.
நிஜமாகவே தியானத்தில்தான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டு அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்துக் கிளம்பினான். அவர் நடிக்கவில்லை என்றுதான் தெரிந்துவிட்டதே
போகும்போது பாம்பை எடுத்துக் கீழே போட்டுவிட்டுப் போயிருக்கலாம். ஜடாமுடியும், மரவுரியும், ருத்ராக்ஷங்களும் அலங்கரிக்க, அந்த சமீகர் என்ற மஹரிஷியைப் பார்த்தால் பரமேஸ்வரன் என்று நினைத்தானோ, கழுத்தில் பாம்புதான் குறை. இருந்துவிட்டுப்போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பினான்.
சற்று நேரத்தில் சமீக மஹரிஷியின் புதல்வன் ச்ருங்கி என்ற சிறுவன் அங்கு வந்தான்.
தந்தையின் கழுத்தில் செத்தபாம்பைப் பார்த்ததும் வெகுண்டான். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று சுற்றுமுற்றும் தேடினான். ஒருவரும் காணவில்லை.
சிறுவனாக இருப்பினும் உபநயனம் ஆகியிருந்தது. காயத்ரி ஜபத்தின் பலனால் மஹா தேஜஸ்வியாய் இருந்தான். அவனுக்கு ஞான த்ருஷ்டியும் இருந்தது. கண்களை மூடி த்யானத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறிந்தான்.
சிறுவனாயிற்றே. தந்தைக்கொரு அவமானம் என்றதும் தாங்க முடியவில்லை. அவனிடம் தபோபலம் மிகுந்திருந்தது.
தபோதனர்களாலேயே நாடு செழிக்கிறது. வீட்டில் சோறு உண்ணும் நாய், எஜமானனையே கடிப்பதுபோல, மஹான்களின் தவத்தால் நாட்டை சுபீக்ஷமாக வைத்திருக்கும் அரசன், அவர்களைக் காக்காமல், தொல்லை கொடுப்பானா?
அரசனான நீ பலவான், என்று தானே இக்காரியம் செய்யத் துணிந்தாய்?
உன் அஸ்திரம் பெரிதா? இந்த அந்தணச் சிறுவனின் வஜ்ராயுதம் போன்ற வாக்கு பெரியதா? என்று பார்க்கலாமா?
செத்த பாம்பைத்தானே உன்னால் போடமுடிந்தது.
இதோ என் சாபம் 
ஓ பரீக்ஷித்தே
இன்றிலிருந்து ஏழாம் நாள், பாம்புகளிலேயே உயர்ந்ததும் தேவலோகத்தில் வசிப்பதுமான தக்ஷகன் என்ற பாம்பு கடித்து நீ இறக்கக் கடவாய்!
என்று சாபமிட்டான்.
சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த சமீகர், ச்ருங்கியின் முகத்தைப் பார்த்தார். சாபமிட்டுவிட்டதால், அவனது தேஜஸ் குறைந்திருந்தது.
புத்திசாலியான தபோதனர்கள் சாபமிட்டு தவத்தின் சக்தியைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தீங்கு நேரும்போது, இறைவனிடம் சரணாகதி செய்துவிட்டு அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால், பகவானால் சும்மா இருக்கமுடியாது. ஓடோடி வருவான் என்று தெரியும் அவர்களுக்கு.
இவ்விஷயத்தை ஏராளமான மஹான்களின் சரித்ரத்தில் காணலாம். விஸ்வாமித்திரரும் ஒவ்வொரு முறையும் தவத்தின் சக்தியை வெவ்வேறு விதமாக விரயம் செய்துவிட்டு மீண்டும் தவம் செய்து கொண்டிருந்தார். ஆனால், ஞானத்தை அடைந்ததும், தாடகையும், மாரீசனும், சுபாகுவும் எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தபோதும் சாபம் கொடுக்காமல், ராமனை அழைத்துவந்தார். தண்டகாரண்ய காட்டில் இருந்த முனிவர்களும் அவ்வாறே இருந்ததைக் காணலாம்.
ஞான த்ருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார் சமீகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment