Wednesday, June 20, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் -17 வியாஸ நாரத ஸம்வாதம் - 3

நாரதர் தன் கதையைத் தானே சொல்லலானார்.

அம்மா ஆசை ஆசையாக ஸாது சேவை செய்தாள்.
அவர்கள் அதிகாலை 3 மணிக்கு ஏழு முறை சத்தமாக ஹரி ஹரி என்று உரக்கக் கூறிக்கொண்டு எழுவார்கள். பின்னர் நாமங்களைச் சொல்லிக்கொண்டே ஸ்நானம் செய்ய நதிக்குச் செல்வார்கள்.
தூக்கக் கலக்கத்தில் அம்மா தரதரவென்று என்னை இழுத்துக்கொண்டு போனாள்.
அங்கு சென்றதும் ஒரு மூலையாகப் பார்த்து மீண்டும் உறங்க ஆரம்பித்தேன்.
அம்மா வந்து தட்டி எழுப்பி,
ஸாதுக்கள் ஸந்நிதியில் தூங்காதே, எழுந்து உட்கார்
என்று உட்காரவைத்தாள்.
மறுநாள் அவர்கள் செல்லும்போது, சும்மா உட்கார முடியாமல், ஏதோ குச்சிகளை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்தேன்.

அம்மா வந்து,
ஸாதுக்கள் வரும் வழியில் இப்படிச் செய்யாதே. எழுந்து கையைக் கூப்பிக்கொண்டு நில்
என்று நிற்கவைத்துவிட்டுப்போனாள்.
மறுநாள் காலை,
அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பின்னாலேயே போய் வா
என்று அனுப்பினாள்.
மறுநாள் கேட்டாள்,
அவங்க பின்னால் போனியே, என்ன செய்தாங்க?
அவங்க நதியில் குளிச்சாங்கம்மா. ஏதேதோ மந்திரம் சொல்லிட்டே இருந்தாங்க.
சரி, அவங்க பின்னால் போய் அவங்க குளிச்ச தண்ணி எங்க வருதோ அந்த இடத்தில் நின்னு நீயும் ஒரு முழுக்கு போடு. நதி ஒன்னும் ஆழமில்லை.
என்றாள். அதையும் செய்தேன்.
இப்படியாக தினமும் ஸாதுகள் பின்னால் போவதும் வருவதுமாக என் நாள்கள் கழிந்தன.

அம்மா,
என்னோடு வந்து என்ன செய்யப்போற? இங்கேயே இரு
என்று என்னை விட்டுவிட்டு மற்ற வீடுகளுக்கெல்லாம் வேலை செய்யப்போவாள். வரும்போது அவர்கள் கொடுக்கும் பழையசோற்றைக் கொண்டு வந்து எனக்கும் கொடுத்து தானும் உண்பாள். மீண்டும் மாலை ஸாதுக்கள் அனுஷ்டானம் செய்வார்கள், அவர்கள் பின்னாலேயே போய் நானும் குளிப்பேன். ஏதேதோ பாடுவார்கள். தூரத்தில் அமர்ந்து நானும் அம்மாவும் கேட்போம். ஒன்றும் புரியாவிட்டாலும் கேட்க இனிமையாய் இருக்கும்.
அம்மா மாலையும் அங்கே சுத்தம் செய்து கோலம் போட்டுவிட்டு இரவு வீடு திரும்புவோம்.

ஒரு நாள் காலையில் போன அம்மா, மதியம் மூன்று மணியாகியும் வரவில்லை. ஐந்து வயதுச் சிறுவனான என்னால் பசி தாங்க முடியவில்லை. ஓ வென்று அழ ஆரம்பித்தேன்.
என் அழுகைச் சத்தம் கேட்டு ஒரு ஸாது அருகில் வந்தார். அவர்கள் மேல் படக்கூடாது, மரியாதையாய் இருக்கவேண்டும் என்று அம்மா சொல்லியிருந்ததால் சட்டென்று எழுந்து நின்றேன். அவர் என்னை கன்னத்தைப் பிடித்து, கண்ணீரைத்துடைத்து மனம் மயக்கும் புன்முறுவலோடு என்னைப் பார்த்து
ஏம்பா அழற?
பசிக்குது. அம்மாவைக் காணல.
நான் ஏதாவது குடுத்தா சாப்பிடறியா?
சரியென்று தலையசைக்க, அவர் உள்ளிருந்து ஒரு மந்தாரை இலையில் கொஞ்சம் உணவைக் கொண்டுவந்து கொடுத்தார்.
ஊர்மக்கள் ஸாதுக்களுக்கென்று பார்த்துப் பார்த்து விசேஷமாகச் சமைத்த உணவு. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து ருசி பார்க்காமல், ஏழு கவளம் உண்டபின், அப்படியே ப்ரசாதமாகக் கொண்டுபோய் விடுவார்கள். அன்று இன்னும் வந்து எடுத்துப்போகவில்லை போலும்.
அந்த உணவு மிகவும் சுவையாக இருந்தது. விசேஷமாய்ச் சமைத்ததால் அல்ல. சாதுக்களின் ப்ரசாதம் என்பதால். அது உச்சிஷ்டம் என்றோ, அதன் மகிமையோ எனக்கு அப்போது தெரியாது. பசிக்கு உணவென்று நினைத்தே உண்டேன்.
அவ்வளவுதான்!
அதன் பின் என் நிலைமை மாறிவிட்டது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தால் உள்ளிருந்து ஹரி ஹரி என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனந்தமாய் இருந்தது. வெகு நேரம் வரை மூடிய கண்களோடு அசையாமல் அமர்ந்து உள்ளிருந்து எழும் நாதத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன்.
ஸாதுக்களின் உச்சிஷ்டத்தால் எவ்வளவு நன்மை நேரும் என்று கணிக்கவும் முடியுமோ?
காதும் கேளாமல் வாயும் பேசாமல் இருந்த குழந்தை நாம ஸங்கீர்த்தனம் செய்யத் துவங்கியது நமது ஸ்ரீ போதேந்திராளின் உச்சிஷ்டத்தால் அன்றோ?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment