Saturday, March 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 226 பக்த சக்ரவர்த்தி

தான் மட்டுமல்லாது ஜீவகோடிகள் அனைத்தும் உய்யவேண்டும் என்று ப்ரஹலாதன் வேண்டியதைக் கேட்டு நரஹரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு குழந்தையா என்று அவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக, அதுவே ப்ரஹலாதனுக்கு பட்டாபிஷேகமாயிற்று.

பகவான் கூறலானார். அனைத்து நலன்களையும் பெற்ற குழந்தாய்! உன்னைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நீ விரும்பிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறேன்.

என்னை மகிழ்விக்காதவனுக்கு என் காட்சி இல்லை. என் தரிசனம் பெற்றபின் ஹ்ருதயத்தில் தாபங்களே இருக்கக்கூடாது. நன்மையை விரும்பும் பக்தர்கள் தங்களுடைய அனைத்துச் செயல்களாலும் என்னை மகிழ்விக்கின்றனர். நீ விரும்புவதைக் கேள்.
என்றார்.

பெரும் சாதகர்களும் கூட வரம் என்றால் மயங்குவார்கள். ஆனால், ப்ரஹலாதனோ பகவானே மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டும் எவ்வரத்தையும் விரும்பவில்லை.

சிறு குழந்தையானாலும், வரம் பெறுவது அன்பு மார்கத்தின் தடைக்கல் என்று உணர்ந்திருந்தான்‌.

எனவே, தெளிவாகச் சொன்னான்.

பகவானே! பிறந்தது முதலே இவ்வுலக இன்பங்கள் எதிலும் எனக்கு நாட்டமில்லை. ஆசைக்கூட்டங்களைக் கண்டு பயந்து அவற்றிலிருந்து விடுபடவே தங்களைச் சரணடைந்துள்ளேன். என்னை மீண்டும் ஆசை காட்டவேண்டாம்.

என்னைச் சோதிக்கத்தானே வரம் வேண்டுமா என்று கேட்கிறீர்கள். வரம் பெறுவது ஆசைதானே. எவ்வித ஆசையானாலும் அது பிறவிச் சுழலில் தள்ளிவிடும்.

எவன் தன் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள வரம் கேட்கிறானோ, அவன் பக்தனல்ல. வியாபாரி.

நான் பயன் கருதாத பக்தன். நீங்களும் பயன் கருதாத தலைவர். நம் இருவருக்கும் அன்பைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை. நீங்கள் வரம் கொடுக்க விரும்பினால், என் மனத்தில் இனி வரம் கேட்கும் எண்ணமே எழாமல் இருக்க வரம் தாருங்கள்.

என் மனத்தில் எப்போதும் ஒரே சீராக வீற்றிருங்கள். அழகிய சிங்கரான  தங்கள் நாமம் எப்போதும் என் நாவில் இருக்கட்டும். பரமாத்மாவான தங்களை வணங்குகிறேன். 
என்றான்.

பகவான் அவனைப் பார்த்து அயர்ந்துபோனார். அவனைக் கட்டி உச்சிமோந்து கூறலானார். 
உன்னைப் போன்ற பக்தர்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை. நீ என்னை வென்றுவிட்டாய். நீ விரும்பாவிட்டாலும்,  நானாக, உனக்கொரு வரம் தருகிறேன். 

இந்த மன்வந்தரம் முடியும்வரை மட்டும் என் மகிழ்ச்சிக்காக இவ்வுலகில் அசுரர் தலைவனாக இருந்து அனைத்து இன்பங்களையும் அனுபவி. வேள்வியைத் திருமேனியாகக் கொண்ட நான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறேன். 

என்னை உன் ஹ்ருதயத்தில் நினைத்துக்கொண்டு ‌என்னைப் பற்றிய கதைகளைக் கேட்டுக்கொண்டிரு. எல்லா செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணம்‌ செய். அப்படிச் செய்வதால் உன் கர்மங்களின் பலன் அழியும். 

இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் உன் புண்ணிய பலனைக் கரைத்துக்கொள். பற்றற்று கர்மாக்களைச் செய்வதால் பாவபலனை அழித்துக்கொள். காலத்தால் உன் ப்ராரப்த உடலை விட்டு அதன் பின் என்னை வந்து அடையலாம். 

உன்னால் போற்றப்பட்ட எனது இந்த துதியைச் சொல்பவன் அனைத்து கர்மத்தளைகணின்றும் விடுபடுவான் என்றார்.

ப்ரஹலாதன் மீண்டும் கூறினான்.

பெருமானே! என் தந்தை தங்களின் ஈசுவரத் தன்மையை அறியமாட்டார். அவர் தங்களைப் பலவாறு நிந்தித்திருக்கிறார். இந்த விஷ்ணுதான் என் தம்பியைக் கொன்றவன் என்ற பொய்யான நம்பிக்கையில் கோபம் கொண்டு எனக்கும் பல தீங்குகள் புரிந்தார். அவர் செய்த பாவங்களுக்கு எல்லையே இல்லைதான்.

ஆனாலும், தங்கள் திருக்கரம் பட்டதுமே அவை பொசுங்கியிருக்கும்  என்பதிலும் ஐயமில்லை. எனினும் என் தந்தை தூய்மை பெறவேண்டும் என்று பேதையான என் உள்ளம் விரும்புகிறது. அதற்காக அருள் செய்யுங்கள் என்றான்.

பகவான், குழந்தையைத் தன் மடியில் இருந்திக்கொண்டு அவன் தலையைத் தடவிக்கொண்டே பதிலுரைத்தார்.

பவித்ரமானவனே! நீ ஒருவன் இந்தத் திருமாளிகையில் பிறந்ததாலேயே உன் தந்தையும் மற்றும் அவனது முன்னோரின் இருபத்தோரு தலைமுறைகளும், உனக்குப் பினால் வரும் இருபத்தோரு தலைமுறைகளும் பரிசுத்தமாகிவிட்டனர்.

சாதுக்களும், அனுஷ்டானங்களை விடாமல் பின்பற்றுபவர்களும், சமதர்சிகளும், அடக்கமுடையவர்களுமான என் அடியார்கள் எங்கெல்லாம்‌ இருக்கிறார்களோ, அவ்விடங்களும், அங்கு வாழும் உயிர்களும் தூய்மை பெறுகின்றன.

உன்னை முன்னோடியாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் என் அடியார். நீயே பக்தர்கள் அனைவர்க்கும் ஆதர்ச புருஷனாவாய்! 

என்னைத் தீண்டியதாலேயே உன் தந்தை புனிதமாகி விட்டாலும், அவனுக்கான ஈமச் சடங்குகளை விடாமல் செய். உன்னைப் போன்ற நன்மக்களால் செய்யப்படும் கர்மாக்களாலேயே முன்னோர் நல்லுலகங்களை அடைகின்றனர்.

உன் தந்தையின் சிங்காதனத்தை ஏற்றுக்கொள். என்னை மனத்தில் நிறுத்தி எனக்கு அர்ப்பணமாக இந்த ராஜ்யபாரத்தை வகிப்பாய்! 
என்று கூறினார்.

நிஜமான சிங்கத்தின் மடியில் அமர்ந்து, அவரது தாமரைக் கரமே கிரீடமாய், பகவானின் ஆனந்தக் கண்ணீரே அபிஷேகமாய் ஏற்று, ப்ரஹலாதன் ஹரி பக்தர்கள் அனைவர்க்கும் சக்கரவர்த்தியாக பதவியேற்றான்.  குருவை விஞ்சிய சிஷ்யனாக இன்றளவும் விளங்குகிறான்.

ப்ரஹலாத நாரத பராசர புண்டலீக
வ்யாஸ அம்பாரீஷ சுக சௌனக பீஷ்மதால்ப்யான்|
ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி||

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment