Wednesday, June 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -24 பீஷ்ம ஸ்துதி


ஸூரியன் வடகிழக்கு திசையில் திரும்ப, உத்தராயண புண்ய காலம் துவங்குகிறது.
பீஷ்மர் என்ற யோகீஷ்வரர், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, விரும்பி ப்ரும்மச்சர்யத்தை ஏற்றவர். கங்கா மாதாவின் புதல்வர். அத்தனை விதமான தர்மங்களையும் அறிந்தவர். இப்போது யோக பலத்தால் சரீரத்தை விடப் போகிறார். சபரியின் மோக்ஷத்திற்கு ராமன் சாட்சியாக விளங்கியதைப் போல், இப்போதும், பகவான் சாட்சியாகவே விளங்குகிறான்.
அவர் கண்ணனைக் காண விரும்பினார் என்றாலும், கிளம்புவதற்கு முன்பாக அர்ஜுனனிடம், பீஷ்மரை தரிசனம் செய்துவிட்டு வரலாம் வா என்று சொல்லி அழைத்துக்கொண்டுவருகிறான்.
பகவானே காண விரும்பித் தேடி வரும் அளவுக்கு பீஷ்மர் பக்தியிலும் சிறந்து விளங்கினார்.
இப்போது, பீஷ்மர் கண்ணனைப் பார்த்து ப்ரார்த்தனை செய்கிறார்.
எந்தவிருப்பமும் இல்லாத என் மனத்தை, உயிர் துறக்கும் இந்நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணனான உன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன்.
நீ ஆத்மாராமனாக இருந்தபோதிலும் சிலசமயங்களில் லீலைக்காக உன் சக்தியான ப்ரக்ருதியை ஏற்று உலகைப் படைக்கிறாய்.
உன் திருமேனியழகு மூவுலகையும் ஈர்ப்பது. நீலமேக ஷ்யாமளன், சூரிய ஒளிபோல் மின்னும் பீதாம்பரம் தரித்தவன். சுருண்ட கேசம் முன்னெற்றியில் விழுந்து உன் தாமரையொத்த முகத்தில் விழுகிறது. அர்ஜுனனின் தோழன், உன்னிடம் எனக்கு பயன் கருதாத அன்பு உண்டாகட்டும்.
போரில், தூசுகளால் உடலும், முடியும் அழுக்கடைந்திருக்கும். முன்னெற்றியில் கேசம் அசைந்தாடும். வியர்வைத்துளிகள் முகத்தை அலங்கரிக்கும். பாவியான என் பாணங்கள் பட்டு கவசங்கள் பிளந்து உடலில் காயங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்தபோதும் நீ பேரழகனாகவே திகழ்ந்தாய். அந்தக்கோலத்தில் இருக்கும் உன்னிடம் எனக்கு பக்தி ஏற்படட்டும்.
தோழனான அர்ஜுனனின் சொல் கேட்டு, பாண்டவ கௌரவ சேனைகளின் நடுவே தேரை நிறுத்தி, சத்ரு சேனையின் உயிரைப் பார்வையாலேயே அபகரித்த உன்னிடம் எனக்கு பற்று ஏற்படட்டும்.
உறவினர்களைக் கொல்வதா என்று குற்ற உணர்ச்சியால் மயங்கிய அர்ஜுனனுக்கு பகவத் கீதை என்ற ஞானோபதேசத்தை வழங்கி 'நான் செய்கிறேன்' என்ற அகங்காரத்தை அழித்து அவனை ஊக்குவித்த பரமனான உன் திருவடிகளில் என் மனம் நிலைத்திருக்கட்டும்.
போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் சபதம் செய்திருந்தான் கண்ணன். அவனது சபதத்தை உடைத்து ஆயுதம் எடுக்கச் செய்வதாக பீஷ்மர் ஒரு சபதம் செய்தார். அதற்காக அம்புகளை மழையாக அர்ஜுனன்மீது பொழிந்தார். அர்ஜுனனைக் காக்க அத்தனை அம்புகளையும் தானே முன் வந்து வாங்கிக் கொண்டான் பகவான். ஒரு கட்டத்தில் பீஷ்மரைக் கட்டுப்படுத்த சக்ராயுதத்தை எடுக்க அவகாசம் இன்றி, பக்கத்தில் உடைந்து கிடந்த தேரின் சக்கரத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். அவ்வாறு கண்ணன் பீஷ்மரை நோக்கி சக்கரத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது அவனது உத்தரீயம் (மேலாடை) நழுவி தேர்த்தட்டில் விழுந்தது.
கவசமும் உடைபட்ட நிலையில், உத்தரீயமும் நழுவி, தன் மார்பழகை முழுமையாக பீஷ்மருக்குக் காட்டிக்கொண்டு ஓடிவந்தான்.
மேலும், அர்ஜுனன் மீதும் தேரின் மீதும் பல திவ்யாஸ்திரங்கள் ஏவப்பட்டிருந்தன. அர்ஜுனன்மீது அவை தாக்காமல் கண்ணன் காத்தான். ஆனால் தேரில் அவற்றின் வீரியம் இருந்தது. பகவான் தேரில் இருந்ததால் அவை தேரை அழிக்காமல் இருந்தன. கண்ணன் தேரை விட்டிறங்கினால், அர்ஜுனனுக்கு ஏற்கனவே ஏவப்பட்ட திவ்யாஸ்திரங்களின் வீரியத்தால் ஆபத்து நிகழலாம் என்றெண்ணி ரக்ஷையாக உத்தரீயத்தைத் தேர்த்தட்டில் விட்டான் போலும்.
மேலும் அது தன் இருக்கை. அர்ஜுனனுக்கு ஸாரத்தியம் செய்வது தன் உரிமை என்று நிலைநாட்ட, துண்டு போடுவது போல் போட்டுவிட்டுப் போனானோ..
அம்பு மழையிலிருந்து அர்ஜுனனைக் காக்க பீஷ்மரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே இருந்ததால், மேலாடை நழுவுவதைக்கூட கவனியாமல் ஓடினானோ
ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் ப்ரதிக்ஞையைக்கூட விட்டுவிட்டு, பீஷ்மரின் ப்ரதிக்ஞையைக் காக்க ஆயுதம் எடுத்தானோ..
தன் சபதத்தை விட பக்தனின் சபதம் முக்கியம் என்று நினைத்தானோ...
ஏழாம் நாள் போரில் இவ்வாறு ஓடிவந்த கண்ணனின் அழகில் என் மனம் ஈடுபடட்டும் என்கிறார் பீஷ்மர்.
அர்ஜுனனுடைய ரதத்தையே தன் குடும்பமாக எண்ணி சாட்டையும் கடிவாளமும் ஏந்தி தேரோட்டியாக அமர்ந்திருந்த கோலத்தைக் காண்பதே பெரும் பேறு. போரில் இறந்த அனைவருக்கும் சாரூப்ய முக்தி அளித்தானே. அந்த கண்ணனிடம் எனக்கு பற்று உண்டாகட்டும்.
யோகீஷ்வரரான பீஷ்மர், தன் அந்திம காலத்தில் இடைப் பெண்களான கோபிகளை நினைக்கிறார். எனில், கோபிகளின் பக்தி எத்தகையது?
அழகிய நடை, லீலைகள், புன்சிரிப்பு, கனிந்த பார்வை இவற்றால் கண்ணனிடம் ஈர்க்கப்பட்ட கோபியர், ராசலீலையில் மயங்கி அவனது லீலைகளை அனுகரணம் செய்து, தன்வயமானார்களே.. அவர்களை வணங்குகிறேன்.
அப்படிப்பட்ட பக்தி எனக்கும் ஏற்படட்டும். மறுபிறவி என்று ஒன்று எனக்கு ஏற்படுமாயின் ப்ருந்தாவனத்தில் ஒரு கோபியாக எனக்கு பிறவி அமையட்டும்.
ராஜஸூய யாகத்தில் முதல் மரியாதையை ஏற்பதற்காக வந்த பர்ந்தாமன் என் கண்முன் நிற்கிறாரே.
காற்று மூங்கில்களை உராயச்செய்து தீயை உண்டாக்கி, அம்மூங்கில் காட்டையே அழிக்கும். அதுபோல் சூதாட்டம் என்ற தீயால், அரக்கர்களை அழித்து பூபாரம் குறைத்த க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளில் என் மனத்தை இருத்தி இம்மானுட உடலை விட்டொழிக்கிறேன்.
ஒரே சூரியன் பல பாத்திரங்களில் உள்ள நீரில் ப்ரதிபலித்து பல சூரியன்களாகக் காட்சி தருகிறான். அதுபோல் கண்ணனும் ஒவ்வொரு ஜீவனின் ஹ்ருதயத்திலும் ப்ரதிபலித்து வெவ்வேறாகக் காட்சியளிறான். இவனை நான் காணப்பெற்றது பெரும் பாக்யம்
என்கிறார்.
இது மற்ற ஸ்துதிகளைப்போலன்றி தன் அனுபவத்தை வைத்து ஸ்துதி செய்கிறார். படிப்பைவிட அனுபூதி சிறந்ததல்லவா?
எனவே, எவ்வளவோ துதிகள் பகவானைக் குறித்து இருந்தபோதிலும், பீஷ்மர் செய்த ஸ்துதி மிகவும் சிறந்ததாகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.
பீஷ்மர் தன் மனம், உடல், வாக்கு அனைத்தையும் அடக்கி ஆன்மாவை க்ருஷ்ணனிடம் ஒடுங்கச் செய்து ஓய்வடைந்தார்.
அவருக்கு விதிப்படி ஈமக்கிரியைகளைச் செய்துவிட்டு தர்மர் சோகத்தில் மூழ்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

2 comments:

  1. என்ன புண்ணியம் செய்தேனோ.. இந்த பாகவதம் படிக்க கிடைத்ததற்கு

    ReplyDelete
  2. "கதோத்தரீய" விளக்கம் அற்புதம் தோழி ராதேக்ருஷ்ணா

    ReplyDelete